மதுரை மீனாட்சி அம்மை பதிகம்

மீனாட்சி அம்மை

  மதுரை மீனாட்சி அம்மை பதிகம்

மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மையின் பெருமையைப் போற்றித் துதிக்கும் தமிழ்மாலை.

கவிதைகள் : இமயவரம்பன்
பாவகை : பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்
(விளம், விளம்,விளம், விளம், விளம்,மா,தேமா- அரையடிக்கு)
1.
திருவளர் மரகத மணியொளிர் வரையெனத்
  திகழ்வடி வாகி நின்றாய்
 செறிவுறும் அறிவுடன் தெளிபவர் உளமெனும்
  செழுமலர் வாழு கின்றாய்
உருவளர் மலரடி பழுதறத் தொழுதுளம்
  உருகிடும் உணர்வின் நல்லார்
 உறுபெரு நலத்துடன் உலகினில் வாழ்ந்திட
  உகந்தருள் மாரி பெய்வாய்
அருள்வளம் பெருகிடும் அளப்பரும் புகழும்பே
  ராற்றலும் போற்றி நின்றே
 அந்தமிழ்க் கவிசொலும் எனக்கருந் துணையென
  அருகிருந் தியற்ற வைப்பாய் 
புரிசடை யானொடு பாங்கமர் பாகமாய்ப்
  பொன்னுருப் பொருந்தி நின்றாய்!
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
திரு வளர் = மங்கலம் பொருந்திய
வரை = மலை
உரு வளர் = அழகிய
அளப்பு அரும் = அளந்து அறிய முடியாத
அம் தமிழ் = அழகிய தமிழ்
2.
கண்ணினுள் கண்ணும்நீ செவியினுட் புலனும்நீ
  கண்டுகேட் பனவும் நீயே
 கணக்கிலாப் பிறவிகள் கடந்திளைத் திடுமெனைக்
  காத்திடும் கருணை நீயே
எண்ணுமெண் ணங்களைத் தோற்றுவிப் பாளும்நீ
  என்றனா ருயிரு நீயே
 இன்னல்கள் தீர்த்திடும் கன்னலின் தேறல்நீ
  இன்மலர் வாசம் நீயே
மண்ணில்நல் வண்ணமே வாழ்ந்திடச் செய்திடும்
  மாபெரும் சக்தி நீயே
 வான்புகழ் மாமறை யாவிலும் ஆர்ந்திடும்
  வழுவிலாப் பொருளும் நீயே
புண்ணமர் நெஞ்சினில் தண்ணருள் இட்டுநீ
  புத்தொளி ஊட்ட வாராய் 
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே!
அருஞ்சொற் பொருள்:
கன்னல் = கரும்பு
தேறல் = தெளிந்த சாறு
ஆர்ந்திடும் = நிறைந்திடும்
வழு இலா = குற்றமற்ற
புண் அமர் = புண்களே நிறைந்துள்ள
தண் அருள் = குளிர்ச்சி பொருந்திய திருவருள்
3.
சொல்லிகழ் புகழுடன் தோல்வியும் வெற்றியும்
  துமுலமும் தெளிவு மாவாய்
 துன்பமோ டின்பமும் சூழ்பகை அன்பொடு
  தொடர்பிறப் பிறப்பு மாவாய்
அல்லொடு பகலுமாய் அணிமதி பரிதியாய்
  அன்மையோ டுண்மை ஆவாய்
 அல்லலில் ஆழ்த்திடும் இன்மையாய் வாழ்வினில்
  ஆக்கமும் ஆகி நிற்பாய்
நில்லெனச் சொல்லியும் நின்றிட லற்றுழல்
  நினைவலை ஓங்கு நெஞ்சில்
 நின்னருள் நாட்டியோர் பொன்மலர்த் தாளிணை 
  நிலைபெறச் செய்ய வாராய்
புல்கர வணைதுறந் தருந்தமிழ்ப் பின்செலும்
  புண்ணியன் போற்று தங்காய்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
சொல் இகழ் புகழுடன் = இகழ்ச்சி புகழ்ச்சி என்று சொல்லப்படும் இரண்டுமாய்
துமுலம் = குழப்பம்
அல் = இரவு
பரிதி = சூரியன்
அன்மை = இல்லாத தன்மை
இன்மை = வறுமை
ஆக்கம் = செல்வம்
உழல் = சுற்றிச் சுழல்கின்ற
புல்கு அரவு அணை = சயனிக்கின்ற பாம்புப் படுக்கை
(‘புல்கர வணைதுறந் தருந்தமிழ்ப் பின்செலும் புண்ணியன்’ என்னும் சொற்றொடர், சீடனான கணிகண்ணனின் பின்சென்ற ஆழ்வாரைத் தொடர்ந்து சென்ற கச்சிநகர்த் திருமாலைக் குறிக்கிறது. இந்நிகழ்வைப் பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ளத் திருமழிசை ஆழ்வார் வரலாற்றைப் படிக்கவும்).
4.
மதியினிற் சிறியனேன் மனத்தினுள் புகுந்தொரு
