தேவாரம்
திருமுறை கண்ட சோழன் என்றும், சிவபாத சேகரன் என்றும் போற்றப்படும் சிவத்தொண்டன் இராஜராஜ சோழன். அந்த மாமன்னனின் வரலாற்றை மொழியும் ‘பொன்னியின் செல்வன்’ என்னும் அருங்காவியத்திற்கு மேலும் அணிசேர்க்க கல்கி அவர்கள் ஆங்காங்கே பக்தி மணம் கமழும் தேவாரப் பாடல்களைத் தமது கதாபாத்திரங்கள் மூலம் அளித்திருக்கிறார். நூல் முழுவதும் தேவாரப் பண்ணிசைப் பாடல்கள் மூலம் சேந்தன் அமுதனும், பூங்குழலியும், திருநாரையூர் நம்பியும் நம்மைச் சிவனருள் கடலில் ஆழ்த்துகிறார்கள். கல்கி அவர்களும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க குறிப்புகள் நிறைந்த தேவாரப் பாடல்களை அந்தந்த காட்சிக்கேற்பச் சுவையுடன் அளித்திருக்கிறார். அத்தகைய தெய்வத்தன்மை மிக்க தேவாரப் பாடல்களில் சிலவற்றை இங்குப் பொருளுடன் நோக்குவோம்.
நற்றுணை ஆவது நமச்சிவாயவே
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 12 (நந்தினி)
காட்சிக் குறிப்பு: குடந்தை சோதிடர் வீட்டுக்குச் செல்வதன் பொருட்டு கொள்ளிடத்தைக் கடந்து படகில் பயணித்தான் வந்தியத்தேவன். அவனுடன் படகில் ஆழ்வார்க்கடியான் என்று அழைக்கப்படும் திருமலையும் சேர்ந்துகொண்டான். அப்போது அவர்களது படகில் பயணித்த சைவப் பெரியவர் ஒருவர் ‘நமச்சிவாய’ என்னும் ஐந்தெழுத்தின் பெருமையை அவர்கள் இருவருக்கும் உணர்த்தும் பொருட்டு இந்தப் பாடலைப் பாடினார். இந்தத் தேவாரப் பாடலை அருளிச்செய்தவர் திருநாவுக்கரசர் என்று போற்றப்படும் அப்பர் சுவாமிகள்.
பொன்துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கல்துணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச்சி வாயவே.
பொருள்: வேதங்களுக்கு நிகரான நாமத்தை உடையவனும் ஒளிமிக்க வானுலகை ஆள்பவனும் ஆகிய சிவபெருமானுடைய பொன் போன்று ஒளிரும் திருவடிகளை நாம் எப்போதும் கை தொழுது வணங்கி வருவதால், கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாயமே நமக்குப் பெரிய துணையாகும்.
நாமார்க்கும் குடியல்லோம்
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 22 (வேளக்காரப் படை)
காட்சிக் குறிப்பு: தஞ்சை அரண்மனைக்குப் புலவர்களுடன் கலந்து சென்ற வந்தியத்தேவன், சுந்தரச் சோழரின் அரசவையை வந்தடைந்தான். அப்போது, மன்னரின் விண்ணப்பத்தின்படி, அங்குக் கூடியிருந்த புலவர்களில் ஒருவர் இந்தத் தேவாரப் பாடலை அவர்முன் பாடினார். இப்பாடலை அருளிச்செய்தவர் திருநாவுக்கரசர்.
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
பொருள்: நாம் வேறு யார்க்கும் அடிமை இல்லை ; காலனை அஞ்சமாட்டோம் ; நரகத்தில் புகுந்து கஷ்டப்படமாட்டோம் ; பொய்ம்மையை நாடமாட்டோம் ; எப்போதும் களிப்புடன் இருப்போம் ; நோய்நொடியென்பதே இல்லாது இருப்போம் ; வேறு யாரையும் பணிந்திருக்க மாட்டோம் ; எப்போதும் இன்புற்று இருப்போம், எதற்கும் துயரப்படமாட்டோம் . யாருக்கும் அடிமையில்லாதவனும், நன்மையே செய்பவனும், நல்ல வெண்சங்குத் தோடுடைய செவியை உடைய தலைவனுமாகிய சிவபெருமானுக்கே நாம் என்றும் அடிமையாய் அவனது மலர் போன்ற சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.
