பல்லியும் சகுனமும் – ஓர் ஆய்வுக் கட்டுரை

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு பகுதிகளில், பல்லிகள் எழுப்பும் ஒலிகளையும் அவை உடல்மேல் விழும் நிகழ்வையும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிவிக்கும் சகுனங்களாகவே கருதுகின்றனர். 

பல்லியின் ஒலியால் விளையும் தீமைகள் – Bad Omens from Gecko’s cry

“தும்மல் மற்றும் பல்லிகளால் விளையும் கெட்ட சகுனங்களில் நம்பிக்கையில்லாதவன் ஒரு கழுதை” என்று வங்காளத்தில் ஒரு பழமொழியே உண்டு.  “ஒரு மனிதன் பேசும்போது  பல்லி ஒலி எழுப்பினால் அவன் சொன்னது உடனே நடக்கும்” என்னும் நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு. 

ஒரு பல்லியின் ஓசைக்கு பதிலாக நாம் அதைப்போலவே ஒலி எழுப்பவில்லையென்றால் கெடுதல் உண்டாகும் என்று  வட இந்தியாவில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தென்னிந்தியாவிலோ, பல்லியின் ஓசை கிழக்கு அல்லது மேற்குச் சுவரிலிருந்து வந்தால் அதிர்ஷ்டம் என்றும், மற்ற திசைகளிலிருந்து வந்தால் தீய சகுனம் என்றும் கருதி, அதற்குத் தகுந்தாற்போல் காரியங்களை உடனே முடிக்கவோ தள்ளி வைக்கவோ முனைவார்கள். 

பல்லி விழும் பலன் – Palli vilum palan – Gecko falling on the body – Good or bad?

எஸ்.எஸ்.மேத்தா அவர்கள், இந்தியக் கலாச்சார நம்பிக்கைகளைப் பற்றி எழுதும்போது, பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“ பல்லி ஒரு மனிதனின் உடல்மேல் விழுந்தால் , அந்த மனிதன் சில நாட்களில் நோய்வாய்ப்படுகின்றான்; அவன் உறங்கும் போது  உடலில் பல்லி ஊர்ந்துவிட்டால், அவனுக்கு ஓரிரு நாட்களிலேயே மரணம் சம்பவிக்கும்”

“பல்லி உடல்மேல் விழுந்தாலோ,  அது சிறு நீர் கழித்தாலோ உண்டாகும் கெட்ட சகுனத்தை உடல்மேல் கங்கை நீரைத் தெளிப்பதனால் போக்கிடலாம்” என்பர் வங்க மாநிலத்தவர்கள். பல்லி விழுவதால் உடலில் கொடிய தோல் நோய் பரவுமென்றும் அந்த நோயைத் தங்க நீர்க் குளியல் மூலம் தடுத்திடலாம் என்றும் பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசத்தினர் நம்புகின்றனர்.  

வலது தோளில் பல்லி விழுந்தால் நல்ல சகுனம் என்றும், அதுவே இடது தோளில் விழுந்தால் தீமையென்றும் உத்திர பிரதேசத்தினரிடையே நம்பிக்கை நிலவுகிறது.  பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உள்ள மக்களின் நம்பிக்கைபடி, ஒருவன் தலைமீது பல்லி விழுமானால் அவன் அரசனாக ஆகி விடுவான். தென்னிந்தியர்களும் பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும் என்று நம்புகிறார்கள்.

இவ்வாறு  பல்லி என்னும் சிறு பிராணி எழுப்பும் ஓசையும் உடல் தீண்டலும் இந்தியத் துணைகண்டதின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கும் நம்பிக்கைகளாகத் திகழ்வதைக் காணலாம்.

குறிப்பு: இந்தக் கட்டுரை ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளரான Jurgen W.Frembgen அவர்கள் எழுதிய ‘The Folklore of Geckos: Ethnographic Data from South and West Asia’ என்னும் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

Leave a Reply