மணிவாசகர், மணிமொழியார், திருவாதவூரர், ஆளுடைய அடிகள் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகர் குறிப்பு | |
---|---|
நாடு | பாண்டிய நாடு |
பிறந்த ஊர் | திருவாதவூர் |
இயற்பெயர் | வாதவூரர் |
பாடிய திருமுறை | எட்டாம் திருமுறை |
பாடிய நூல்கள் | திருவாசகம், திருக்கோவையார் |
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில், வைகையாறு பாயும் வாதவூரில், அந்தணர் குலத்தில் பிறந்தார். அவரது தாய் தந்தையர் அவருக்கு ‘வாதவூரன்’ என்று பெயரிட்டு அழைத்தனர்.
வாதவூரர் வேதம் முதலிய எல்லாக் கலைகளையும் கற்றுக் குறைவற்ற அறிவுடன் விளங்கினார். பதினாறு வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளாங்கிய அவரது புகழ் நாடெங்கும் பரவியது. அவரது புகழைக் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் தமது மந்திரிகளுக்கெல்லாம் அவரைத் தலைவன் ஆக்கினான். வாதவூரரும், யாவரும் மகிழுமாறு நடு நிலைமை தவறாமல் நீதியை நிலைநாட்டிக் குடிகளைக் காத்து வந்தார். அவரது சேவையைக் கண்டு மனம் நிறைந்த மன்னன் அவருக்குத் ‘தென்னவன் பிரமராயன்’ என்னும் பட்டத்தைச் சூட்டி மகிழ்னான்.
இவ்வாறு சிலகாலம் கழிந்த பின்னர், ஞானநூல்களைக் கற்றுணார்ந்த பிரமராயரின் மனத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. நிரந்தரமில்லாத இவ்வுலக இன்பம் பொய் என்றும், சிவபெருமானுடைய திருவடி இன்பமே மெய்யென்றும் அவருக்குத் தோன்றியது. அதுமுதல், வாதவூரடிகள் சிவபெருமானுடைய திருவடிகளை அடைவதற்குரிய முயற்சியைத் தீவிரமாகச் செய்துவந்தார். அறிஞர்களுடன் கலந்து வேதாகமங்களின் பொருளை எல்லாம் ஆராய்ச்சி செய்து நன்னெறியை அறிந்துகொள்ள முயன்றார். கடைசியில், கடவுளைக் கல்வி கேள்விகளால் காண முடியாது என்றும் நம்மை ஏற்றுக்கொண்டு கடவுளோடு சேர்ப்பிப்பவன் ஞான குருவே என்றும் சிந்தை தெளிவு பெற்றார். அதனால், அந்த ஞான குருவை தேடிப் பல இடங்களுக்குப் பயணித்தார்.
அப்போது ஒருநாள், சோழநாட்டைச் சேர்ந்த கீழ்க்கடற்கரைக்குச் சென்று மேன்மை பொருந்திய குதிரைகளை வாங்கி வரும்படி பிரமராயருக்குக் கட்டளையிட்டான் பாண்டிய மன்னன். வாதவூரரும் அத்தகைய குதிரைகளை வாங்கி வரும் பொருட்டு திருப்பெருந்துறை என்னும் பதியைச் சென்றடைந்தார்.
வாரவூரடிகளுடைய அன்பை அறிந்த சிவபெருமான், அவரை ஆட்கொள்ளக் கருணை கூர்ந்து, ஓர் அந்தணர் வடிவத்தோடு அடியவர்கள் பலர் சூழத் திருப்பெருந்துறையில் கோயிலுக்கருகில் ஒரு குருந்த மரத்தடியில் எழுந்தருளியிருந்தான்.
குருந்தடியில் எழுந்தருளியிருந்த சிவகுருவைக் கண்ட மாணிக்கவாசகர் பேருவகை பொங்க அப்பெரியவரின் அருகில் சென்று அடி பணிந்து நின்று ‘என்னையும் ஆட்கொண்டு அருளவேண்டும்’ என்று வேண்டினார். அவரை ஆட்கொள்ளும் பொருட்டே அங்கு எழுந்தருளியிருந்த ஆண்டவனும் அவரை அருட்கண்ணால் நோக்கி, அவரை அருகே அழைத்து ஞானோபதேசம் செய்தான். இறைவன் தான் உபதேசித்த அருள் மொழியால் வாதவூரரைப் பரிசுத்தப் படுத்திப் பரிபூரண ஞானத்தையும் அருளினான். ஈசனின் அருள்பெற்று உய்ந்த வாதவூரரும், தொழுத கையும் அழுத கண்ணும் உடையவராகப் பெருமானைப் பலமுறை வலம்வந்துப் பணிந்து, தாம் அணிந்திருந்த ஆபரணங்களையும் விலை இயர்ந்த உடைகளையும் களைந்து, கோவண உடை தரித்தார்.