கோடிக்கரைக் குழகர்
அத்தியாயம்: பாகம் 2 – அத்தியாயம் 1 (பூங்குழலி)
காட்சிக் குறிப்பு: கோடிக்கரைக் குழகர் கோயிலுக்குச் செல்கிறாள் பூங்குழலி. அப்போது அந்தக் கோயிலின் பெருமையைப்பற்றிச் சொல்லும்போது, குழகர் மீது சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய இந்தப் பாடலைக் குறிப்பிடுகிறார் அமரர் கல்கி அவர்கள்.
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்!
அடிகேள் உமக்கு ஆர் துணையாக இருந்தீரே?
பொருள்: அந்தோ! இறைவா! கடற்காற்று வேகமாக வீசுகின்ற கோடிக்கரையில் தனியான இடத்தில் கோயில்கொண்டுள்ள குழகரே! இந்தக் காட்சியைக் காண நேர்ந்த கொடியவனான நான் வருந்தும்படியாக இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றி இருக்கின்றீரே? இருக்க வேறு இடமாயில்லை?
பத்தர் பலர்பாட இருந்த பரமா!
கொத்தார் பொழில் சூழ்தரு கோடிக் குழகா!
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே?
பொருள்: திருமறைக்காட்டுக்குத் தெற்கே, பக்திப் பெருக்கால் ‘நமச்சிவாய’ என்று ஒலியெழுப்பி பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பூஞ்சோலைகளால் சூழ்ந்திருக்கும் காட்டில் தனியாக இருக்கும் காரணம் என்ன? (எப்போதும் பக்தர்கள் சூழ்ந்திருக்க எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களை விட்டு, வெறும் பூஞ்சோலைகள் சூழ்ந்திருக்கும் கோடிக்கரைக் காட்டில் தனித்து இருப்பதேன்?)
மாதோட்டம்
அத்தியாயம்: பாகம் 2 – அத்தியாயம் 12 (குருவும் சீடனும்)
காட்சிக் குறிப்பு: இராமேஸ்வரத்தில் அநிருத்தரைச் சந்திக்கிறான் ஆழ்வார்க்கடியான். அப்போது மாதோட்டத்தின் பெருமையைப்பற்றிப் பேசுகையில் அநிருத்தர் குறிப்பிட்ட தேவாரப் பாடல் இது. இப்பாடலை அருளியர் திருஞானசம்பந்தர்.
கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை கோயில்
வண்டு பண்செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம்இடு மாதோட்டம்,
தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள்செய் கேதீச்சுரம் அதுதானே.
பொருள்: முற்காலத்தில் சனகன் முதலான நால்வருக்கு வேத தருமத்தை உபதேசித்து, அவர்கள் மூலமாகப் பல உலகங்களில் வாழும் உயிர்களுக்கு நன்னெறியைப் போதித்த சிவபெருமான், கடல் சூழ்ந்த இந்த உலகம் கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில் எதுவென்றால், வண்டுகள் பண் இசைக்கும் அழகிய பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தில் தொண்டர்கள் தினந்தோறும் துதிக்க அருள் புரியும் திருக்கேதீச்சுரம் ஆகும்.
பொன்னார் மேனியனே!
அத்தியாயம்: பாகம் 2 – அத்தியாயம் 22 (சிறையில் சேந்தன் அமுதன்)
காட்சிக் குறிப்பு: குந்தவையும் வானதியும் தஞ்சாவூரில் தங்க சாலையைப் பார்வையிட வரும்போது அந்தத் தங்கசாலைக்கு அடியில் இருக்கும் பாதாள சிறைக்கும் விஜயம் செய்தனர். அப்போது, அச்சிறையில் இருந்த சேந்தன் அமுதன் இந்தத் தேவாரப் பாடலைப் பாடுவதைக் கேட்டார்கள். பாடலை அருளிச்செய்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?
