பாடல் வரிகள்
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் — உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், — நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் — சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; — இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
– மகாகவி பாரதியார்
English Translation – Nallathor Veenai Seithe
with great artistic taste,
and throw it in the lowly mud
its beauty laid to waste?
O Mother! Goddess ShivaShakti!
you tell me, is this right?
You endowed me with great wisdom,
But not with power and might .
grant me prowess to make my life
useful to the world,
would you rather let me live
as a burden to the world?
like a ball that gets propelled
with a forceful shot,
Let my body be agile
and act upon my heart.
I want a mind spotless and pure,
unblemished and right,
and a lively spirit ever so fresh,
New and shining bright.
let my flesh get burnt with pain
in the blazing fires of hell,
my heart should always sing thy praise,
in thy grace my mind should dwell.
I want a soul that lies so still
in life’s rise, ebb and fall,
howsoever grand my wishes be,
You sure can grant them all.
Lyrics
Nalamkeda puzhudhiyil eRivadhundO?
Solladi Sivasakthi – enai
Chudarmigum aRivudan padaithuvittAi
Vallamai thArAyO – indha
MAnilam payanuRa vAzhvathaRkE
Solladi Sivasakthi – nila
Chumaiyena vAzhndhida puriguvaiyO?
VisaiyuRu pandhinaippOl – uLLam
VEndiya padiselum udalkEttEn
NasaiyaRu manamkEttEn – niththam
Navamena sudartharum uyirkEttEn
Thasaiyinai theechchudinum – siva
sakthiyai pAdumnal agamkEttEn
AsaivaRu madhikEttEn – ivai
AruLvathil unakkedhum tadaiyuLathO?
நல்லதோர் வீணை செய்தே கவிதை விளக்கம்
‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது’ என்று தன் கவிதையைப் பற்றிப் பெருமிதத்தோடு தோள் தட்டிக் கொள்ளும் சிங்கக் கவிஞன் பாரதி. இறைவனிடம் ‘பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும் மனை வேண்டும்’ என்று பட்டியலிட்டு வேண்டிக் கொள்ளும் வேடிக்கை மனிதர் போல் அல்லாமல், உலகத்துக்குப் பயன்படுமாறு வாழ்வதற்குண்டான திறனை அருளக் கேட்கும் இந்தப் பாடல்கள் பாரதியின் பரந்த உள்ளத்தைக் காட்டுகின்றன.
தமிழின் துணைகொண்டு தன் உள்ளத்தில் ஊறிக் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளைப் பிறர் உள்ளத்திலும் உண்டாக்குமாறு செய்விக்கும் திறமை மிக்க கவிஞன் பாரதி. உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதோடு மட்டும் அல்லாமல், படிப்பவர் உள்ளத்தில் சிந்தனைகளைக் கிளறிப் பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் பொலிந்து விளங்கும் கவிதைகள் அவனது படைப்புகள்.
‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல்களில் இனிமை, பெருமிதம், கம்பீரம், ஆதங்கம், ரெளத்திரம், உரிமை, பக்தி, சாந்தம் போன்ற பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாட்டைப் பார்க்கலாம். தன் வற்றாத உணர்ச்சிகளின் வெளியீட்டிற்காக பாரதி தேர்ந்தெடுத்த பா வடிவம் – நொண்டிச் சிந்து. இந்த சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சியுடன் தனிச்சொல் பெற்று ஓசையின்பம் மிகுந்து இங்கு அமைந்துள்ளன.
‘நல்லதோர் வீணை செய்தே’ – என்னும் இப்பாடல்களில் பாரதி என்னும் வீணை செய்யும் ஞான ஒலியை நம் செவிமதிழக் கேட்கலாம். இப்பாடல்களின் ஆழ்பொருளை இங்கு ஆய்ந்து நோக்குவோம்.
மங்கல வீணையை மண்ணில் எறிவதோ?
‘நல்லதோர் வீணை செய்தே’ – இதில் ‘நல்லது’ என்னும் சொல் வீணையின் மங்கலத் தன்மையைக் குறிக்கும்.
வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்
கோளறு பதிகம்
மிக நல்ல வீணைதடவி
‘மிக நல்ல வீணை தடவி’ என்று சம்பந்தர் ‘கோளறு பதிகத்தில்’ மொழிந்தவாறு பாரதி இந்த மங்கலச் சொல்லோடு தம் பாடலைத் தொடங்குகிறார்.
