நளவெண்பா (Nalavenba) – நான்கே அடிகளில் நல்லமுதம் பொழியும் சுவைமிகுந்த நூல். வடமொழியில் மகாபாரதத்தில் ஆரணிய பருவத்தில் வரும் ‘நளோபாக்கியானம்’ என்னும் கிளை நூலை முதல் நூலாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் எழுதப்பட்ட அருமையான நூல். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் ‘வெண்பாவில் புகழேந்தி’ என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்.
நளவெண்பா – சிறு குறிப்பு | |
---|---|
எழுதியவர் | புகழேந்திப் புலவர் |
பாவகை | நேரிசை வெண்பா |
மூல நூல் | நளோ பாக்கியானம் |
காண்டங்கள் | சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் |
புகழேந்திப் புலவர் வரலாறு
புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டிலுள்ள பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். இப்பொன் விளைந்த களத்தூர் செங்கல்பட்டுக்கு அண்மையில் இருக்கிறது. இவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியாத காரணத்தாலும், இவர் புலமையில் புகழ் பெற்றிருந்தமையாலும் அறிஞர்கள் இவரைப் ‘புகழேந்தி’ என்று அழைக்கின்றனர்.
கம்பரும் இவரும் சமகாலத்தவர்கள் என்று கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னன் ஆட்சிபுரிந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் உரைப்பர். இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது நளவெண்பாவில் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூலம் புலனாகின்றது.
புகழேந்தியார், தென்மதுரையை ஆண்டு வந்த சண்பகமாறன் என்னும் பாண்டிய மன்னன் அவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார் என்பர். பின்னர் பாண்டிய நாட்டுக்கு சோழமன்னன் சார்பில் விஜயம் செய்த ஒட்டக்கூத்தருடன் வாக்குவாதம் செய்து வெற்றிபெற்றார் என்றும், அதனால் மனம் வெகுண்ட ஒட்டக்கூத்தரால் சோழ நாட்டுச் சிறையில் புகழேந்தியார் அடைக்கப்பட்டார் என்றும், சோழ அரசியாரால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார் என்றும் கூறுவர்.
புகழேந்திப் புலவர் ‘தற்கோலி’ என்னும் கவிதையைப் பாடி ஒட்டக்கூத்தரை வென்ற சம்பவத்தைத் தொண்டை மண்டல சதகம் என்னும் நூலில் வரும் இந்தப் பாடல் வாயிலாக நாம் அறியலாம்.
கோலாகலன் ஒட்டக் கூத்தனை ஏன்று தற்கோலி என்று
மேலார் கவிசொல்லி நெய்த்தானத்தே சென்று வென்று கொண்ட
மாலார் களந்தைப் புகழேந்தியும் தொண்டை மண்டலமே.
சந்திரன் சுவர்க்கி என்னும் மன்னன் ஆதரவினால் நளவெண்பாவை இயற்றினார் என்றும் அறிஞர்கள் சான்றுரைப்பர்.
புகழேந்திப் புலவரின் நன்றி உணர்ச்சி
பின்வரும் பாடல்கள் மூலம் தம்மைப் போற்றிப் புரந்த மன்னனான சந்திரன் சுவர்க்கியின் புகழைப் பாடுகின்றார் புகழேந்தியார். இந்தப் பாடல்களும் நளவெண்பாவில் அமைந்துள்ள மற்ற பிற பாடல்களும் ‘நேரிசை வெண்பா’ என்னும் பாவகையைச் சார்ந்தவை. வெண்பாவின் இலக்கணம் பற்றி ‘வெண்பா எழுதுவது எப்படி?‘ என்னும் வேறொரு பதிவில் பார்க்கலாம்.
நேரிசை வெண்பா
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் – மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின் வில்வேடன் கண்டு.
விளக்கம் : வேடன் தமயந்தியைப் பாம்பின் வாயிலிருந்து மீட்டான். அவன் எவ்வாறு காப்பாற்றினான் என்றால், சங்கு வடிவில் அமைந்த நிதிபோல அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலான சந்திரன் சுவர்க்கி, கொடிய வறுமையிலிருந்து உலக மக்களை மீட்டது போல அந்த வேடன் தமயந்தியைப் பாம்பின் வாயிலிருந்து மீட்டான்.
தண்தார் புனைசந் திரன்சுவர்க்கி – கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.