பொருள்: பொன் போன்று ஒளிரும் திருமேனியை உடையவனே! இடையில் புலித்தோலை அணிந்து, மின்னல் போன்று ஒளிவீசும் சடையில், அழகிய கொன்றை மாலையை அணிந்தவனே! தலைவனே! விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே! திருமழபாடியில் எழுந்தருளியிருக்கும் மாணிக்கம் போல்பவனே! எனக்குத் தாய் போன்றவனே! இப்பொழுது உன்னைத் தவிர நான் வேறு யாரை நினைப்பேன்?
பறக்கும் எம் கிள்ளைகாள்!
அத்தியாயம்: பாகம் 3 – அத்தியாயம் 7 (காட்டில் எழுந்த கீதம்)
காட்சிக் குறிப்பு: சேந்தன் அமுதன் பூங்குழலியைப் பார்ப்பதற்காகத் தஞ்சையிலிருந்து பயணம் செய்து கோடிக்கரைக்கு வந்திருந்தான். பூங்குழலியைக் கண்டதும் அவளது இனிமையான குரலில் கீதம் ஒன்று பாடச் சொன்னான். அப்போது பூங்குழலி பாடிய தேவாரப் பாடல் இது. இப்பாடலை அருளிச்செய்தவர் சுந்தரர்.
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே?
பொருள்: பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே, பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே, அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை நான் ஒரு கணமும் மறக்க முடியவில்லை; அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று விழுகின்றன; கண்கள் உறங்க மறுக்கின்றன; (அவரைப் பிரிந்து வாடும்) என்பொருட்டு என்னுடைய இந்த நிலைமையை அவருக்குத் தெரிவிப்பீர்களா?
ஆலவாய் ஆவதும் இதுவே!
அத்தியாயம்: பாகம் 3 – அத்தியாயம் 17 (திருநாரையூர் நம்பி)
காட்சிக் குறிப்பு: செம்பியன் மாதேவியின் அழைப்பை ஏற்றுப் பழையாறை அரண்மனைக்கு எழுந்தருளிய திருநாரையூர் நம்பி என்னும் சிவனடியார் தமக்குக் கிடைக்கப்பெற்ற தேவாரப் பதிக ஓலைகளிலிருந்து படித்துக் காட்டிய பாடல்கள். மதுரை மாநகருக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தர் அருளிச்செய்தவை.
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயல் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
பொருள்: மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி. கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி. சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும் தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். அப்பெருமான் அங்கயற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே யாகும்.
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினால் பணிசெய்து பரவ
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிதாம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறு கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
பொருள்: உலகம் முழுவதும் தனது செங்கோல் ஆட்சி நிகழ மன்னனாய் விளங்கிய மணிமுடிச் சோழனின் மகளார், மங்கையர்க்கரசியார். பண்ணிசை போன்ற மொழியுடையவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசியார்.
அத்தேவியாரால் அன்போடு வழிபாடு செய்து போற்றப்படுகின்றவரும், திருமாலும், பிரமனும் கீழும் மேலுமாய்ச் சென்று அடிமுடி தேட முயன்று காண முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்றவரும் ஆகிய சிவபெருமான் உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
பொருள்: மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். “பால்வடியும் நல்ல வாயையுடைய குழந்தை இவன்” என்று நீ என்மேல் இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இந்த சமணர்களுக்கு நான் எளியவன் அல்ல. (உன்னைப் போன்ற சிவபக்தர்களுக்கு மட்டும் தான் நான் எளியவன், இனியவன்; சமணர்களுக்கும் பெளத்தர்களுக்கும் நான் கடுமையானவன்! )
கூற்றாயினவாறு விலக்ககிலீர்
அத்தியாயம்: பாகம் 4 – அத்தியாயம் 31 (முன்மாலைக் கனவு)
காட்சிக் குறிப்பு: சக்கரவர்த்தி சுந்தர சோழரைச் சந்தித்த பூங்குழலி அவர் முன்னிலையில் பாடிய தேவாரப் பாடல். திருநாவுக்கரசர் அருளிச்செய்தது.