எழுத்தில் மட்டுமின்றி இசையிலும் புலமை கொண்ட பாரதி ‘வீணை’ என்னும் அழகிய உருவகத்தை இங்குக் கையாண்டிருக்கிறார். கடுவெளிச் சித்தர் பாடிய ‘நந்தவனத்திலோர் ஆண்டி’ என்னும் பாடலில் வரும் தோண்டியோடு பாரதியின் வீணையை ஒப்பு நோக்கிப் பார்க்கலாம்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
கடுவெளிச் சித்தர்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
நந்தவன ஆண்டி மிகவும் பிரயத்தனப்பட்டு பத்து மாதங்கள் பிரமனிடம் கெஞ்சிக் கேட்டுப் பெற்ற உடலாகிய குடத்தை நன்முறையில் பயன்படுத்தாமல் பழுதாக்கித் தொலைத்தான். அதுபோலவே, ‘அருமையான வீணையைப் போல் பிறர் நலமுறப் பயன்படக்கூடியவனாக சுடர் மிகும் அறிவுடன் என்னைப் படைத்த நீ, அந்த அறிவால் உலகுக்கு உதவிட ஆற்றலை அருளவில்லையென்றால் ஏது பயன்? ‘தேடிச் சோறு நிதம் தின்று கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்’ சாதாரண மனிதர்களைப் போல் என்னையும் உலகத்துக்கு பாரமாக வாழ்ந்து மடிந்திடச் செய்யவேண்டும் என்பது உனது எண்ணமோ?’ – என்று சிவசக்தியைப் பார்த்து உரிமையுடன் இருமுறை விளித்து உணர்ச்சியுடன் கேட்கிறார் பாரதி.
கவிமணியும் பின்வரும் பாட்டில் ‘புல்லும் பசுவுக்கு உணவாகும்; பூண்டும் கூட மருந்தாக அமையும்; கல்லும் கோயில் கட்டப் பயன்படும்; என்னால் உலகத்துக்கு என்ன பயன்?’ என்று வடிவேலவனிடம் அரற்றி முறையிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்:
புல்லும் பசுவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்
கவிமணி
கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம் – தொல்லுலகில்
ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர்
வாழும் வடிவேல வா!
நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் வாழ வேண்டும் என்று சக்தியிடம் பாரதி கேட்பது சுய நலப்போக்கன்று; பொது நலப்பார்வையே ஆகும்.. ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று விழையும் பாரதி தனது பேரறிவு பயன்படாமல் சராசரி வாழ்க்கை வாழ்ந்து, நல்லதோர் வீணை செய்தே அதைப் புழுதியில் எறிவதுபோல் வீணே மடிய மாட்டேன் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.
உணர்ச்சி (Emotion), கற்பனை (Imagination), வடிவம் (Form), கருத்து (Content) ஆகிய நான்கும் சிறந்த கவிதையின் இன்றியமையாத பண்புகள் என்பார் வின்செஸ்டர் (Winchester). இவரது கருத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் பாரதியின் இந்தப் பாடல் அமைந்திருப்பது போற்றத்தக்கது.
பாரதியார் கேட்பன
பாரதியின் ஆன்மீகப் படிநிலைகள்
சிவசக்தியிடம் தமக்கு வேண்டியதைக் கேட்கும்போது பாரதி உளவியல் ரீதியாக சிந்திக்கிறார். இவருடைய ஆன்மீகத் தேவைகளை முதலில் (ஆபிரகாம் மாஸ்லோ என்னும் உளவியல் அறிஞர் வடிவமைத்த) பிரமிடு போல அமைத்து அதன் படிகளாக அடுக்கிவைத்துப் பார்க்கிறார்.
இந்தப் பிரமிடின் அடி மட்டத்தில் உடல் உறுதியை வைக்கிறார். ‘இரும்பு போல் தசையும், எக்குபோல் நரம்புகளும் அமைய வேண்டும்’ என்று சுவாமி விவேகானந்தர் அறிவுறுத்தியது போல், ஆன்மீக மெய்யுணர்வுக்கு அடித்தளமாக ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலினை’ வைக்கிறார்.
இவ்வாறு உடலினை உறுதிசெய்த பின்னர், தமது ஆன்மீக மேம்பாட்டுக்குத் துணைபோகும் அடுத்த தேவையைப் பற்றிச் சிந்திக்கிறார் பாரதி. ஆசை முதலிய மாசுகள் நீங்கினால் தான், ஈசனை அடைய முடியும் என்றும் மோகத்தைக் கொன்றால் யோக நிலை தானே வாய்க்கும் என்றும் நன்கு உணர்ந்தவர் பாரதி. அதனால் தான் கீழிருந்து இரண்டாம் படியில், உடல் உறுதிக்கு மேலே, நசையறு மனத்தை வைக்கிறார்.
நசையற்ற மனம் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? வாழ்வில் ஆன்ம வளம்பெற புத்துணர்வும் புதுப்பொலிவும் நித்த நித்தம் புதுப்புது சிந்தனைகளும் நமக்குள் மலர வேண்டாமா? எப்போதும் சென்றதையே எண்ணிச் சோர்ந்திருந்தால், தூய்மையான மனம் பெற்று என்ன பயன்? இவற்றை நினைத்துப் பார்த்த பாரதி, ‘என்றும் புதிதாக சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உயிர்த்துடிப்பை’ தனது தேவைகளின் அடுத்தக் கட்டத்தில் வைக்கிறார்.
