மனம் வாடித் துன்பம் மிக உழன்று

தேடிச் சோறுநிதந் தின்று — பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து

          – மகாகவி பாரதியார்

‘மனம் வாடித் துன்பம் மிக உழன்று’ – இந்த வார்த்தைகள், மனக்கவலை என்னும் சுழலில் சிக்கிச் சுழன்று தவிப்பவர்களைப் பார்த்து நெஞ்சம் வாடும் ஒரு மகாகவிஞனின் மனக்குமுறல்; எதற்கெடுத்தாலும் பதைபதைத்து நெஞ்சம் துடிதுடித்துத் துயரக் கடலில் ஆழும் மனிதர்களின் இழிநிலையைக் கண்டு வெடிக்கும் வார்த்தைச் சிதறல்; அஞ்சி அஞ்சி சாகும் அடிமைத்தனத்தை ஒழிக்கப் புறப்பட்ட அக்கினிக் குஞ்சு; உலகம் யாவையும் அமுதமெனப் பார்க்கும் வேத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வழிகாட்டும் மணிமொழிகள்.

இத்தகைய ஆற்றல் மிகுந்த வார்த்தைகளின் அர்த்தத்தை இப்பதிவில் ஆராய்ந்து நோக்குவோம்.

விளக்கவுரை

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பயிர் வாடத் தானும் வாடி நெஞ்சம் நெகிழப் பாடுவார் வள்ளலார். வள்ளல் பெருமான் காட்டும் இதே பரிவையும் ஜீவகாருண்யத்தையும் பாரதியின் கவிதைகள் பலவற்றில் காணலாம்.

‘கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
பரிதவித் தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே -இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே’

என்று நெஞ்சு பொறுக்காமல் கொந்தளிக்கும் ஒரு கவிதை.

பீஜித் தீவில் இந்தியர்கள் அடிமைகளாகப் படும் துயரத்தைக் கண்டு ‘கரும்புத் தோட்டத்திலே – அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே!’ என்று மனம் குமுறும் மற்றொரு கவிதை.

பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தும் வள்ளலாரும் பாரதியும் படும் மனத்துயரம் புனிதமானது; தன்னலமற்றது. ஆனால், அறியாமையால் ‘மனம் வாடித் துன்பம் மிக உழன்று’ தவிக்கும் மக்கள் படும் வேதனையோ ‘தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ் சிறு கதைகள் பேசி’ பொழுதை வீணாக்குவதால் ஏற்பட்ட துயரம்; ஆடுகள் போலத் தாவித் தாவிப் பொருள்களைத் தேடுவதால் உண்டான துன்பம்; செய்யும் செயலில் ஒரு சிறிய தடங்கல் வந்தாலும் அதற்கு அஞ்சித் தடுமாறுவதால் பிறக்கும் வருத்தம்.

தாழும் உள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர்

இவ்வாறு ஆசையும், மடமையும், அச்சமும் பேய்களாகப் பிடித்தாட்ட மனம் வாடுபவர்களைத் ‘தாழும் உள்ளத்தர்’ என்கிறான் பாரதி. இவர்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் போல் காணப்பட்டாலும் எண்ணத்தாலும் செயலாலும் விலங்குகளைப் போன்றவர்களே என்பதால் ‘ஆடுபோல் தாவுவர்’ என்றான். ‘உடல் உறுப்புகள் அமைந்து விட்டாலே ஒருவன் மனிதனாகி விடமுடியாது. பண்பாகிய ஒழுக்கமில்லையென்றால் அவன் மனிதனாகமாட்டான்’ என்று சொல்லும் வள்ளுவர் மொழியையும் இங்கு ஒப்பு நோக்கலாம்:

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

திருக்குறள்

‘உழல்’ என்னும் தமிழ்ச்சொல்லுக்கு ‘அலைதல்’ , ‘நிலைகெடுதல்’, ‘தடுமாறுதல்’ , ‘சுழலுதல்’ என்று பல பொருள்கள் உள்ளன. மன உறுதி இழந்து துயர்க்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் பேதை மனிதர் படும் கலக்கத்தையே ‘மிக உழலுதல்’ என்று சொல்கிறான். இந்த ‘நிலைகெட்ட மாந்தர்’ தாம் முன்னர் செய்த மடச்செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து, பட்ட துயரத்தையே மறுபடியும் பட்டு, துன்பச்சுழலில் மாட்டிக் கொண்டும் உழலும் அவல நிலையைக் கண்டு வாடுகிறான் பாரதி.