அப்போது வாதவூரருக்குத் தம்மை அறியாமலேயே இறைவனைப் பாடவேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. அவர் உடனே பழுதிலாச் சொற்களால் பரமனைப் பாடினார். அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் ‘மாணிக்க வாசகன்’ என்னும் திருநாமத்தை அவருக்குத் தந்தான்; அவரைச் சிலநாள் திருப்பெருந்துறையிலேயே தங்கித் திருப்பணி செய்யவும் கட்டளையிட்டு மறைந்தருளினான்.
சிவபெருமான் மறைந்ததைக் கண்ட மாணிக்கவாசகர், தாயைப் பிரிந்த சேய்போல் பெருந்துயரில் ஆழ்ந்தார். அப்போது, அவரோடு வந்திருந்த அரசனின் வேலையாட்கள் அவர் குதிரை வாங்க வந்த பணியை நினைவுபடுத்தினர். அவரும் குதிரைகளை ஒரு மாதத்திற்குள் அனுப்பிவைப்பதாக அரசனிடம் அறிவிக்கச் சொன்னார். அவ்வேலையாட்களும் அவ்வாறே அரசனிடம் அறிவிக்க, அதுகேட்டு மனம் சலித்த பாண்டியன் மாணிக்கவாசகர் சொல்லி அனுப்பிய நாளை எதிர்பார்த்திருந்தான்.
மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளை எல்லாம் திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்து வந்தார். அப்போது வாதவூரர் சொல்லியனுப்பி ஒரு மாதம் கழிந்தும் குதிரைகள் வந்து சேராததைக் கண்டு வெகுண்ட பாண்டியமன்னன் கடுமையான வார்த்தைகளை எழுதி அவருக்கு ஓலை அனுப்பிக் கேட்டான். அந்த ஓலையைக் கண்ட வாதவூரர் இறைவனிடத்தில் முறையிட்டார்.
ஈசன் அன்றிரவு அவர் கனவில் வந்து “நாமே நல்ல குதிரைகளுடன் வருகிறோம். நீ முன்னர்ச் சென்று, ஆவணிமாதம் மூலநாளில் குதிரைகள் வந்துசேரும் என்று கூறுவாயாக” என்று அறிவித்து மறைந்தான். மாணிக்கவாசகரும் அவ்வாறே பாண்டியமன்னனிடம் சென்று கூறினார். பாண்டிய மன்னனும் தான் ஓலை எழுதி அனுப்பியதற்கு மன்னிப்பு கேட்டு அவரை மீண்டும் வரவேற்றான். பின்னர் அம்மன்னன் பெருந்துறையில் குதிரைகள் இருக்கின்றனவா என்று அறிந்து வரத் தனது தூதுவரை அங்கு அனுப்பினான். தூதுவர்களும் பெருந்துறையில் எங்குத் தேடியும் குதிரைகள் இல்லாததால் திரும்பி வந்து மன்னனுக்கு அதை அறிவித்தார்கள். அதைக் கேட்டுச் சினம் கொண்ட அரசன், மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்து சித்திரவதைக்கு உட்படுத்தினான். அந்தக் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட்டார். அவர்மீது இரக்கம் கொண்ட இறைவன் அவரைச் சிறையிலிருந்து நீக்கத் திருவுள்ளம் கொண்டான்.
பிரமராயருக்கு முன்னர் அறிவித்த வண்ணம், குதிரைகளைக் கொண்டுவர எண்ணம் கொண்டு, நரிகளையெல்லாம் குதிரைகளாக்கினான் இறைவன். சிவகணங்களையெல்லாம் அக்குதிரைகளை நடத்தும் சேவகர்களாகவும் ஆக்கினான். சிவபெருமான் குதிரை வியாபாரியைப்போல் வேடம் தாங்கி வெள்ளைக் குதிரைமீது எழுந்தருளி மதுரை நகரை நோக்கி விரைந்தான்.