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகை வீரட்டானத்து உறி அம்மானே.
பொருள்: கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! நான் இப்பிறப்பில் பல கொடிய செயல்களைச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. விடைவாகனனாகிய உனது திருவடிகளையே இரவும் பகலும் இடைவிடாமல் தொழுது வருகிறேன். அப்படி இருக்க, இந்த சூலை நோயானது, பிணி வருவதற்கான எந்த வித அறிகுறியும் இல்லாமல், திடீரென்று என் வயிற்றில் குடலோடு மற்ற எல்லா உறுப்புகளையும் செயலிழக்கச் செய்து பொறுக்க முடியாத வலியைத் தருகிறது. இதற்கு மேல் இந்த வேதனையைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லை என்று தோன்றுகிறது. காலனைப் போல வந்திருக்கும் இந்தப் பிணியை விலக்கி அருள் புரியுமாறு வேண்டுகிறேன்.
திருவையாற்றில் அப்பர் கண்ட காட்சி
அத்தியாயம்: பாகம் 5 – அத்தியாயம் 83 (அப்பர் கண்ட காட்சி)
காட்சிக் குறிப்பு: திருவையாற்றில் சோழ அரண்மனையின் மேல் மாடத்தில் செம்பியன் மாதேவி, குந்தவை, பூங்குழலி இவர்களுடன் சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் எழுந்தருளியிருந்தார். அப்போது செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டவாறு சேந்தன் அமுதனார் இந்தத் தேவாரப் பாடலைப் பாடினார். இந்தப் பாடலை அருளிச்செய்தவர் திருநாவுக்கரசர் என்று போற்றப்படும் அப்பர் சுவாமிகள்.
போதொடு நீர்சுமந்து ஏத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்.
பொருள்: அழகிய பிறையை முடிமாலையாகச் சூடிய சிவபெருமானை, பார்வதியோடும் இணைத்துப் பாடித் தொழுது, அபிஷேகம் செய்வதற்குரிய பூவோடு நீரையும் சுமந்து கொண்டு திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் தரிசிக்கச் செல்லும் அடியவர்களின் பின் அவர்களைத் தொடர்ந்து நானும் செல்வேன். அவ்வாறு யாருக்கும் தெரியாதவாறும் (‘நான்’ என்னும் நினைப்பை ஒழித்து) என் காலடிச் சுவடுகள் கீழே பதியாதவாறும் அடியார்களுடன் அடியாராகக் கலந்து நான் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், அன்புமிக்க இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து வருவது போல, உமையாளுடன் சிவபெருமான் எழுந்தருளி வருகின்ற கண்கொள்ளாக் காட்சியைக் காணும் பேறு பெற்றேன்; சக்தியும் சிவமுமாக வந்த அம்மையப்பனைக் கண்டு அவ்விருவருடைய திருப்பாதங்களைத் தொழுது முன் கண்டறியாத ஞானவொளியையும் வாழும் வழிவகையும் கண்டு அறிந்து தெளிவுற்றேன்.
திவ்வியப் பிரபந்தம்
பிற்காலச் சோழர்களின் காலம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் அனைத்தையும் கண்டறிந்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் திருப்பனுவலாகத் தொகுத்து அளித்த நாதமுனிகள் வாழ்ந்த பொற்காலம். அத்தகைய சந்தமிகு தமிழ்மறையாகிய திவ்வியப் பிரபந்தம் என்னும் மணிமாலையிருந்து முத்துக்கள் போன்ற பாசுரங்கள் சிலவற்றை எடுத்து ஆழ்வார்க்கடியான், அநிருத்தர் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தமது ‘பொன்னியின் செல்வன்’ என்னும் பொற்காவியத்தில் அளித்திருக்கும் கல்கி அவர்களின் தெய்வத்தொண்டு போற்றத்தக்கது. அப்படி இந்த நூலில் பொதிந்துள்ள பாசுரங்கள் சிலவற்றை இங்கே பொருளுடன் கற்றுணர்வோம்.