‘குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்பார் வள்ளுவனார். தலையானது, உள்ளம் வேண்டியபடிச் செய்யும் வலிமையும், தூய சிந்தனைகளும், தெளிந்த புத்துணர்வும் பெற்றிருந்தாலும் இறைவனை என்றும் நினையாது இருக்குமேல் அத்தகைய வித்தகத் தலையால் என்ன பயன்? அறிவு பொங்கி அறத்தில் உயர்ந்த வாழ்வு பெற்றாலும், சிவசக்தியைப் பாடாத உள்ளம் நிறைவானதாக இருக்குமா? இருக்காது. இந்த உண்மையை உணர்ந்த பாரதியார், இறையருள் தேவையைத் தமது அடுத்த படிநிலையாக அமைக்கிறார். தசையினைத் தீச்சுடினும் சிவ சக்தியை துதித்துப் பாடுகின்ற நன்மனதைத் தமது உயர்ந்த தேவையாகக் காட்டுகிறார்.
ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமும் உண்டோடா? – மனமே!
தேன்மடை இங்குத் திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!
என்று முழங்குகிறார். இந்த அசைவற்ற ஆனந்த நிலையையே தமது ஆன்மீகத் தேவைகளுள் தலையாயதாக வைத்திருக்கிறார் பாரதி. இதுவே அவரது பிரமிடின் உச்சியில் இருக்கும் ‘அசைவறு மதி’ என்னும் படிநிலையாகும்.
இந்தப் பிரமிடின் படிநிலைகளை மனத்தில் கொண்டே, உடல் உறுதியில் ஆரம்பித்துத் தமது வேண்டுதல்களை இந்தப் பாட்டில் அமைக்கிறார்.
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்
‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’
திருமந்திரம்
‘உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்’
உள்ளமும் உடலும் இறைவன் உறையும் கோவில் என்றார் திருமூலர். அத்தகைய புனிதமான உடலை வளர்ப்பதால் உயிர் வளர்ந்து வாழ்வு செழிக்கும் என்பதில் ஐயமில்லை. மனத்தில் உதிக்கும் எண்ணத்தை நொடிப்பொழுதில் நிறைவேற்றும் ஆற்றல் மிக்கதாக தேகம் இருந்துவிட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். சிறந்த நோக்கம் கொண்ட உள்ளம் ஊருக்கு உதவும் ஒரு காரியத்தைச் செய்ய எத்தனிக்கும் போது உடல் ஒத்துழைக்காமல் மெலிந்து வாடினால், அத்தகைய நல்ல மனம் இருந்தும் உலகத்துக்குப் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அதனால் மனம் சொன்னபடி கேட்கும் திடமான தேகத்தையே பாரதி இங்கு சிவசக்தியிடம் வேண்டுகிறார்.
விசையுறு பந்தினைப் போல்
வீசி எறியப்பட்ட பந்து எறிபவர் செலுத்தும் திசையை நோக்கி எறிந்த வேகத்தின்படியே பாய்ந்து செல்லுவது போல, மனம் கட்டளையிடும் செயலை மனத்தின் விருப்பம்போல முடிக்கும் உடம்பே வலிமையானது. அத்தகைய உடல் திண்மையைப் பெரிதும் விழைந்த பாரதியார், தமது புதிய ஆத்திச்சூடியிலும் ‘உடலினை உறுதி செய்’, ‘ஊண் மிக விரும்பு’, ‘ரூபம் செம்மை செய்’ என்பன போன்ற முத்தான பொன்மொழிகளை நமக்கு அளிக்கிறார்.
பாரதியின் விசைபெற்ற இந்தப் பந்தோடு, ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்னும் பாட்டில் பாவேந்தர் பாரதிதாசன் விசையுடன் சுழற்றும் வாளை ஒப்பு நோக்கலாம்.
வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த
பாரதிதாசன்
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’
நசையறு மனம்
‘நசை’ என்னும் சொல் ‘ஆசை’ மற்றும் ‘பற்று’ என்று பொருள்பட இங்கு அமைந்துள்ளது.
மனம் சொன்னபடி கேட்கும் உடல் அமைந்துவிட்டால் மட்டும் போதாது; அந்த மனம் நிர்மலமான பற்றற்ற உயர்ந்த உள்ளமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் உடலைத் தப்பான வழிகளில் செலுத்தித் தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கக் கூடும். ‘பொன்னைப் பொருளைப் புகழை விரும்பிடும்’ கறைப்பட்ட மனத்தில் கவலை தங்கும்; அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் போன்ற தீய எண்ணங்கள் பெருகும். அத்தகைய கறை படிந்த மனம் வெளுக்க எந்த எளிய வழியும் இல்லாததால் சிவசக்தியிடம் சரண்புகுந்து நன்மனம் பெற வேண்டுகிறார்.