விளக்கம் : நளமன்னனிடம் தங்கித் துயர்கொடுத்த கலியானது அவனை விட்டு நீங்கியது. அது எவ்வாறு நீங்கியது என்றால், வண்டுகள் மொய்க்கும் வளம் கொண்ட வயல் சுற்றியிருக்கின்ற எங்கள் மள்ளுவ நாட்டு அரசனான குளிர்மலர் மாலை அணிந்த சந்திரன் சுவர்க்கியால் புரக்கப்படும் புலவர்களின் பசி நீங்கியது போல கலியும் நளனை விட்டு நீங்கியது.
நளவெண்பா கதைச் சுருக்கம் – Nalavenba Story
நிடத நாட்டு மன்னனாகிய நளன், அறநெறி தவறாமல் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவன் வேனில் காலத்தில் ஒருநாள் இளைப்பாறுவதற்கு ஒரு பூஞ்சோலைக்குச் சென்றான். அங்குள்ள ஒரு குளத்தில் அன்னப் பறவையொன்றைக் கண்டான். அந்த அன்னத்தின் அழகை வியந்து அதைக் கைப்பற்றினான். அஞ்சி வாடிய அந்தப் பறவையைக் கண்டு மனம் நெகிழ்ந்த மன்னன் அதைத் தன் கைப்பிடியிலிருந்து விடுவித்தான். பறந்து சென்ற அந்த அன்னம் திரும்பி வந்து நளனிடம் தமயந்தி என்னும் அழகிய மங்கையைப் பற்றிக் கூறி, அவன் மணம் புரிய ஏற்றவள் என்றும் சொல்லிற்று. அன்னம் கூறிய சொற்களால் தமயந்தியிடம் காதல் வயப்பட்ட நளன் அந்த அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான். அது தமயந்தியிடம் சென்று அவளது காதலையும் அறிந்து நளனிடம் தெரிவித்தது.
பின் தமயந்தியின் தந்தையான விதர்ப்ப நாட்டரசன் வீமன் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். இந்திரன் முதலிய தேவர்களும் நளன் உருவத்தில் மாறி அந்தச் சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தனர். மண்ணுலக மன்னர்கள் பலரும் கடலெனத் திரண்டு அங்கு வந்திருந்தனர். ஆயினும் தமயந்தி நளமன்னனுக்கே மாலை சூட்டி மணவாளனாகக் கொண்டாள்.
சுயம்வரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தேவர்கள் வழியில் கலியைக் கண்டனர்; அவனிடம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி உரைத்தனர். அதுகேட்டுப் பெருங்கோபம் கொண்ட கலி, தான் நளனைக் கீழ்மைப்படுத்தப் போவதாகவும், நளனையும் தமயந்தியையும் பிரித்துவிடப் போவதாகவும் சபதம் செய்தான். சில ஆண்டுகள் கழிந்தன. சபதத்தை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் நோக்கியிருந்த கலி, புட்கரன் என்னும் மன்னனை நளனுடன் சூதாட அனுப்பினான். நளன் சூதாடி அனைத்து செல்வத்தையும் இழந்தான். பின்னர் தன் மகன்கள் இருவரையும் தன் மாமன் வீமனிடம் அனுப்பிவிட்டுத் தன் மனைவி தமயந்தியுடன் காட்டில் வசித்துவந்தான்.
ஒரு நாள் காட்டில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் நளனும் தமயந்தியும் உறங்கினர். அப்போது விழித்தெழுந்த நளன் கலியின் வலிமையினால் அந்தக் காட்டில் தமயந்தியைத் தன்னந்தனியாக விட்டுவிட்டு நீங்கினான். உறக்கம் நீங்கி எழுந்த தமயந்தி நளனைக் காணாமல் பதறி, வணிகன் ஒருவனின் துணையுடன் விதர்ப்ப நாட்டுக்குச் சென்று தன் தந்தை வீமனிடம் நளனைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி வேண்டினாள். அதே நேரத்தில், அவளைப் பிரிந்து சென்ற நளன், கார்க்கோடகன் என்னும் பாம்பைக் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றும்போது அந்தப் பாம்பினால் கடிபட்டு மேனி கறுத்தான். தன் பழைய உருவத்தை மீண்டும் பெற நினைத்தால் உடுத்துக்கொள்ளும்படி அந்தப் பாம்பு இரண்டு ஆடைகளை நளனுக்குக் கொடுத்தது. அந்த ஆடைகளைப் பெற்றுக்கொண்ட நளன், அயோத்தி நகர் சென்றான். அந்த நாட்டு மன்னன் இருதுபன்னனிடம் வேலைக்குச் சேர்ந்து சமையல்காரனாகவும் தேரோட்டியாகவும் வாகுகன் என்னும் பெயரில் பணிபுரிந்து வந்தான்.