அக்குதிரைக் கூட்டம் வருவதை அறிந்த அரசன், தான் செய்தது குற்றம் என்று உணர்ந்து, வாதவூரரைச் சிறையிலிருந்து விடுவித்து, அரண்மனைக்கு வரும்படி அழைத்தான். குதிரை வர்த்தகனிடமிருந்து பரிகளைப் பெற்றுக்கொண்ட அரசன், வாரவூரருக்குப் பரிசுகள் கொடுத்தனுப்பினான். பிறகு அரசனுடைய வேலைக்காரர்கள் குதிரைகளைக் கொண்டுபோய் கட்டுத்தறிகளில் கட்டினார்கள்.
அன்று இரவில் இறைவன் திருவிளையாட்டால் குதிரைகள் எல்லாம் முன்போல் நரிகளாக மாறின; தம்மைக் கட்டுத்தறியிலிருந்து விடுவித்துக் கொண்டு வீதிதோறும் ஓடின. இதை அறிந்த குதிரை வீரர்கள் அரசனிடம் சென்றுத் தெரிவித்தார்கள். அதுகேட்ட பாண்டியன் சினம் கொண்டு வாதவூரரை வரவழைத்து மாயச்செய்கைகள் செய்ததற்காக அவரைத் தண்டித்து மீண்டும் சிறையிலடைத்தான். ஈசனும் அடியவருக்கு நேர்ந்த தீங்கினைக் கண்டு அவரது துன்பத்தை நீக்கிப் பாண்டியனுக்கும் பாடம் புகட்டுவதற்காக, வைகை ஆறு பெருகும் படிச் செய்தான்.
ஆற்றுநீர் பெருகுவதைக் கண்ட அரசன், அதற்கு அணை போட்டு நிறுத்துமாறு தன் அமைச்சர்களுக்கு ஆணையிட்டான். அமைச்சர்களும் மதுரை மாநகரின் குடிமக்கள் அனைவரும் வந்து வைகைக் கரையை உயர்த்த வேண்டுமென்று அறிவித்தார்கள். அப்போது பிட்டு விற்கும் தொழிலை மேற்கொண்டு வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் பெயருள்ள ஒரு மூதாட்டி தன் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் சிவபெருமானிடம் வேண்டினாள். வந்தியின் வேண்டுதலுக்கு இரங்கிய இறைவன் தானே கூலியாளாக வேடம் தரித்து வந்தான். வந்தியின் பிட்டைத் தனக்குக் கூலியாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டு வந்தியின் பொருட்டுக் கரையை அடைக்கக் கிளம்பினான்.
கரையை அடைக்க வந்த ஈசன், மண்ணை வெட்டிக் கூடையில் இட்டுக் கூத்தாடி இசைபாடி திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்தான். அதனால், வந்தியின் கரை மட்டும் அடைபடாமல் இருந்தது. அதனால் கோபம் கொண்ட பாண்டியன் தன் கையில் இருந்த பொற்பிரம்பினால் வந்தியின் கூலியாளாய் வந்த சிவபெருமானுடைய முதுகில் அடித்தான். அப்போது இறைவன் தன் தலைமேல் இருந்த கூடையை கரை உடைப்பில் எறிந்து மறைந்தான். அந்தக் கரை மலைபோல் உயர்ந்தது. அதே கணத்திலேயே, எம்பெருமான் மீது பட்ட அடி எல்லா உயிர்கள் மீதும் பட்டது. தான் அடித்த அடி தன் மீதும் பட்டதைக் கண்டுத் திகைத்திருந்த பாண்டியனுக்கு அவன் செய்த குற்றத்தை உணர்த்தும்படி சிவபெருமான் அசரீரியாக வந்து இவ்வாறு மொழிந்தான் : “ பாண்டியனே! நீ கொடுத்தனுப்பிய பொருளை எல்லாம் நமக்காகவே செலவிட்டார் வாதவூரர். நீ மாணிக்கவாசகரைப் பரிகளைத் தரும்படி வருத்தியதால் தான் நாம் நரிகளைப் பரிகளாக்கி மீண்டும் அவற்றை நரிகளாக்கினோம்; வைகை ஆற்றையும் பெருகச் செய்தோம். இனியாவது மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்து வாழ்வாயாக”.
இறைவன் இவ்வாறு மொழிந்ததும், அரசன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து மாணிக்கவாசகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்புக் கேட்டான். அரசனை மன்னித்து விடைபெற்ற வாதவூர் அடிகள் தவவேடம் தாங்கித் திருப்பெருந்துறைக்கு எழுந்தருளினார்.