துணிவெளுக்க மண்ணுண்டு, – எங்கள் முத்து
பாரதி
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுக்கச் சாணையுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நசைபடிந்த மனத்தைப் பற்றி சிவவாக்கியர் என்னும் சித்தர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்கலாம். மனத்தில் தோன்றும் ஆசை முதலிய அழுக்குகளை வெல்லுவதற்குத் துறவறம் தேவையில்லை என்றும், இந்த உலகத்தின் இன்பங்களை அனுபவித்துக் கொண்டே அவற்றின் மீது பற்றில்லாமல் இருக்க முடியும் என்றும் இந்தச் சித்தர் தமது திருநூலான சிவவாக்கியத்தில் சொல்கிறார்.
மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்
சிவவாக்கியர்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்
‘ஆசை முதலிய மாசுகளை நீக்காத யோகிகள், காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்தாலும் அவர்களின் மனத்தில் இருக்கும் ஆசை நீங்காது. அதே சமயம், ஆசையிலிருந்து விடுபட்ட யோகிகள் உலக இன்பங்களை அனுபவித்துக் கொண்டு எங்கு வாழ்ந்தாலும், இறை நிலையை அடைவார்கள்’ என்று ஆன்ம வளர்ச்சிக்கு இடம் தேவையில்லை, கறையற்ற மனமே தேவை என்ற பொருள்படக் கூறுகிறார் சிவவாக்கியர். மேலும், ஆசைப்பட்ட பொருளை அடைய வேண்டுமானால் அந்தப் பொருள்மேல் உள்ள ஆசையை விடவேண்டும் என்றும், அப்படி ஆசையை விட்டுவிட்டால், அந்தப் பொருளை அடைவதற்குண்டான தடைகள் அகன்று அப்பொருள் தானாகவே நமக்குச் சீக்கிரம் கிட்டும் என்றும் கீழ்வரும் பாடல் வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார் சிவவாக்கியர்.
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
சிவவாக்கியர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே!!
‘கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ’ என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்ட பாரதியும், வையத்திற்குப் பயனுற வாழ்ந்திடத் தடையாக இருக்கும் ஆசையைக் கொன்று வெற்றி பெற ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் வரம் வேண்டுகிறார்.
நவமெனச் சுடர்தரும் உயிர்
‘நவம்’ என்றால் புதிது என்று பொருள்.
‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவகவிதை’ என்று தம் கவிதையின் புதுமை உணர்வைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் பாரதி, பழமையெனும் பிடியிலிருந்து விடுதலை பெறுவதை முக்கியமாகக் கருதினார்.
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
பாரதியார் (பாஞ்சாலி சபதம்)
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.
மேற்கண்ட பாடல், பாரதி படைத்த பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தில் வரும் மாலை வருணனைக் கவிதை. பாண்டவர்கள் அத்தினபுரத்திற்கு வரும் வழியில் பார்த்தன் பாஞ்சாலிக்குக் கதிரவனின் எழிலைக் காட்டி வருணிக்கிறான். வானத்தில் நிகழும் புதுமையெல்லாம் கணந்தோறும் மாறும் அழகினை உணர்த்தும் போது பாட்டின் ஒவ்வொரு அடியிலும் நவநவமாய்க் களிப்புத் தோன்றி நெஞ்சை நெகிழ்த்துகிறது. ”கணந்தோறும் அவள் பிறப்பாள்” என்னும் இடத்தில், இந்த புவனத்தைக் காத்தருளும் பராசக்தியே ஒவ்வொரு நொடியும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுப் பிறப்பதாால்தான், கணந்தோறும் உலகில் புதுப்புது மாற்றங்கள் நிகழ்கின்றனவோ என்று எண்ணி வியக்கிறார் நம் தெய்வக் கவிஞர்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
பாரதி
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
நடந்ததை நினைத்து நெஞ்சம் பதைக்காமல், இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினைத்துவிட்டாலே போதும்; எந்தக் கவலையும் நம்மை அணுகாது என்று நன்குணர்ந்தவர் பாரதி. பாம்பு தனது பழந்தோலை விலக்கிப் புதுத்தோல் பெறுவது போல, எந்நாளும் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும் இதயத்தைப் பெற வேண்டி இங்கு சிவசக்தியிடம் வேண்டுகிறார்.
தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல்லகம்
உடல் தசையைத் தீப்பிழம்புகள் பற்றி வருத்தும் போதும் பராசக்தியிடம் பக்திப் பெருக்கெடுத்து ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்று ஊனுருக அந்தாதி பாடிய அபிராமி பட்டரின் இறையன்பு பாரதியை மிகவும் நெகிழ்த்தியது.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
அபிராமி பட்டர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம், போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி. மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
பொருள் : எழுகின்ற செஞ்சூரியன், உச்சியிலே மங்கையர் வைத்துக் கொள்ளும் கும்குமத்திலகம், அறிவுடையவர்கள் மதிப்பிடுகின்ற மாணிக்கம், மாதுளம்பூ, தாமரை மலரில் உள்ள திருமகள் துதிசெய்கின்ற மின்னல்கொடி, மெல்லிய நறுமணமுடைய குங்குமக் கலவை நீர் என்று அன்பர்கள் உவமையாக எடுத்துச் சொல்கின்ற திருமேனியை உடைய அபிராமியம்மை எனக்கு மேலான துணையானவள்.
