நால்வர் வெண்பா மாலை – கவிதை நூல்

நால்வர் வெண்பா மாலை – நூல் முகவுரை

நால்வர் வெண்பா மாலை என்னும் இந்நூல் சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரின் புகழ் பாடும் வெண்பாக்களைக் கொண்டு நான் எழுதிய கவிதை நூல்.

இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் பத்து வெண்பாக்கள் இடம்பெறுகின்றன. அந்தாதித் தொடையில் அமைந்து மண்டலித்து முடிந்த வெண்பாக்கள் இவை. 

அந்தாதி = அந்தம் + ஆதி. ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அல்லது அடி இவற்றில் யாதானும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். இறுதிப்பாடலின் முடிவு, முதற்பாடலின் தொடக்கமாக இணையும்படி பாடுவதையே ‘மண்டலித்து முடிதல்’ என்பர். இவ்வாறு பூமாலையைப் போன்று முதலும் இறுதியும் இணைந்திருப்பதால் இந்த நூல் வெண்பா மாலை என்னும் பெயர் பெற்றது.

முதல் பகுதியாகிய ‘சம்பந்தர் வெண்பா மாலை’, காழிவேந்தர் எனவும் புகலியர் கோன் எனவும் போற்றப்படும் திருஞானசம்பந்தரின் புகழ் பாடும் வெண்பாக்களைக் கொண்டது.

இரண்டாம் பகுதியாகிய ‘வாகீசர் வெண்பா மாலை’யில் இடம்பெற்றுள்ள வெண்பாக்கள், நாவரசர் எனவும் தமிழ்வேந்தர் எனவும் வாகீசர் எனவும் போற்றப்படும் திருநாவுக்கரசரின் புகழ் பாடுவன.

மூன்றாம் பகுதியாகிய ‘ஆரூரர் வெண்பா மாலை’, ‘நம்பி ஆருரர்’ எனவும் ‘வன் தொண்டர்’ எனவும் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரின் புகழ் பாடும் வெண்பாக்களைக் கொண்டது.

நான்காம் பகுதியாகிய ‘மணிவாசகர் வெண்பா மாலை’யில், திருவாசகத்தை அருளிய மணிவாசகர் என்று போற்றப்படும் மாணிக்க வாசகரின் புகழ் பாடுகின்ற வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

தேவையான இடத்தில் வெண்பாக்களைப் பதம் பிரித்துக் காட்டியுள்ளேன். மேலும், ஒவ்வொரு வெண்பா மூலமும் நான் சொல்ல வந்த கருத்து புலனாகுமாறு கருத்துரையும் சொற்பொருளும் வரலாற்றுச் சான்றுகளும் அளித்துள்ளேன். இந்நூலின் பிற்சேர்க்கையாக இலக்கண விளக்கமும், நால்வர் சரித்திரமும் அளிக்கப்பட்டுள்ளன. துணைநின்ற நூல்களின் பட்டியலும் இந்நூலிறுதியில் காணலாம்.

இந்நூலில் சொற்பிழையோ பொருட்பிழையோ இலக்கணப் பிழையோ இருப்பின் அருள்கூர்ந்து பொறுத்து அறிவுறுத்தி ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,
இரா. இமயவரம்பன்

‘நால்வர் வெண்பா மாலை’ முழுப்புத்தகத்தையும்
PDF-ஆகத் தரவிறக்கம் செய்ய
To download ‘நால்வர் வெண்பா மாலை’ as a PDF – Click below

Leave a Reply