கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
– மகாகவி பாரதியார்
‘நரை கூடிக் கிழப்பருவம் எய்தி’ – ஞானத்திலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாமல் தலைநரைத்து வயது முதிர்ந்து முதுமை அடைந்தவர்களின் வாழ்க்கை தமக்கும் தம் சந்ததியினருக்கும் எந்த வித நன்மையும் அளிக்காத வீண்வாழ்வாகவே முடியும். இந்தப் பேருண்மையைச் சொல்லும் பெருங்கவிஞரின் இந்த ஞானமொழிகளின் கருத்தை இப்பதிவில் ஆய்ந்து நோக்குவோம்.
விளக்கவுரை
மையறும் புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்…
கொற்றவா, நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி அழிகிலேம்.
வெற்று வாழ்க்கை வாழ்வதை வெறுத்து, வெற்றியைத் தரும் புகழ் வாழ்க்கை வாழ்ந்திடக் கொற்றவனின் அருளை வேண்டி நிற்கும் வீரக் கவிஞன் பாரதி. சாதாரண மனிதர்களைப் போலத் தின்றுத் தூங்கித் துயர்கொண்டு வாடிப் பின்பு தலைநரைத்து வீணே மடியும் வாழ்க்கை அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தான் வாழ்ந்ததற்கான பாதச்சுவடுகளை நிலத்தில் பதியச் செய்து வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டும் விளக்காகத் தன் வாழ்க்கை விளங்கவேண்டும் என்று விரும்பினான். ‘உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறுமாறு நூறு வயது புகழுடன் வாழும் வாழ்க்கை’ வாய்க்காமல் நிலச்சுமையென வாழ்ந்திடும் நிலை தனக்கு ஏற்பட்டால், தன் உயிரைச் சாய்த்துவிடுமாறும் இறைவனைக் கேட்கின்றான்.
அக்கினியின் சக்தியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லையென்ற உண்மையைக் கண்ட பாரதி, இளமையில் வலிமையும் வாய்ப்பும் இருந்தபோது பின்பற்றப்பட்ட சீரிய கொள்கைகளும் நன்னெறிகளும் முதிய வாழ்விலும் தொடரப்பட வேண்டும் என்று கருதினான். தன் உடல் தளர்ந்து மெலிவுற்று வயதான பின்னும் பிறர் அளிக்கும் சோற்றுக்காகக் கைகட்டிச் சேவகம் செய்யாமல் சிங்கம் போல வாழவேண்டும் என்றும், ‘நெறி இழந்தபின் வாழ்வதில் இன்பமும் சிறப்பும்’ கிடையாது என்றும் சாற்றும் அவனது கருத்து
‘அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கோர் புன் நரி தந்திடும் ஊன் உண்ணாச்
சிங்கமே என வாழ்தல் சிறப்பு’
என்னும் வரிகளில் மின்னுவதை நாம் உணரலாம்.
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை மூப்பு மில்லை – என்றும்
சோர்வில்லை நோயொன்றும் தொடுவதில்லை.
கண்ணனைத் தன் தந்தையாகப் பாவித்து வடித்த இந்தக் கவிதையில் காட்டப்படுவதுபோல் ‘ஒரு கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குண்டான மனத் திடமும், இளைஞருடைய உற்சாகமும், குழந்தையின் மாசற்ற இதயமும் எப்போதும் இருந்துவிட்டால் துயரமும் சோர்வும் நோயும் நம்மை அணுகாது’ என்பதை உணர்த்துகின்றான் நம் பெருங்கவிஞன்.
மூத்தவர்கள் வாழ்ந்து காட்டும் முறையை வைத்தே இளையவர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும். பெரியோர்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் அந்த ஒழுக்கம் என்றும் நிலைக்கும். வெற்றுவார்த்தைகள் என்றுமே உபதேசம் ஆகாது. ‘என் வாழ்க்கையே என் உபதேசம்’ என்று காந்தியடிகள் மொழிவதைப்போல், முதியவர்கள் நல்ல நீதியைப் புகட்டுவதாக தம் வாழ்க்கையை அமைக்க அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நற்செயல்களைச் செய்யாத முதியவர்களைப் ‘பயனின்றி மூப்படைந்தவர்கள்'(பயனில் மூப்பு) என்று சொல்லும் நரிவெரூஉத்தலையாரின் இந்தப் புறநானூற்றுப் பாடலும் இங்குக் காணத்தக்கது:
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
நரிவெரூஉத் தலையார் (புறநானூறு)
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ, 5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்!
நரைகூடிக் கிழப்பருவம் அடைந்து, அறிவு முதிர்ச்சியில்லாமல் பயன் அற்ற முதுமையை உடைய பெரியவர்களைப் பார்த்து, ‘யாருக்கும் நல்லது செய்யவில்லை என்றாலும் சின்னஞ் சிறு கதைகள் பேசிக் கலகத்தை உண்டாக்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து சமுதாயத்தைச் சீரழிக்காமலாவது இருங்கள்’ என்று அறிவுரை கூறும் நரிவெரூஉத்தலையாரின் கடிந்துரைக்கும் பாங்கு பாரதியின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தப் பாடலிலும் நம்மால் காணமுடிகின்றது.
‘நரைகூடி’ என்பதை ‘அறிவும் அனுபவமும் முதிராமல் தலை முடி மட்டுமே நரையால் முதிர்ந்து’ என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். மேலும், ‘கிழப்பருவம்’ என்னும் இடத்திலும், யாருக்கும் பயன் இல்லாமல் முதுமை அடைந்தவர்களை வெறும் ‘கிழவர்கள்’ என்று பழித்துரைக்கிறான் பாரதி. வாழ்நாள் முழுவதும் தம் இளமைக்காலம் தொட்டுத் தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதைகளைப் பேசிப் பொழுதைப் போக்கி, மனம் வாடி, பிறரையும் வருத்தி வாழ்ந்தவர்கள் எந்த வித அறிவையும் தெளிவையும் தம் முதுமைக்காலத்திற்கு சேர்த்துவைக்கத் தவறியவர்களே ஆவர். அவர்களது கிழப்பருவத்தில் அன்பும் அறமும் இன்பமும் குறைந்து வெறும் நரையே கூடுகிறது. தன் வாழ்வின் முடிவில் ‘பயனில் மூப்பு’ உடைய முதுபெருங்கிழவனாகத் தன்னை ஆக்காமால் காக்க வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வேண்டிக்கொள்வது, நம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் நல்லறம் செய்யவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நமக்கு அறிவுறுத்தும்வகையில் அமைந்திருப்பதை நாம் உணர்ந்தொழுகலாம்.