‘தீக்குள் விரலை வைத்தாலும்’ தெய்வத்தைத் தீண்டும் பேரின்பம் பெற்று சக்தியின் அருளைப் பாடும் நல்ல மனம் வேண்டும் என்று பாரதி இங்கே வேண்டுகிறார்.
கல்லோடு பூட்டிக் கடலில் விடப்பட்ட போதும் கயிலைத் தலைவனைத் துதிக்கும் மனம் கொண்ட நாவுக்கரசரையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
திருநாவுக்கரசர்
நற்றுணை ஆவது நமச்சி வாயவே
‘கல்லைத் துணையாகப் பூட்டிக் கடலில் என்னை விட்டுவிட்டாலும், நல்ல துணையாக இருந்து என்னைக் காப்பாற்றியது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தே’ – என்று நெஞ்சுருகப் பாடுகிறார் நாவரசர். அவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்தைத் தழுவிய காலத்தில், சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திர வர்ம பல்லவனால் கல்லோடு பிணிக்கப்பட்டுக் கடலில் தள்ளப் பட்டார். அப்போது இறையருளால் கல் மிதந்து அப்பர் பெருமானைக் கரை சேர்த்தது என்பர் பெரியோர்.
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
மாணிக்கவாசகர்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி
இறைவனை வணங்கவும் அவன் அருள் வேண்டும் என்று சிவ புராணத்தில் மாணிக்க வாசகர் சொன்னது போல, சிவசக்தியிடம் பக்தி பெருக சக்தியின் அருள் மிகவும் தேவை என்று பாரதியார் கருதினார்.
தாய்தடை என்றேன் பின்னர்த்
வள்ளலார்
தாரமே தடைஎன்றேன் நான்
சேய்தடை என்றேன் இந்தச்
சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந்
துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய்
என்செய்கேன் என்செய் கேனே.
வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகள் சொல்வதுபோல், பொதுவாக நமக்கெல்லாம் கடவுளை நினைக்கப் பல தடைகள் வந்து கொண்டே இருக்கும். முதலில் தாய், பின்னர் தாரம், அப்புறம் பிள்ளைகள் என்று ஆயிரம் தடைகள் வந்து நம்மைத் திசைதிருப்பி இறைவனை வணங்க விடாமல் தடுக்கும். ‘உன்னை அடைந்திட எனக்குத்தான் ஆயிரம் தடைகள், என்னை அடைய உனக்கு ஏது தடை?’ என்று இறைவனிடம் முறையிடுகிறார் வள்ளலார்.
பாரதியும் இந்தத் தடைகளையெல்லாம் தடுத்துத் தம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று இறைவனை‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் இறைஞ்சுகிறார்.
அசைவறு மதி
‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்று முழங்கிய பாரதி, வாழ்வில் இன்பம் துன்பம் என்று இவற்றில் எது வந்தாலும் சஞ்சலப் படாமல்,’நமக்கேன்’ என்று இருக்கும் மனத்தைப் பெற விழைகிறார்.
காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை. அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.
கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்)
கண்ணதாசன் சொல்வதுபோல், சலனமற்ற மெளன நிலையில் ‘சும்மா இருப்பதே சுகம்’ என்று இருந்தால் நிர்விகல்ப சமாதியில் நிலைக்கலாம். அத்தகைய நாடி அதிர்ச்சி அற்ற நன்னிலையில் மன நலமும் உடல் வளமும் பெருகும். ஜகதீச சந்திர வசு (Jagdish Chandra Bose) என்னும் பிரபல விஞ்ஞானி ‘மரணம் ஏன் ஏற்படுகிறது’ என்பதற்கான காரணமாக அறிவியல் ரீதியில் கண்டறிந்த உண்மையும் அதுவே. ‘பாரதி அறுபத்தாறு’ என்னும் பாடல் தொகுதியில், ‘நாடி அதிர்ச்சியே மரணத்திற்குக் காரணம்’ என்று சந்திர வசு கண்டறிந்ததாகவும், அதனால் நாம் அனைவரும் கோபத்தைத் தவிர்த்து அசைவற்ற அமைதி நிலையில் இருந்தால் உலகில் மரணத்தையும் வெல்லலாம் என்றும் பாரதி கருத்துரைக்கிறார்.
ஜகதீச சந்த்ரவஸீ கூறு கின்றான்:
பாரதியார் (பாரதி அறுபத்தாறு)
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்)
“நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்றான்.
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறியகோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலா மவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.
