பஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

பஞ்சாயுத விருத்தம் - திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

Panchayudha Viruttam

பஞ்சாயுத விருத்தம்

பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்
கவிதைகள் : இமயவரம்பன்

அச்சம் அகற்றும் அருட்சக்கரம் – ஶ்ரீ சக்கரத்தாழ்வார் துதி

தீயுமிழ்ந் தெழும்பும் செந்தழல் அலைகள்
  திசைதிசை பரவிட ஒளிர்வாய்!
காய்சினம் தெறிக்கக் கனன்றெழுந் தசுரர்க்
  கடுந்தொழில் கெடச்செருக் கிளர்வாய்!
ஆயிரம் இரவிக் கதிர்க்கரம் விரித்தே
  அஞ்சலென் றடைக்கலம் அருள்வாய்!
தூயவர் துதிக்க மாயவன் கரத்தில்
  சுழன்றொளி துலங்குசக் கரமே!

பொருள்

தூயவர் துதிக்க = தூய நெஞ்சினர் உன்னைத் துதித்தெழுமாறு
மாயவன் = மாயவனாகிய ஶ்ரீமன் நாராயணனுடைய
கரத்தில் = திருக்கரத்தில் விளங்கி
சுழன்று = எப்போதும் சுழன்றுகொண்டிருக்கும்
ஒளி துலங்கும் = ஒளி வீசுகின்ற
சக்கரமே = திருச்சக்கரமே!
தீ உமிழ்ந்து = நெருப்புப் பொறிகளை இறைத்து
எழும்பும் = மேலே எழும்புகின்ற
செந்தழல் = சிவந்த தழல்களை வீசும்
அலைகள் = தீயலைகள்
திசைதிசை = திசைதோறும்
பரவிட = பரவும்படியாக
ஒளிர்வாய் = சுடர் ஒளி வீசுகிறாய்!
காய் சினம் = சுட்டெரிக்கும் சினம்
கனன்று = கனல் போலத்
தெறிக்க = தெறிக்குமாறு
எழுந்து = பொங்கி எழுந்து
அசுரர் = அசுரர்களின்
கடுந்தொழில் = தீய செயல்கள்
கெட = ஒழியும்வகையில்
செரு = போர்க்களத்தில்
கிளர்வாய் = பராக்கிரமத்தைக் காட்டுவாய்!
ஆயிரம் இரவி = ஆயிரம் சூரியர்களின்
கதிர் = ஒளிக்கதிர்களைப் போன்ற
கரம் = கரங்களைப்
விரித்தே = பரப்பி
அஞ்சல் என்று = ‘அஞ்சாதே’ என்று சொல்லி
அடைக்கலம் அருள்வாய் = (உன்னைச் சரணடைந்த எனக்கு) அடைக்கலம் அருள்வாயாக!

நலம் புரியும் வான்சங்கு – ஶ்ரீ பாஞ்சசன்னியத் துதி

கோடிவெண் திங்கள் குளிர்கிர ணங்கள்
  குழைத்தொளிர் வெள்ளியொண் ணிறத்தாய்!
காடுலாம் அரியின் கருச்சனை அதுபோல்
  கடுஞ்சமர் முழங்கிடும் வலத்தாய்!
ஈடிலா நாதத் தேழிசை யாவும்
  இயைந்திடும் இன்னொலிச் சுரத்தாய்!
நாடரும் நலத்தாய்! நாரணன் கரத்தாய்!
  நவையறு பாஞ்சசன் னியமே!

பொருள்:

நவையறு = குற்றமற்று விளங்கும்
பாஞ்சசன்னியமே! = பாஞ்சசன்னியம் என்னும் திருநாமம் கொண்ட வலம்புரி சங்கே!
கோடி வெண் திங்கள் = கோடி வெண் நிலவுகளின்
குளிர் கிரணங்கள் = குளுமைமிக்க ஒளிக்கதிர்களையெல்லாம்
குழைத்து = சேர்த்துக் குழைத்தது போல
ஒளிர் = ஒளி வீசுகின்ற
வெள்ளி = வெள்ளிபோல்
ஒண் = பிரகாசமான
நிறத்தாய் = வண்ணத்தைக் கொண்டிருப்பாய்!
காடு உலாம் = காட்டில் உலவுகின்ற
அரியின் = சிங்கத்தின்
கருச்சனை அதுபோல் = கர்ச்சனையைப் போல
கடும் சமர் = கடுமையான போர்களில்
முழங்கிடும் = ஒலி முழங்குகின்ற
வலத்தாய் = வலிமை கொண்டிருப்பாய்!
ஈடிலா = நிகர் இல்லாத
நாதத்து = ஓசையை உடைய
ஏழ் இசை யாவும் = ஏழு விதமான இசைகள் எல்லாம்
இயைந்திடும் = ஒன்றாய்ச் சேர்ந்திடும்
இன்னொலி = இனிமையான ஒலியை உடைய
சுரத்தாய் = ஸ்வரத்தைக் கொண்டிருப்பாய்!
நாடு அரும் = யாராலும் விரும்பி அடைய முடியாத
நலத்தாய் = நலத்தைக் கொண்டிருப்பாய்!
நாரணன் = ஶ்ரீமன் நாராயணனுடைய
கரத்தாய் = திருக்கரத்தில் விளங்குவாய்! போற்றி!

