குறள் விருத்தம் – திருக்குறள் பொருள் விளக்கம்

அறத்துப்பால் – கடவுள் வாழ்த்து

குறள்பா – 1 :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அகரம் என்னும் ஓரெழுத்தாம்
   அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்
திகழும் எழுத்துத் திரட்கெல்லாம் 
   திலகம் அனைய முதலெழுத்தாம்
புகழும் அகர எழுத்தினைப்போல்
   புவிக்கோர் இறைவன் முதலாவான்
அகமும் புறமும் ஆள்பவனாம்
   அன்னை தந்தை ஆனவனாம். 
குறள்பா – 2 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
ஞானக் கலைகள் பயின்றிடினும்
   நயமார் நூல்கள் நவின்றிடினும்
வானம் அறிந்த(து) அனைத்தினையும்
   வகையோ(டு) அறிந்து தெளிந்திடினும்
தானோர் தூய அறிவுருவன் 
   தலைவன் மலர்த்தாள் தொழுதேத்தி 
ஆனா அன்பால் உருகாரேல் 
   அறிவின் பயனைப் பெறுவாரோ?

(ஆனா = நீங்காத)

குறள்பா – 3 :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அருள்கொண் டாடும் அடியார்கள்
   அன்பின் நினைந்த அப்போதே
விரியும் மனமாம் மலர்தன்னில்
   விரைவின் மேவி இடங்கொள்வான்
ஒருநற் கதியாம் அவன்தாளில்
   ஒன்றிக் கலக்கும் உணர்வுடையார்
திருவில் பொலியும் வாழ்வுறுவார்
   செழுவீட்(டு) உலகும் பெறுவாரே.

(மேவி = விரும்பி அடைந்து; திரு = செல்வம்; செழுவீட்டு உலகம் = மோட்சம்)

குறள்பா – 4 :
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
வேண்டும் எனவொன்(று) இல்லாதான்
   விருப்புற்(று) எதையும் நண்ணாதான்
வேண்டா வெனவும் தள்ளாதான் 
   வெறுப்பொன்(று) அகத்தில் கொள்ளாதான்
மாண்புற்(று) ஒளிரும் குணமுடையான்
   மலர்த்தாள் பணியும் மனமுடையார்
தீண்டும் துயரற்(று) என்றென்றும்
   சிந்தை தெளிந்து வாழ்வாரே.

(நண்ணாதான் = நாடாதவன்; மலர்த்தாள் = மலர் போன்ற திருவடிகள்)

குறள்பா – 5 :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அறிவை மயக்கி இருள்பெருக்கி
   அழுத்தும் தீய வினைப்பலனும்
பிறவிச் சுழலில் தளைப்படுத்திப் 
    பிணைக்கும் தூய வினைப்பலனும்
அறவே விலக அகமகிழ்வார்
    அறிவும் சிறக்க நலமுறுவார்
இறவாப் புகழ்சேர் இறையருளை
    எண்ணித் துதிக்கும் மனத்தவரே. 
குறள்பா – 6 :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
விழிவாய் செவிமூக்(கு) உடலென்னும்
    வெல்லற்(கு) அரிய புலனைந்தின்
வழியை அறிவாம் தாழ்கொளுவி
    மறித்துச் சிறக்கும் நலமுடையான்
ஒழிவில் உண்மை ஒளியோங்கும்
    ஒருநல் தலைவன் அவன்காட்டும்
வழுவில் நெறியே மருவிடுவார்
    மண்ணில் நெடுநாள் வாழ்குவரே!

(தாழ்கொளுவி = தாழ்ப்பாளைப் பூட்டி; மறித்து = அடைத்து; ஒழிவில் = நீங்காத; வழுவில் = குற்றமற்ற)

குறள்பா – 7 :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
நிகரென்(று) ஒருவர் இல்லாதான்
   நினைவால் உணர ஒண்ணாதான்
புகழில் மிகுநர் இல்லாதான்
   பொருவற்(று) ஒளிரும் அன்பாவான்
புகலென் பவர்க்கோர் சார்வாவான்
   பொற்றாள் வணங்கி னார்க்கல்லால்
மிகுவெந் துயரம் வாட்டாமல்
   வெல்லும் திறனும் வாயாதே.

(உணர ஒண்ணாதான் = உணர முடியாதவன்; மிகுநர் = உயர்ந்தவர்; பொருவற்று = ஒப்பற்று; புகல் = அடைக்கலம்; பொற்றாள் = பொன் தாள் = பொன்போன்ற திருவடிகள்; வாயாதே = வாய்க்காதே)

குறள்பா – 8 :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
தருமம் எனுமோர் தடங்கடலின்
    தனிப்பே ருருவாம் ஒருதலைவன்
அருளைப் பொழியும் அருந்தவத்தோன்
    அகிலம் புரந்(து)ஓர் அரசிருப்போன்
புரையில் மலர்நேர் திருவடிகள்
    புணையென்(று) அடையும் அடியவர்க்கே
திரைநின்(று) அலைக்கும் பொருளின்பச்
   சுழலைக் கடக்கும் திறன்வருமே.

(புரையில்= குற்றமற்ற; மலர் நேர் = மலர் போன்ற; புணை = தெப்பம்)

குறள்பா – 9 :
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
குணமொன்(று) இலதாம் உணர்வில்லாக்
    கோலப் பதுமை அதுபோல
அணிவா யொடுகண் செவிமூக்கும்
    அறிவற் றிருந்தால் நலமுண்டோ?
குணமோர் எட்டும் உடையான்றன்
    குரைசே வடியே சரணென்று
கணம்எப் பொழுதும் தொழுதேத்தக்
    கருதாத் தலையால் பயனுண்டோ?

(பதுமை = பொம்மை; குரை சேவடி = ஒலிக்கின்ற கழல் அணிந்த சிவந்த திருவடிகள்)

குறள்பா – 10 :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார். 
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
நவையே பெருக்கி நலிவுறுத்தி 
    நசையால் உளத்தைத் தளைப்படுத்தி
அவமே விளைக்கும் பிறப்பிறப்பாம் 
    அலைசேர் கடலும் கடந்திடுவார் 
புவிகால் முதலாம் பூதமெலாம் 
    பொலிவார்ந்(து) ஒளிரும் தனிமுதல்வன் 
அவியாப் புகழ்சேர் அடியிணையே 
     அருமாத் துணையென்(று) அணைந்தவரே.  

(நவை = குற்றம்; நசை = பற்று; அவம் = தீமை; கால் = காற்று; அவியா = அழியாத; அணைந்தவர் = சேர்ந்தவர்)

Leave a Reply