திருப்பெருந்துறையில் சிலகாலம் இறைப்பணி செய்தருளிய மாணிக்கவாசகர், சிவபெருமான் எழுந்தருளியுள்ள பிற தலங்களையும் வணங்கி வழிபட்டார். பின்னர், சிதம்பரத்தை அடைந்து, சபாபதியை வணங்கிப் பரமனுக்குப் பாமாலைகள் பல சூட்டி வந்தார்.
அச்சமயம் ஈழத்தை ஆண்ட அரசன் சிதம்பரத்தின் பெருமையைப் பற்றிக் கேள்வியுற்றான். அவன் பவுத்த மதத்தைச் சார்ந்தவன். தான் சிதம்பரத்தைப் பற்றி அறிந்துகொண்டதைத் தனது அவையில் உள்ள புத்த குருமார்களிடம் தெரிவித்தான். அவர்களும் சைவர்களோடு வாதம் செய்து புத்தரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று சாதித்துக் காட்டுவோம் என்று சபதம் மேற்கொண்டு சிதம்பரத்திற்குப் புறப்பட்டனர். ஈழத்து அரசனும் தன் ஊமை மகளுடன் தில்லையை அடைந்தான்.
ஈழ மன்னன், புத்த குருமார்களுடன் சிதம்பரத்தை நோக்கி வருவதை அறிந்தான் அப்பகுதியை ஆண்ட சோழ வேந்தன். உடனே, சோழன் மாணிக்கவாசகரை அழைத்து பவுத்தர்களுடன் வாதம் செய்யுமாறு வேண்டினான். மணிவாசகரும் அதற்கு உடன்பட்டு சோழ மன்னனின் அரசவைக்கு எழுந்தருளினார்.
மாணிக்கவாசகர் சாக்கியர்களுடன் வாதம் செய்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தக்க விடை அளித்து அதிசயத்தில் அவர்களை வாயடைத்து நிற்கச் செய்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஈழத்து அரசனும், ‘சுவாமி! பேசக் கூடியவர்களாகிய புத்த குருமார்களை எல்லாம் பேசாமல் இருக்கச் செய்த நீங்கள், வாய் பேச முடியாமல் இருக்கும் எனது மகளைப் பேசும்படி செய்தால் நாங்கள் அனைவரும் சைவர்களாக மாறுவோம்” என்றான்.
வாதவூரடிகளும், சாக்கியர்கள் கேட்ட வினாக்களுக்கு விரிவான விடை அளிக்குமாறு அப்பெண்ணிடம் கூறினார். அந்தப் பெண்ணும் சிவபெருமானின் திருவருளால் வாய் பேசப்பெற்றதோடு மட்டுமல்லாமல் பவுத்தர்களின் வினாக்களுக்கும் தக்க விடை அளித்தாள். இந்த அற்புத நிகழ்வைத் தம் கண்ணாரக் கண்ட பவுத்தர்களும் ஈழ அரசனோடு திருநீறு தரித்து உருத்திராக்கம் பூண்டு சைவர்கள் ஆனார்கள்.
இவ்வாறு அருள் புரிந்து, மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் எழுந்தருளியிருந்தபோது ஒருநாள் தில்லை எம்பெருமான் வேதியர் உருக்கொண்டு அவர்முன் தோன்றி அவரைத் திருவாசகம் அருளுமாறு கேட்டுக்கொண்டார். வாதவூரரும் அதற்கிசைந்து பாடல்களை மொழிய அந்தப் பாடல்களை எல்லாம் அம்பலவாணர் தம் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டுச் சென்றான். அவ்வேட்டில் ‘திருவாதவூரர் சொல்லிய இந்தத் திருவாசகம் பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்தாகும்’ என்றும் எழுதிச் சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். மறுநாள் பூசைசெய்ய வந்தவர்கள் அந்த ஏட்டினையும் அதிலுள்ள பாடல்களையும் ஈசனிட்ட கையெழுத்தையும் பார்த்து அதிசயித்து உடனே மாணிக்கவாசகரை அழைத்து வந்து இதன் பொருளைக் கேட்டார்கள். அவர் ‘இத்தமிழ் நூலுக்குப் பொருள் இவர் தாம்’ என்று அம்பலவாணரைக் காட்டி அவரும் அந்தத் திருச்சபையிலேயே மறைந்தார்.
மாணிக்கவாசகர் இவ்வாறு அம்பலத்தில் மறைந்ததைக் கண்ட அடியார்களும் பிறரும் மனமுருகித் தொழுது அதிசயித்து மகிழ்ந்து நின்றார்கள். வானவர்கள் பூமழை பொழிந்தார்கள்.