தெளிவருளும் கதாயுதம் – ஶ்ரீ கெளமோதகித் துதி

மேருமால் வரைபோல் பெருந்திரு வுருவும்
  மேவலர் வெருவுவெந் திறலும்
பூரணப் பொலிவும் பொன்னொளி விரவும்
  பொருவரும் பொற்புமிக் குடையாய்!
சீரறத் திரியும் ஐவரைச் செறுத்துச்
  சிந்தைசெவ் வழியுற அருள்வாய்!
ஏருற இலங்கும் சிரீதரன் திருக்கை
  ஏந்துகெள மோதகிக் கதையே!

பொருள்:

ஏர் உற = அழகுடன்
இலங்கும் = திகழ்கின்ற
சிரீதரன் = திருமகள் தங்கும் மார்பனான திருமால்
திருக்கை = தனது திருக்கரத்தில்
ஏந்து = ஏந்துகின்ற
கெளமோதகிக் கதையே = கெளமோதகி என்னும் திருநாமத்தை உடைய கதாயுதமே!
மேரு = மேரு என்று சொல்லக்கூடிய
மால் = பெரிய
வரை போல் = மலையைப்போல
பெரும் திரு உருவும் = பெரிய திருவுருவத்தையும்
மேவலர் = பகைவர்களை
வெருவும் = அஞ்சி நடுங்கவைக்கும்
வெம் திறலும் = கடுமையான போர்வலிமையையும்
பூரணப் பொலிவும் = முழுமையான தேஜஸையும்
பொன்னொளி = பொன்போன்ற ஒளிக்கதிர்களின்
விரவும் = சாயல் கலந்த
பொருவு அரு = ஒப்பற்ற
பொற்பும் = அழகையும்
மிக்கு = மிகுதியாக
உடையாய் = கொண்டிருப்பாய்!
சீர் அற = அற நெறியிலிருந்து தவறுமாறு
திரியும் = (மனம் சொன்னபடி கேட்காமல்) அலைந்து திரியும்
ஐவரை = செவி, வாய், கண், மூக்கு, உடல் ஆகிய ஐந்து இந்திரியங்களையும்
செறுத்து = (தீய வழியில் செல்லாமல்) தடுத்து நிறுத்தி
சிந்தை = மனத்தை
செவ்வழி உற = நன்னெறியில் செலுத்த
அருள்வாய் = அருள்புரிவாயாக!

பிறப்பறுக்கும் பெருவாள் – ஶ்ரீ நாந்தகத் துதி

வெற்றிவாள் வயிரத் திண்திறல் ஒளிர்வாள்
  வீரவாள் மின்னுவெண் சுடர்வாள்
பற்றறுத் தெண்ணில் பிறவியும் அறுத்துப்
  பழவினை அறுத்திடும் அருள்வாள்
குற்றமே பெருக்கிக் கொடுந்தொழில் புரிவோர்
  குலம்கெட வீழ்த்திடும் அடல்வாள்
நற்றவர் ஏத்தும் மதுசூத னற்கை
  நந்தக வாளென்றன் காப்பே!

