ஞானிகள் நடந்த நல்வழிகள் | Philosophers and their paths

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய மெய்ஞ்ஞானிகள் வெகு சிலரே ஆவர். அத்தகைய ஞானியரில் என் மனம் வியந்த சான்றோரைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

தமிழிசையை வளர்த்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களையும், வேதாந்தம் கற்பித்த விவேகானந்தரையும், ‘நீயே உனக்கு ஒளியாவாய்’ என்று ஞானம் சொன்ன புத்தரையும், மனிதர்கள் துயரிலிருந்து விடுபட பரிவுடன் போதித்த ஜே கிருஷ்ணமூர்த்தியையும் பற்றி முதல் பாட்டில் காணலாம்.

‘நான்யார்’ என்ற ஆத்ம விசாரணையைப் போதித்த ஶ்ரீரமணரையும், வாழ்க்கை சிறப்புற பொன்மொழிகள் பேசும் கலீல் ஜிப்ரானையும், அன்பால் உருக வைக்கும் கவிசொல்லும் தாகூர் பெருமானையும் பற்றி இரண்டாம் பாட்டில் பார்க்கலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
   ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
   விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்,
"சேருமொளி ஆவாய்நீ உனக்கே" என்று
   தெளிவித்த புத்தனின்சொற் பொருளை ஆய்ந்தேன்,
பார்பிணைக்கும் தளையகன்று சிறுமை சாயப்
   பரிவுடன்'ஜே கே'மொழிந்த உரைகேட் டேனே!
நான்யாரென்(று) ஆத்மவிசா ரணைசெய் தாலே
   ஞானங்கொள் வாயென்றார் ரமண யோகி,
தேனூறும் கவிதையில்வாழ் நெறியைச் சொல்லிச்
   சிந்திக்கச் செய்தார்நம் கலீல் ஜிப்ரான்,
தானாகக் கண்சொரிய மனம் உருக்கும்
   கீதாஞ்ச லிதந்தார் தாகூர் எம்மான்,
வானோடு மண்ணாளும் அன்பைச் சொல்லும்
   மாமனிதர் இவர்களென்றன் நெஞ்சாள் வாரே!

Leave a Reply