அத்தகைய அசைவற்ற நன்னிலையிலேயே ஆண்டவனைக் கண்ட சுந்தரரின் தூய உள்ளத்தின் மாண்பைச் சொல்லும் இந்தப் பெரியபுராணப் பாடல் நம் மனத்தை நெகிழ்ந்துருக வைக்கிறது. இறைவனின் திருநடனத்தைக் காண வந்த ஆரூரர், தில்லை ஆண்டவனின் நடனத் திருக்காட்சியைக் கண்டு அன்பே உருவாய் அசைவற்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் அழகாக இங்குக் காட்டுகிறார்.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
சேக்கிழார் ( பெரிய புராணம் )
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
அவ்வாறு சுந்தரர் அன்பு பெருக்கெடுக்க இறைவனின் திருநடனத்தைக் கண்டவண்ணம் அசைவற்று நிற்கும்போது, கண், மூக்கு , செவி, வாய், மெய் ஆகிய ஐந்து புலன்களும் ஒடுங்கி, கண்ணில் மட்டுமே உணர்வுகள் ஒருநிலைப்பட்டு குவிந்தன; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கரணங்களும் செயலற்று, வெறும் சித்தம் மட்டுமே செயல்பட்டு இறைநினைவு ஒன்றையே பற்றி நின்றது. ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களில் சத்துவ குணமே மேலோங்கி இருந்தது. இந்த அசைவறு மதிநலத்தால் ஆனந்த வெள்ளத்தில் திளைத்த சுந்தரர் என்றும் மாறாத மகிழ்ச்சியினால் தம் உளம் மலர்ந்தார்.
இதே கருத்தை மொழிபெயர்த்ததுபோல், டி. எச். ஹியூக்ஸ் என்னும் தத்துவப் பேரறிஞர் பின்வருமாறு கூறுகிறார்:
பக்தனுக்கு ஆன்மா ஒருமுகப்பட்டு அமைதியாக இருக்கிறது என்றால் அந்த அடக்கம் செயல் ஆற்றாமலும் சோம்பியும் இருக்கும் அடக்கம் அல்ல. பொறி புலன்கள் ஆகிய அனைத்தும் ஓரிடத்தில் குவிதலால், சித்தம் (consciousness) குவிதலும், உறுதி முதலிய கரணங்கள் ஒரே நிலையில் ஓரிடத்தில் ஒருமுகப்பட்டிருத்தலுமே ஆகும்.
டி. எச். ஹியூக்ஸ்
When the soul is said to be passive, the passivity is not a state of inactivity or lassitude. The will is not in abeyance, nor the various faculties inert. All the faculties are directed to one centre, so that there is a narrowing of the field of consciousness through the intense concentration of the will to one focal point.
T.H. Hughes (The Philosophic Basis of Mysticism Page.50)
அண்டம் சிதறினாலும் அஞ்சாத நெஞ்சுரமும், ஏது நேரினும் இடர்ப்படாமல் இருக்கும் மனவலிமையும், சுந்தரரைப்போல் அசையாத ஒருநிலைப்பட்ட சிந்தையையும் கேட்கும் பாரதி, தோன்றி அழியும் இந்த வாழ்க்கையில் இன்பம் துன்பம் வெறுமை என்னும் இம்மூன்றில் எது வந்தாலும் சமமாகப் பாவிக்கும் எண்ணம் படைத்த ஆன்ம பலம் கொண்டவர் என்பதில் ஐயமில்லை.
தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்
பாரதி
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும் – களி
மூழ்கி இருத்தல் பரசிவ முக்தி!
முடிவுரை
நமக்கு எந்த வரத்தைக் கொடுக்கவேண்டும் எதைக் கொடுக்கக்கூடாது என்று நன்கறிந்தவன் இறைவன். மிக்க அழுத்தத்துடன் நாம் ஒன்றை வேண்டினால் அதனையும் முழுவதுமாக அளிக்கும் அன்புள்ளமும் இறைவனுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், நம் மனத்தில் ‘வேண்டும்’ என்ற ஆசையை இறைவனே தோற்றுவிக்கிறான். இந்த அருமையான கருத்தை மாணிக்கவாசகர் பின்வரும் பாடலில் நமக்குத் தெரிவிக்கிறார்:
வேண்டத்தக்கது அறிவோய் நீ
திருவாசகம்
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உந்தன் விருப்பு அன்றே.
‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்ற மணிவாசகரின் வாக்குப்படி, எல்லாம் தரவல்ல சிவசக்தியிடம் யாரும் கேட்காத அரிய வரங்களை ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இப்பாடலில் கேட்கிறார் பாரதி.
கடவுளை உரிமையோடு ‘நேரே இன்று தருவாய்’ என்னும் தொனியில் இயல்பாகக் கேட்பது இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. ‘நான் கேட்பது பொன்னோ பொருளோ மண்ணோ மனையோ அல்ல,; இறவா வரமோ பிறவா வரமோ அல்ல; நான் கேட்பன உடல் வளமும் பற்றற்ற மனமும் புத்துயிரும் பக்தி நிறைந்த நல்லகமும் அசையா மதியும் தான். இவையெல்லாம் உன்னால் எளிதில் தரக்கூடிய வரங்களே. அதனால் காலம் தாமதிக்காமல் உடனே இவ்வரங்களைத் தா’ என்று கடவுளிடம் கேட்கும் துணிவும் தோழமையும் பாரதியிடம் தான் காண முடியும்.
‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி‘ என்னும் பாரதியின் சுயசரிதைக் கவிதையுடன் இந்தப் பாடலை ஒப்பு நோக்கலாம். ‘அறிவிலே தெளிவு’ பாட்டில் தெளிந்த அறிவையும், அன்பையும், மன ஆளுமையையும் தேடும் பாரதி, ‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டில் அந்த நற்பண்புகளை நன்முறையில் பயன்படுத்தும் வல்லமையை வேண்டுகிறார்.
மனிதனின் நிறைவாழ்வுக்கு வழிகாட்டும் இப்பாடல் கற்பவர் நெஞ்சில் ஆன்ம ஒளி பரப்பி வாழ்வின் உண்மையைக் காணச் செய்கிறது. ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் பிறர்நல நோக்கினைப் போல் , தனக்காக மட்டும் இல்லாமல் இந்த உலகம் பயன்பெறுவதற்காக இவ்வரங்களை யாசிக்கும் பாரதியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அந்த சிவசக்தியிடம் வேண்டுவோம்.
நொண்டிச் சிந்து – இலக்கண விளக்கம்
‘நல்லதோர் வீணை செய்தே’ என்னும் இந்தப் பாட்டு, ‘நொண்டிச் சிந்து’ என்னும் சிந்துப்பா வகையைச் சார்ந்தது.
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்
சிந்துப் பாவியல்
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து
நான்மை நடையுடன் நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது
நொண்டிச் சிந்தென நுவலப் படும்.
இவ்வாறு சிந்துப்பாவியல் என்னும் இலக்கண நூல் நொண்டிச் சிந்தின் அமைப்பை விளக்குகிறது. இந்த நூற்பாவின்படி, ‘ எட்டு சீர்களைக் கொண்ட இரண்டு அடிகளில் ஓர் எதுகை அமைந்து, ஓவ்வொரு ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்து, நான்காம் சீரில் தனிச்சொல் பெற்று, நான்மை என்னும் தாள நடையுடன் செவிக்கு இன்பம் தருவது நொண்டிச் சிந்து எனப்படும்’. இந்த இலக்கண விதியை ஐந்து கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து பார்க்கலாம்.
எண்சீர் அடிகள்

நொண்டிச் சிந்தின் ஒவ்வொரு அடியும் எட்டுச் சீர்களைக் கொண்டது என்பதை இந்தப் படம் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு அடிகளில் ஓர் எதுகை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண் டோ?
சொல்லடி சிவசக் தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட் டாய்
சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடங்களில், அதாவது ஓவ்வொரு அடியின் முதற்சீரிலும், ஒரே எதுகை வந்துள்ளமை காண்க. நொண்டிச் சிந்தின் இலக்கணப்படி இரண்டிரண்டு அடிகளில் ஒரே எதுகை அமைந்திருந்தால் போதும். ஆனால், பாரதியோ நான்கு அடிகளிலும் ஒரே எதுகை அமைத்துச் ‘சிந்துக்குத் தந்தை’ என்னும் தம் பெயரை இங்கு நிலை நாட்டுகிறார்.
ஐந்தாம் சீரில் மோனை
நல்லதோர் வீணைசெய் தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண் டோ?
இந்தப் பாட்டில் ஒவ்வொரு அடியிலும் முதலாம் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அழகுற அமைந்துள்ளதைக் காணலாம்.
நான்காம் சீரில் தனிச்சொல்
நல்லதோர் வீணைசெய் தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண் டோ?
நொண்டிச் சிந்தில் ஒவ்வொரு அடியிலும் நான்காம் சீரில் தனிச்சொல் அமைந்திருக்கும்.
நான்மை என்னும் தாள நடை
சிந்துப்பாக்கள் சீர்களின் அமைப்பை ஒட்டி நான்கு வகையான நடைகளில் வரும். அவை மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை என்னும் நடைகளாம். ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்கள் வந்தால் அதை மும்மை நடைப் பாடல் என்பர். உயிர்கள் தனித்தோ அல்லது உயிர்மெய்யாகவோ வரலாம். அதேபோல், நான்மை, ஐம்மை மற்றும் எழுமை நடைப் பாடல்களில் ஒவ்வொரு சீரிலும் முறையே நான்கு, ஐந்து மற்றும் ஏழு உயிர்கள் பயின்று வரும்.
இந்த வகையில் பார்ப்போமானால், நொண்டிச் சிந்துகள் பெரும்பாலும் நான்மை நடையிலேயே அமைந்திருக்கும். நான்மை நடையில் அமைந்த சீர்கள் தகதிமி, ததிங்கிண, தாதீம், தகதீம், தாம்கிட, ததீம்த முதலிய தாள ஓசையுடன் ஒலிக்கும். ‘நல்லதோர் வீணை’ என்னும் இந்தப் பாட்டின் முதலடியை எடுத்துக்காட்டாக இங்குப் பார்ப்போம்.