பொருள்:

நற்றவர் = தவத்தில் சிறந்தவர்கள்
ஏத்தும் = போற்றித் தொழுகின்ற
மதுசூதனன் கை = மதுசூதனனான திருமாலின் திருக்கரத்தில் விளங்கும்
நந்தக வாள் = நந்தகம் என்னும் திருநாமத்தை உடைய வாளானது
வெற்றி வாள் = வெற்றி மிகுந்த வாள்;
வயிர = வைரத்தைப் போல
திண் = உறுதிவாய்ந்த
திறல் = வலிமை
ஒளிர் வாள் = பொருந்திய வாள்;
வீர வாள் = வீரம் விளங்கும் வாள்;
மின்னும் = பிரகாசமான
வெண் சுடர் வாள் = வெண்மை மிகுந்த சுடர் வீசும் வாள்;
பற்று அறுத்து = (பொய்ம்மையின் மீது உள்ள) பற்றையெல்லாம் அழித்து,
எண்ணில் = அளவிடமுடியாத
பிறவியும் அறுத்து = பிறவிகளையெல்லாம் தடுத்து,
பழவினை = முற்பிறவிகளில் செய்த வினைகளின் பலன்களையெல்லாம்
அறுத்திடும் = தடுத்து ஒழிக்கும்
அருள் வாள் = அருள்வாய்ந்த வாள்;
குற்றமே பெருக்கி = செய்யும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிகரிக்குமாறு
கொடுந்தொழில் = கொடுமையான பாவச்செயல்களைப்
புரிவோர் = புரிபவர்களின்
குலம் கெட = குலம் அழியும்படியாக
வீழ்த்திடும் = அவர்களைத் தோற்கடித்து வீழ்த்துகின்ற
அடல் வாள் = சக்திவாய்ந்த வாள்;
என்றன் காப்பே = (அத்தகைய பெருமை வாய்ந்த நந்தக வாளானது) எனக்குக் காப்பாக அமையும்!

நலிவைத் தடுக்கும் நாரணவில் – ஶ்ரீ சார்ங்கத் துதி

வானெழும் இடிபோல் நாணதிர்ந் தொலிக்க
  வருமிடர் தொலைந்ததென் றுவந்தே
வானவர் வணங்க தானவர் நடுங்க
  மழையென அடுகணை பொழிவாய்!
நானிலம் மகிழ நலமுடன் திகழ
  நலிதரும் பிணியொழித் தருள்வாய்!
சானகி கேள்வன் தோளணி செய்யும்
  சார்ங்கமென் னும்தனிச் சிலையே!

பொருள்:

சானகி கேள்வன் = ஜானகியின் கணவனான இராமபிரானின்
தோள் அணி செய்யும் = திருத்தோளை அலங்கரிக்கும்
சார்ங்கம் என்னும் = சார்ங்கம் என்னும் திருநாமத்தை உடைய
தனி = தன் நிகர் இல்லாத
சிலையே = தனுசே!
வான் எழும் = வானத்தில் ஒலிக்கின்ற
இடிபோல் = இடியோசையைப் போல
நாண் = உனது நாணானது
அதிர்ந்து = அதிர்வினை உண்டாக்குமாறு
ஒலிக்க = ஒலி முழங்க
வரும் இடர் = ‘இனி வரக்குடிய துன்பங்களெல்லாம்
தொலைந்தது = ஒழிந்துவிட்டன’
என்று உவந்தே = என்று மகிழ்ச்சி கொண்டு
வானவர் வணங்க = வானத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் உன்னை வணங்கி வழிபடுமாறும்
தானவர் = அசுரர்கள் எல்லாம்
நடுங்க = அஞ்சி நடுங்குமாறும்
அடு = அழித்தொழிக்கும்
கணை = அம்புகளை
மழை என பொழிவாய் = மழை போலப் பொழிவாய்!
நால் நிலம் = நான்கு வகையான நிலப்பரப்பை உடைய இவ்வுலகமானது
மகிழ = இன்புறவும்
நலமுடன் திகழ = எல்லா நலன்களையும் பெற்று வாழ்ந்திடவும்
நலிதரும் = மிகுந்த துன்பத்தைத் தருகின்ற
பிணி = நோய்களெல்லாம்
ஒழித்து அருள்வாய் = நீங்குமாறு அருள் செய்வாய்!

கவிதைகள்
இமயவரம்பன்

This Post Has 4 Comments

  1. Sam

    Panjaayudha virufham . Excellent. It is having a classical vocabulary. Very few places வகையுளி present.

    1. இமயவரம்பன்

      Thank you very much for appreciating my poetry!

  2. அகிலா இராஜாராமன்

    அருமையான விருத்தம். அழகான தமிழ் நடை. ஒவ்வொன்றும் நன்கு புரியும்படி அமைந்த மொழி வன்மை. சிறப்பு. வாழ்த்துகள். பாராட்டுகள். ஆசிகள்.

    1. இமயவரம்பன்

      தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

Leave a Reply