வீமனால் நளனைத் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட அந்தணன் ஒருவன், அயோத்தியில் நளன் இருப்பதை எவ்வாறோ அறிந்து கொண்டுவந்து தமயந்தியிடம் தெரிவித்தான். தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நிகழ்வதாக, அவள் சொற்படி, அந்த அந்தணன் இருதுபன்னனுக்கு மணவோலை கொடுத்து அழைப்பு விடுத்தான். இருதுபன்னனும், வாகுகன் என்னும் பெயரில் இருந்த நளன் தேரை ஓட்ட, வீமனின் தலை நகரமான குண்டினபுரத்தை அடைந்தான்.
இந்த இருவரும் தேரில் வருவதைக் கண்ட தமயந்தி, தேரோட்டி உண்மையில் நளன் தானா என்பதைக் கண்டறிய தன் மகன்களை வாகுகனிடம் அனுப்பித் தோழியின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து தேரோட்டி நளனே என்பதைத் தெளிந்தாள். தன் தந்தையுடன் வாகுகனிடம் சென்று அவனுடைய உண்மையான உருவத்தைக் காட்டும்படிக் கேட்டுக் கொண்டாள். வாகுகன் உருவம் மாறி நள மன்னனாகத் தோன்றினான்.
அதன்பின்னர் நளமன்னன் தன் மனைவி மக்களுடன் தன் நாடான நிடத நாட்டுக்குச் சென்று, புட்கரனுடன் மறுபடியும் சூதாடி வெற்றிபெற்று, தன் நாடு நகரமெல்லாம் மீண்டும் கைப்பற்றி, முடிசூடி, மன்னர் மன்னனாக நல்லாட்சி செய்து இனிது வாழ்ந்தான்.
நளவெண்பா – கதை சொல்லும் பாடல்கள்
சுயம்வர காண்டம்
கதையின் கதை
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி – விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.
பொருள் : ‘என்னைப்போல் அறிவிழந்து சூதாடி நாட்டை இழந்து காட்டை அடைந்த அரசர் வேறு யாரேனும் உண்டோ?’ என்று தருமராசன் வியாசரைக் கேட்டன்.
விளக்கம் : சூதாட்டத்தில் தருமன் பொன், பொருள், சேனை, நாடு, நகர் என்று எல்லாவற்றையும் பணயமாக வைத்துத் தோற்றான். பின் தனது தம்பிகளை வரிசையாகத் தோற்று, தன்னையும் தோற்று, தன் மனைவியான திரெளபதியையும் தோற்றான். துரியோதனனால் அவமானப்படுத்தப்பட்ட தருமன் தனது சகோதரர்களுடனும், திரெளபதியுடனும் காட்டுக்குச் சென்றான்.
காட்டில் வசித்துவரும் போது, தன்னைச் சந்திக்க வந்த வியாச முனிவரிடம், தருமன் கண்கலங்கிப் பின்வருமாறு கூறினான்:
(அறிவாகிய) கண்கெட்டு வஞ்சச் சூதாடி, தம் நாட்டைத் தொலைத்துப்போய்க் காட்டினை அடைந்து என்னைப்போல் துன்பப்பட்டவர் உலகத்தில் என்னையன்றி வேறு அரசர் யாரேனும் உண்டோ?
நிடத நாடு
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் – மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.
பொருள் : நள மகாராஜா தனது வெண்கொற்றக் குடை நிழலில், அதாவது தனது ஆட்சிப் பரப்பினுள் வாழும் மக்களை நீதி நெறிமுறையில் காத்துச் செங்கோலாட்சியைச் செய்து கொண்டிருந்தான். அவனது ஆட்சியில் , பெண்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளும், கிளிகளைக் கொன்று தின்னும் பருந்துகளும் ஒரே கூட்டில் ஒற்றுமையாக வாழ்ந்தன.
அன்னம் தமயந்தியின் குணநலன்களை நளனிடம் கூறுதல்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா – வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.
பொருள் : அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்குவகை குணங்களும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழிச்செல்கின்ற அறிவே சிறந்த அமைச்சர்களாகவும், ஒலிக்கின்ற சிலம்பே அழகிய பேரிகையாகவும், வேலும் வாளுமே இரு கண்களாகவும், முகமாகிய நிலாவட்டக் குடையின்கீழ், தமயந்தியானவள் பெண் இயல்பாகிய அரசை ஆட்சி செய்கின்றாள்.
காதல் கொண்ட நளனின் மனநிலை
அற்றது மானம் அழிந்ததுநாண் – மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.