  மருந்தென அருள்பொ ழிந்தாய்
 மருளெழும் கனவுவாழ் வதிற்சுகம் பெரிதெனும்
  மயக்கெனுள் அறுத்தொ ழித்தாய்
எதுநலம் அளிப்பதோ எதுபழி விளைப்பதோ
  எனமனத் துழலும் என்னுள்
 இடம்புகுந் துணர்வினில் சுடரொளி பெய்துன
  திணையடி காட்டி நின்றாய்
மதுவிரி மலரவள் மகிழ்ந்துறை மார்வனாம்
  மணிவணன் தனக்குத் தங்காய்
 மழுவொடு திகிரிசங் கங்குசம் வேலிவை
  மகிழ்ந்தளித் தசுரை வென்றாய்
புதமிகு வான்முதல் பூதங்கள் ஆகியெப்
  பொருளிலும் பரந்து நின்றாய்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
மழு = சூலப்படை;
திகிரி = சக்கரம்;
புதம் = மேகம்
5.
தீம்பழத் தின்சுவைச் செந்தமிழ்ச் சொற்களால்
  செவ்வடி போற்று கின்றேன்
 சீருறும் நின்னருட் பார்வையைப் பெற்றிடத் 
  திருப்புகழ் சாற்றி நின்றேன்
சோம்பரும் அச்சமும் தோற்கடிக் கும்திறல்
  துணிவினை நாடு கின்றேன்
 தூய்மையே சூழ்ந்திட நோயற வாழ்ந்திடத்
  துணைசெய வேண்டி நின்றேன்
சாம்பரைப் பூசியோர் மாமலை வாழ்ந்திடும்
  தலைவனைக் காத லிப்பாய்
 சக்தியோம் சக்தியென் றேத்திடும் பத்தர்கள்
  தம்வினை ஓட்டு விப்பாய்
பூம்பொழில் தொறும்பொறி வண்டினம் முரன்றுநின்
  பொன்னடி போற்றி சைக்கப்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
தீம்பழம் = இனிமையான பழம்;
செவ்வடி = செம்மை வாய்ந்த திருவடி
சாம்பர் = சாம்பல் என்பதன் இறுதிப் போலி
மாமலை = கயிலை
பூம்பொழில் = பூஞ்சோலை
பொறி வண்டு = புள்ளிகளையுடைய வண்டு
முரன்று = ஒலி எழுப்பி
போற்றிசைக்க = போற்றிப் பாட
6.
நினைப்பரும் பொருளென முனிகணம் வழுத்திட
  நிருத்தம்நின் றாடு கின்றாய்
 நிதம்நிதம் தொழுதிடும் அடியவர் துயர்தனை
  நெருப்பினில் வாட்டு கின்றாய்
தனித்தநின் தண்ணொளி பொழிந்தென துளத்தினில்
  தடித்திடும் இருளை வென்றாய்
 தமர்களுக் கானந்தத் தேனமு தூட்டியோர்
  தாழ்வினைத் தடுத்து நின்றாய்
தனக்கொரு நிகரிலாத் தம்பமாம் வாழ்க்கையில்
  தளர்ந்துநான் ஏறி வந்தேன்
 தாவிடத் தாவிடத் தூரமாம் உச்சியில்
  தாயெனைத் தூக்கி வைத்தாய்
புனக்குற மகளொடும் மணம்புணர் மகற்கொரு
  பொன்னொளிர் வேல்கொ டுத்தாய்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
நினைப்பரும் = நினைப்பதற்கு அரிய;
முனிகணம் = முனிவர்கள்
வழுத்திட = வாழ்த்திட
நிருத்தம் = நடனம்
தண்ணொளி = குளிர்ச்சி பொருந்திய அருளாகிய ஒளி
தமர்களுக்கு = அடியார்களுக்கு
புனக் குறமகள் = காட்டில் வசிக்கும் குறமகளான வள்ளி
மணம் புணர் = திருமணம் புரிந்த
மகற்கு = மகனான முருகனுக்கு
7.
உலகெலாம் புரந்திடும் ஒருதனிக் கருணையாய்
  உயிர்களின் உயிரு மாவாய்
 உளமெலாம் களித்திட உணர்வினில் விரவியே
  ஊறுதெள் ளமுத மாவாய்
கலைவலார் வேதியர் கவிஞர்நல் யோகியர்
  கருதுமெய்ப் பொருளும் ஆவாய்
 கடையனேன் மேலுயர் பரிவினைப் பெய்துயிர்
  காக்குமோர் களைகண் ஆவாய்
நிலையிலா வாழ்வினில் கழிபொருள் சேர்த்தொரு
  நிறைவினைத் தேடும் என்னை
 நெறியினில் உய்த்துநின் அருள்நிலை நிறுத்தியென்
  நெஞ்சினை ஆள வாராய்! 
புலையிருள் ஒழிந்திட மனத்தினை நிறைத்திடும்
  புரையறும் ஒளிவி ளக்கே
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
புரந்திடும் = காத்திடும்
விரவி = கலந்து
கலைவலார் = கலைகளில் வல்லவர்கள்
கடையனேன் மேல் = சிறப்பொன்றும் இல்லாத என்மேல்