சரி, இந்த மனத்துயரைத் தீர்க்க மருந்து தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதுபோல் பாரதி தந்த ஆத்திசூடியின் முதல் வாசகம் அமைந்துள்ளது. ‘அச்சம் தவிர்!’. எல்லா விதமான மனத்துயருக்கும் மூலக் காரணம் பயமே ஆகும். அதனால், முதலில் பயத்தை விடவேண்டும். பயமெனும் பேய்தனைத் துணிவுடன் அடித்து விரட்டியவர்களுக்கு இந்த உலகமெல்லாம் அமுதமாகத் தெரியும்; துன்பமும் துயரும் மறையும். இந்தக் கருத்தைத் தன் வாழ்வில் உறுதியாகக் கடைபிடித்த பாரதி, ‘கோவிலுக்குச் செல்வதாலும் பூசை செய்வதாலும் ஒருவன் பக்திமான் ஆகிவிடமுடியாது; எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வ பக்திக்கு அடையாளம்’ என்றும் கருதி வாழ்ந்தான். ‘வீணாக அஞ்சுவதில் பயனில்லை; இவ்வுலகம் நம்மிடம் கருணையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லித் தெய்வபக்தி இல்லாதவர்களும் தைரியமாக வாழ ஊக்கமொழி அளித்த மகாமனிதன் பாரதி.

துன்பம் நெருங்கி வந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

பாப்பாப் பாட்டின் இந்த எளிய வரிகளில் எத்தனை அரிய பொருள் அடங்கியுள்ளது! ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்று தெய்வத்திடம் பக்தி வைத்தால் துன்பமெல்லாம் போய்விடும் என்னும் கீதையின் மொழியைக் குழந்தைகளுக்கும் புரியுமாறு சொல்லும் ஆற்றல் பாரதிக்கே உண்டு. ‘மரத்தை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிடச் செய்வான்; சிரத்தை உடையது தெய்வம்’ என்று சொல்லி ‘அன்பு செய்யும் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருங்கள்; மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்’ என்று உறுதியுடன் சொன்ன தெய்வக் கவிஞன் பாரதி.

பயமென்னும் திரை விலகினால் அன்பு என்னும் ஒளி தானே வெளிப்படும். அதேபோல், உள்ளத்தில் அன்பின் ஒளி உண்டானால், பயம் என்னும் திரை விலகிப் போகும். பிறருடைய துன்பத்தைக் கண்டு நெஞ்சம் உருகும்போது, அதன் முன் நம்முடைய துன்பம் பொருளற்று, துச்சப்பட்டுப் போகின்றது. இந்த அன்பின் சக்தியினையே இந்த அற்புதமான பாடல் வரிகளில் நமக்கு உணர்த்துகிறான் பாரதி:

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பின் அழியுமடீ! – கிளியே – அன்புக்கு அழிவில்லைகாண்!

‘காதல் இங்கே உண்டாயில் கவலையில்லை’ என்று காணும் பாரதி, அன்பையும் இன்பத்தையும் வெவ்வேறாகப் பாரக்கவில்லை. அன்பு உண்டாயின் அந்த இதயத்தில் என்றும் இன்பம் நிலைத்திருக்கும். இந்தக் கருத்தினை வலியுறுத்துவதுபோல், ‘ஜகத் சித்திரம்’ என்னும் நாடகத்தில், நாகணவாய்ப் பறவை சொல்வதாக இந்த வசனத்தை அமைக்கிறான்:

‘மனிதர்களுக்குள் இருப்பதைக்காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்!’

‘கவலைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால் இந்த உலக வாழ்விலேயே நாம் மோட்சத்தை (மன-விடுதலையை) அடையலாம்’ என்னும் வேதமொழியை உலகுக்குச் சொல்லி ‘கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு!’ என்று முழங்கியவன் பாரதி. கவலையை அழிக்க அருமருந்தாக அவன் காட்டிய அச்சமின்மை, அன்பு காட்டுதல், இன்புற்று இருத்தல் என்ற மூன்றையும் நாம் கடைபிடிக்கவேண்டுமானால் முக்கியமான இரண்டை விடவேண்டும்: ஒன்று போனதை நினைத்து புலம்புவது, மற்றொன்று வருங்காலம் என்னாகுமோ என்று எண்ணி ஏங்குவது.

சென்றது இனி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்று அழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்!

என்று அறிவுறுத்தி, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் நினைப்பே நம்மை இன்புற்று வாழ வைக்க வல்லது என்பதைத் தெளிவுபட மொழிகின்றான்.

‘எப்பொழுதும் கவலையிலே இணங்கிநிற்பான் பாவி!’ என்று கவலைப்படுவதையும் ஒரு பாவச்செயலாகக் கருதும் பாரதி, இன்பம்-துன்பம்-வெறுமை இவை மூன்றில் எது வந்தாலும் களிப்போடு இருந்தால் அதுவே முக்திநிலையாகும் என்றும் நமக்கு உணர்த்துகிறான்.

‘சிதையா நெஞ்சுகொள்’, ‘துன்பம் மறந்திடு’, ‘நன்று கருது’ என்னும் நல்லுரைகளைக் கேளாமல் மக்கள் மனம் வாடி வீணே மடிகின்றனரே என்ற மன வேதனையால் எழுந்த கவிதையே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்பதை ‘மனம் வாடி மிக உழன்று’ என்னும் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

Leave a Reply