பிறர் வாடப் பல செயல்கள் செய்து

தேடிச் சோறுநிதந் தின்று — பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து

          – மகாகவி பாரதியார்

‘பிறர் வாடப் பல செயல்கள் செய்து’ – துன்புறுத்தித் துயர் கொடுத்துத் தொல்லை வினைகள் புரிந்து பிறர் வாழ்வைச் சிதைக்க நினைக்கும் மதிகெட்ட மூடர்களின் நெறிகெட்ட செயல்களைப் பழிக்கும் பாரதியின் இந்தச் சொற்களில் புதைந்துள்ள உணர்வுகளை இந்தப் பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.

விளக்கவுரை

“பசிக்குச் சோறு எப்படி வந்தாலும் சரி. பொழுது போக்க எதையும் பேசுவோம். இதயம் வாடுவோம்; இடர்களைப் புரிவோம்” என்னும் விலங்கு நிலையோடு முடிகிறது எண்ணற்றவர்களின் பிழைப்பு. இத்தகைய இழிந்த வாழ்வை வாழும் மனிதனின் அவலநிலைகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பரிகசிக்கும் சொற்சித்திரமே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் கவிதை.

மனிதன் தன்னையே மையமாகக் கொண்ட தன்னல வாழ்வில் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ வயிற்றை நிரப்புகின்றான். ‘நான் எனது’ என்று எண்ணும் இந்தச் சிறுவட்டத்தில் சிக்கிக்கொண்டு, சின்னஞ் சிறு கதைகளைப் பேசிக் கலகத்தையும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் பெருக்குகிறான். இவ்வாறு பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பொய்ச்சாத்திரம் பேசுவதால் மனம் வாடித் தவித்த மனிதன் தன் துன்பநிலைக்குச் சரியான காரணத்தைத் தேடாமல், யார் மீதாவது எதன் மேலாவது பழி சுமத்தப் பார்க்கிறான். முதலில் விதியின் மேல் பழிசுமத்துவான்; பின்னர் தன் நண்பர்களைத் தூற்றுவான்; பகைவர்களை நிந்திப்பான்; ‘கடவுளே இல்லை’ என்று நாத்திகம் கூடப் பேசுவான்; பல்வேறு சதிச்செயல்களிலும் ஈடுபடுவான். ஆனால், தன்னுடைய துன்பத்துக்குப் பொறுப்பேற்று அதைக் களைய முற்படமாட்டான்.

விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாதகங்கள் புரட்டுவர், பொய்ம்மை சேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவர்.

ஒரு மனிதன் பிறருக்குத் தீங்கினைச் செய்ய எண்ணுவதற்கு முக்கியக் காரணம் அச்சமே எனலாம். தனக்குக் கிடைக்கவேண்டிய சோறும், உறைவிடமும் எங்கே தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சம் பிறர் பங்கைத் திருடி வாழச் செய்கிறது. இந்தக் களவுச் செயல்களைக் கண்டு கண்டித்து ஊருக்கு நல்லது சொல்ல வந்த கவிஞன் பாரதி,

வயிற்றுக்குச் சோறு உண்டு கண்டீர்! – இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும்

என்று சொல்லி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினால் அனைவரும் உண்ணப் போதுமான உணவை இந்த உலகம் தரும்’ என்னும் உண்மையை உணர்த்துகிறான்.

இடம் பெரிது உண்டு வையத்தில் – இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

என்று ‘வேலிகள் அற்று விரிந்து பரந்த இவ்வுலகில் எல்லாருக்கும் இருக்க இடம் நிறையவே உண்டு’ என்பதைப் புரிய வைத்து நிலச்சச்சரவுகள் நீங்கி நிம்மதியாக வாழ வழிவகுக்கிறான்.’மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம்’ ஒழிந்து, நிலங்கள் தனியுடமையாகாமல் பொதுவுடமையானால், உழைப்பில்லாமலேயே உணவு உண்டாகும் என்று கருத்துப் புரட்சி செய்கிறான்.

நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்.

‘சரி, இந்த நீதிகளை எல்லாம் கேட்க மனமில்லையென்றாலும் இதையாவது கேளுங்கள்: மனிதர்களாக வாழ முயற்சியாவது செய்யுங்கள்’ என்கிறான். ஏனெனில்,தன்னை விட மெலிந்தவற்றை பிடித்துத் தின்று பிழைக்கும் பழக்கம் விலங்குகளுக்குத் தான் உண்டு; மனிதர்களுக்குக் கிடையாது. தன் நிறைவுக்காகப் பிறர் நலம் கெடுக்கும் தீய செயல்களைச் செய்பவர்களைப் பார்த்து இவ்வாறு இடித்துக் கேட்கிறான் பாரதி:

உடன் பிறந்தவர்களைப் போலே – இவ்
உலகினில் மனிதர் எல்லாரும்;
திடங்கொண்டவர் மெலிந்தோரை – இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
தம்பி சற்றே மெலிவானால் – அண்ணன்
தான் அடிமை கொள்ள லாமா?

இவ்வாறு உலகம் அனைத்தும் ஒரு குடும்பமாகப் பாவிக்கும் சமத்துவத்தன்மையால் மனிதனுக்குத் அடிமைத்தனம் விலகுகிறது; சகோதரத்துவம் நிலைக்கிறது; விடுதலை கிடைக்கிறது. ஆங்கிலத்தில் ‘Equality, Fraternity, Liberty’ என்று மொழியப்படும் இந்த மூன்று உண்மைகளையும் பாட்டில் வடிக்கிறான் பாரதி:
பாருக்குள்ளே சமத்தன்மை – தொடர்
பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது – புவி
எங்கும் விடுதலை செய்யும்.

விடுதலை என்றால் என்ன என்பதற்கும் ஒரு புதிய வரையறை வைக்கிறான் நம் பெருங்கவிஞன். ‘பிறருக்குக் காயம் இல்லாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றப்படி ஏறக்குறைய நான் பிரியப்படும் எதுவும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும்‘ என்பது பாரதியின் கருத்து. இக்கருத்தினையொட்டியே, மனித இனத்திற்கு இந்த வேண்டுகோள் விடுக்கிறான்: “அடா மனிதர்களே! எத்தனை சாத்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் நாம் உட்பட்டு இருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு என்னவென்றால், ‘ஒருவர்க்கு ஒருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவரை மற்றொருவர் அச்சுறுத்த மாட்டோம்.’ மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கள்கூட ஒருவருக்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனித நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்”.

மனிதனின் நிறைவாழ்வுக்கு வளம்சேர்க்கும் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வசனக் கவிதையிலும் வாய்மொழிகிறான் பாரதி:
நமக்குச் செய்கை, இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க. கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் – இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக.

இது பொறுப்பதில்லை தம்பி – எரிதழல் கொண்டுவா!’ என்று அடிமைத்தனத்தை எதிர்த்துச் சீறுவான் பாஞ்சாலி சபதம் போற்றும் வீமன். தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் தீங்குகள் இழைப்போரைக் கண்டு இதே சீற்றத்துடன் பொங்கி எழுகின்றான் பாரதி. இந்த உணர்வின் கொந்தளிப்பை ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தக் கவிதையில் நம்மால் உணர முடிகின்றது. 

Leave a Reply