களைகண் = பற்றுக்கோடு
கழிபொருள் = மிகுதியான பொருள் அல்லது நிலையில்லாமல் கழிந்து போகும் பொருள்
நெறியினில் உய்த்து = நல்ல வழி காட்டி
புலை = இழிவான
இருள் = அறியாமை என்னும் இருள்
புரை அறும் = குற்றமற்ற
8.
மிகுத்திடும் துயரிலும் மகிழ்ச்சியின் நிலையிலும்
  மிளிர்ந்திடும் வரம்வி ழைந்தேன்
 வேதனை யுற்றிடும் பிறவுயிர் நோக்குறில் 
  மெலிந்திடும் மனம்ந யந்தேன்
இகத்திலே என்னையாட் கொண்டருள் புரிந்தநின்
  இன்னருள் திறம்பு கழ்ந்தேன்
 இழைத்தபொன் மணியென எழுத்தொளிர் கவியிட
  இன்னருள் வேண்டி நின்றேன்
அகத்தினில் வலிமையும் உரத்தையும் அளித்தெனை 
  அணைத்துநீ அஞ்சல் என்னாய்
 அளப்பரும் கருணையின் ஒருதுளி அடியனுக்
  களித்திட மறுப்ப தென்னோ?
புகல்தரும் நிழலெனத் திகழ்தரும் நின்செழும்
  பொன்னடி பற்று கின்றேன்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே! 
அருஞ்சொற் பொருள்:
நயந்தேன் = விரும்பினேன்
இகம் = இப்பிறப்பில்
திறம் = தன்மை
கடையனேன் மேல் = சிறப்பொன்றும் இல்லாத என்மேல்
அஞ்சல் என்னாய் = ‘நீ அஞ்சாதே’ என்று சொல்லாமல் இருக்கிறாய்
அளப்பரும் = அளந்து அறிவதற்கு அரிய = மிகுதியான
புகல் = அடைக்கலம்
9.
செற்றமும் ஆசையும் நீத்தமெய்ஞ் ஞானியர்
  சிந்தைநான் பெற்ற தில்லை
 திண்ணென உன்நினை(வு) உள்நிறைந் தாழ்ந்திடும்
  சீர்மையும் வாய்த்த தில்லை
கற்றநூல் சொல்லிடும் நன்னெறி கேட்டும்நான்
  கருத்தினிற் கொண்ட தில்லை
 காளமே கத்தருந் தமிழ்தரும் புலவர்போல்
  கவித்திறம் பெற்ற தில்லை
நற்றவப் பேற்றினை நல்கிடும் பொன்னடி
  நண்ணிநான் பற்றி நின்றேன்
 நலித்திடும் துயரொழி அருளினைக் கேட்டுநான்
  நயனநீர் வற்ற நின்றேன்
பொன்திகழ் புழைக்கரத் தொருவனைத் தந்தொரு
  பொருவரும் பெருமை கொண்டாய்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே!
அருஞ்சொற் பொருள்:
செற்றம் = சினம்
காளமேகத்து அரும் தமிழ் தரும் = காளமேகப் புலவர் போல நினைத்த மாத்திரத்தில் தமிழ்க்கவிதைகளை இயற்றவல்ல
நயனநீர் = கண்ணீர்
புழைக்கரம் = தும்பிக்கை
புழைக்கரத்து ஒருவன் = பிள்ளையார்
பொருவரும் = ஒப்பற்ற
தந்து = உலகம் உய்ய பெற்றெடுத்து
10.
நூல்மொழி பொருளினும் நுண்ணிய தாமொரு
  நுவலரும் ஞான மும்நீ
 நோய்செயும் தீயவர் வீழ்ந்திடத் தீவிழி
  நோக்கிடும் காளி யும்நீ
தேன்மொழி ஆர்ந்திடும் செந்தமிழ்ப் பாடல்நீ
  செப்பரும் சொற்ப தம்நீ
 தேவைகள் யாவையும் வேண்டிடத் தந்திடும்
  தெய்வநற் கற்ப கம்நீ
வான்மதி சூடிடும் வேணிய னோடெழில்
  மன்னிய பாக மானாய்
 வாழ்த்துமென் நாவெழும் நொய்தினும் நொய்யதோர்
  வார்த்தைகள் ஏற்ற ருள்வாய்
பூன்றமா நலங்களும் பொருந்திடும் திருந்தடி
  போற்றியே பாடு கின்றேன்
 புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
  பூங்கயற் கண்ணி தாயே!
அருஞ்சொற் பொருள்:
நுவலரும் = சொல்வதற்கு அரிய
நோய்செயும் = கெடுதலைச் செய்யும்
வேணியன் = சடைமுடியைக் கொண்டவன் (சிவபிரான்)
மன்னிய = நிலைத்த
நொய்தினும் நொய்ய = இழிவிலும் இழிவான
பூன்றம் = பூரணம்
திருந்து அடி = திருத்தம் வாய்ந்த (செம்மை பொருந்திய) திருவடி

This Post Has 2 Comments

  1. Anonymous

    Iraivan arulal Needuli Vaazhka.

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி!

Leave a Reply