பொருள் : அன்னம் தமயந்தியைப்பற்றிக் கூறியவற்றையெல்லாம் கேட்ட நளனுக்கு மனம் நிலைகுலைந்து, காதல் மேலோங்கியது; பெருமை நீங்கியது; வெட்கம் ஒழிந்தது; காமமெனும் தீப்பற்றிய மனமுடையனாகிய அவன், சற்றே அறிவு தெளிந்து, அன்னத்திடம் ‘என் உயிர்வாழ்க்கை நீ தமயந்தியிடம் சொல்லப்போகும் வார்த்தைகளில் தான் இருக்கிறது’ என்று கூறினான்.
தமயந்தியிடம், ‘உனக்குக் கணவன் நளமன்னனே’ என அன்னம் உரைத்தல்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் – மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு.
பொருள் : நன்மனம் உள்ளவனும் அன்புகலந்த இரக்கமுடையவனும், அறநெறி மாறாத ஆட்சியுடையவனும், இளம்பெண்களின் மனத்தைத் தன்பால் இழுக்கின்ற நீண்ட தோள்களையுடையவனும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றிப் புகழால் உயர்ந்தவனும் ஆகிய ஒருவன் இருக்கின்றான். அவன் பெயர் நளன். அவனே உனக்குக் காதலனாவான்.
தமயந்தி, தன் மனநிலையை நளனுக்குத் தெரியப்படுத்த அன்னத்தை தூதுவிடல்
ஆவி யுவந்தளித்தா யாதியால் – காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.
பொருள் : உலகத்துக்கு அரசனாகிய வீமராசனுடைய மகளாகிய தமயந்தி மனம் துடிப்புற்றுப் பின்வருமாறு கூறினாள் : “பொய்கையில் வாழும் அன்னமே! பூஞ்சோலையில் உன் வரவுக்காகக் காத்திருக்கும் நளமன்னனுக்கு என் மனநிலையை உரைப்பாயாக! அவ்வாறு நீ உரைத்தால், என் உயிரை எனக்கே திருப்பித் தந்த பெருமை உன்னைச் சேரும்”
நளவெண்பா வாழ்த்துக் கவிதை
புகழேந்திப் புலவரின் கவிநயத்தையும் நளவெண்பாவின் நூல்நயத்தையும் போற்றி இந்தப் பாடல்களை இயற்றியுள்ளேன். இந்தப் பாடல்கள் கலிவிருத்தம் என்னும் இசை நிறைந்த பாவகையில் புனையப் பட்டவை.
சூதில் வெங்கலி சூழ்ச்சியைச் சாடிடும்
நீதி என்றும் நிலைப்பதைக் கூறிடும்
தீதில் சொல்லுயர் தேன்சுவைப் பாக்களே!
வாழ்க வெந்துயர் வீழ்த்திடும் வாய்மையே
வாழ்க அன்பின் வளம்சொலும் காவியம்
வாழ்க மாக்கவி வான்புக ழேந்தியே!
— இமயவரம்பன்
அன்புள்ள இமயவரம்பன்,
வணக்கம். கட்டுரையும், பாடல்களும் நன்று. பாடல்கள் என்ன வகையென்றும் அவற்றின் இலக்கணமும் கூறலாம்.
அன்புள்ள ஐயா,
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!
தங்கள் கருத்துகளின் படி இப்பதிவில் கலி விருத்தம் பற்றிய இலக்கண குறிப்புகளையும் சேர்த்துள்ளேன். வெண்பாவின் இலக்கணத்தை ‘வெண்பா எழுதுவது எப்படி?‘ என்னும் வேறொரு பதிவில் விளக்கியுள்ளேன். தாங்கள் அந்தப் பதிவிற்கும் வருகை தந்து தங்கள் மேலான கருத்துகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
இமயவரம்பன்
வணக்கம் ஐயா
உங்களுடைய விளக்கம் சிறப்பானது. நளவெண்பா பற்றிய சிறந்த விளக்கத்தினை பெற்றுக்கொண்டேன் தொடருட்டும் உம் பணி
நன்றி
மிகவும் நன்றி!
மிகவும் விளக்கமாக விளக்க உரை.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் ஐயா
மிக்க நன்றி!
I`m a student . My teacher advice me abd my friends to read nalavenba and she even give us a task about nalavenba .
And im from paris . my teacher is christian but even she advice my classmates to read nalavenba
Great to know your interest in reading Nalavenba, a great story told in lovely verse. Although it is a romantic poetry, it is a work filled with many virtues. The book talks about King Nala’s good governance, philanthropy and magnanimity. It also talks about the disgrace caused by gambling. It also highlights the triumph of good over evil. Thus the book has many ethical thoughts and virtues that are applicable for people of all religions.
hi! I became a very big fan