நல்லதோர் வீணைசெய் தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண் டோ
இந்த அடி கீழ்வரும் தாளத்தில் ஒலிப்பதைக் காணலாம்.
ததிங்கிண தகதிமி தகதிமி தா
தொடர்புடைய பதிவுகள்
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
‘அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி’ என்று தொடங்கும் இந்தப் பாடல் பாரதியார் எழுதிய ‘சுயசரிதை‘ என்னும் சுவைமிகுந்த கவிதை நூலின் இறுதிப் பாட்டாகச் சிறப்புற அமைந்துள்ளது. பாரதியின் ‘பகவத் கீதை மொழிபெயர்ப்பு ‘ என்னும் அருமையான நூலின் சாரமாக இந்தப் பாடல் திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. கலங்காத அறிவும் மனத்துணிவும் கடல்போன்ற அன்பும் மனக்கட்டுப்பாடும் கடவுள் பக்தியும் பற்றற்ற செயல்திறனும் பெற வேண்டி உருவமும் குணமும் இன்றி எங்கும் நிறைந்த பரம்பொருளைப் பிரார்த்திக்கின்றது இந்தப் பாடல். இப்பாடலின் பொருளை இங்கு சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறி என்னும் அக்கினிக் குஞ்சை, மனத்தில் உறைந்திருக்கும் சிறுமை எனும் மரப்பொந்தில் இட்டேன். அந்தச் சிறு பொறியின் சக்தியால் மனத்தின் சிறுமைகள் மடிந்தது மட்டுமல்லாமல், அச்சம், மடமை, துன்பம்,பொய் முதலிய தீமைகள் அனைத்தையும் கொண்ட மனமென்னும் காடே ஒட்டுமொத்தமாக எரிந்து நற்குணங்கள் வெளிபட்டுத் தெளிவுற்றது. இந்த விந்தை நிகழ்வு உணர்த்தும் உண்மை யாதெனில், வாழ்வில் அல்லவை தேய்ந்து அறம் பெருக வைக்க, பலனளிக்காத ஆயிரம் செயல்கள் செய்வதைக் காட்டிலும், செம்மைப்பட்ட சக்தி வாய்ந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும் போதும்; தீமைகள் எல்லாம் மாய்ந்து துயர் தீரும். எழுச்சிமிக்க எண்ணத்தின் சக்தியில் சிறியது பெரியது என்ற பாகுபாடில்லை; ஒரே ஒரு எண்ணத்தையோ, சொல்லையோ, செயலையோ கொண்டு பெரியதொரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு.
மிக தெளிவான விளக்கம் அய்யா.. நான் படித்து மகிழ்ந்தேன் .. பாரதியாரின் கவிதைகளில் இவளோ பெரிய விளக்கம் உள்ளது என்று இப்போது புரிதீன் உங்களுடைய விளக்கத்துடன்.. அதுவும் வேற மனிதர்கள் எழுதிய கவிதைகளுடன் பாரதியின் கவிதைகளை விலக்குறீங்க .. அதுவும் மிக சிறப்பா இருக்கிறது .. உங்கள் சிறப்பான பனி தொடரட்டும் ..
– சரண்
தங்கள் வருகைக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!
விளக்கங்களைப் படித்து நீங்கள் களிப்படைந்ததை அறிந்து மகிழ்கிறேன்.
அன்புடன்
இமயவரம்பன்
படித்ததில் பிடித்தது, பாரதி பாடல்கள்.
தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகவும் நன்றி!
அன்புடன்
இமயவரம்பன்
வணக்கம் . அருமையான விளக்கம். படித்துச் சுவைத்தேன்! சுவை தேன் !
வணக்கம்!
தேன் போன்று இனித்திடும் கருத்தினை இட்டமைக்கு மிக்க நன்றி!
அய்யா நீங்கள்,தமிழ் எங்களுக்கு தந்த கொடை. பொருட் சுவை யை க் கொடை யாக தரும் வள்ளல் நீங்கள்
மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றி!
கட்டுரை சற்றே நீண்டது எனினும் விளக்கம் அருமையாக உள்ளது.
மிக்க நன்றி முனைவர் அவர்களே!
Sabbash. miga arumai. katturai ruchi mikkathu vaazga,
yogiyaar
கவியோகியாருக்கு மிக்க நன்றி!
மகிழ்ச்சியும்.. நன்றியும்…
https://www.scientificjudgment.com/
Nycc….🔥🔥🔥
Its truly a divine blessing which made me to see your website. My mentor Bharthiyar’s poems have changed this life completely.
What a translation and explanation you have given. Deep respects to your great work. May your Tribe increase!
Thank you very much for your kind words!