கண்டோம்! கண்டோம்! கண்டோம்!
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 3 (விண்ணகரக் கோயில்)
காட்சிக் குறிப்பு: வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியான் வீரநாராயணபுர விண்ணகரத்தை அடைந்தான். அங்குக் கோயில் கொண்டிருக்கும் வீரநாராயணப்பெருமாளைத் தரிசித்து ஆழ்வார்க்கடியான் இப்பாசுரங்களைப் பாடினான். இந்தப் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் பாடல் தொகுப்பில் ‘திருவாய்மொழி’ என்னும் நூலில் நம்மாழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட இன்றமிழ்க் கவிதைகள்.
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்.
பொருள்: இம்மண்ணுலகில் யாவரும் குறைவற்று வாழ்க! வாழ்க! வாழ்க! கடல் போன்ற நிறத்தவனாகிய திருமாலின் பூதங்கள் இசைபாடி ஆடி உலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டன. இனி உயிர்களைத் தொடர்ந்து வாட்டுகின்ற பாவங்கள், அறியாமை ஆகியவை எல்லாம் நீங்கிவிடும். வருத்துகின்ற நரகமும் புல்லெழுந்து அழிந்து விடும். காலனானவன் மனிதர்களைத் தண்டிப்பதற்குக் காரணம் காட்ட குற்றம் குறை எதுவும் இருக்காது. அதனால் காலனுக்கு வேலை எதுவும் இல்லை. கலிகாலமும் முடிந்து விடும்.
தொண்டீர்! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டுஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே
பொருள்: காண்பதற்கு இனிமையான காட்சிகளைக் கண்ணால் கண்டு மகிழ்ந்தோம்! கண்டு மகிழ்ந்தோம்! கண்டு மகிழ்ந்தோம்! பக்தர்களே! இங்கு வாருங்கள்! வண்டுகள் மொய்க்கும் குளிர்ச்சிமிக்க துளசி மாலையைச் சூடுகின்ற மாதவனின் பூதங்கள் எம்பெருமானை மீண்டும் மீண்டும் வணங்கி அவனது நாமங்கள் சொல்லிப் பேரொலி எழுப்பி பண்ணமைந்த பாடல்கள் பல பாடி ஆடி இவ்வுலகில் எங்கும் திரிந்து மகிழ்ச்சியுடன் திளைக்கும் கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் பாருங்கள்!
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.
பொருள்: கலியுக தோஷம் ஒன்றும் நேராதவாறு தன்னுடைய பக்தர்களுக்கு அருள் வழங்குபவன் சோதிமயமான மூர்த்தியும் மாயவனும் ஆகிய கண்ணபிரான். அந்த மாயவனுடைய பெருமையை வளம் மிக்க வயல் சூழ்ந்த தென்னகராகிய திருக்குருகூரைச் சேர்ந்த காரி மாறன் சடகோபனாகிய நான் ஆயிரம் பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியாக உரைத்தேன். அத்தகைய திருவாய்மொழியில் ஒரு பகுதியாகிய இந்தப் பத்து பாடல்களும் கேட்பவர்களின் மனமாசுகள் அனைத்தையும் நீக்கிவிடும்.
வாடினேன் வாடி வருந்தினேன்
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 12 (நந்தினி)
காட்சிக் குறிப்பு: குடந்தை சோதிடர் வீட்டுக்குச் செல்வதன் பொருட்டு கொள்ளிடத்தைக் கடந்து படகில் பயணித்தான் வந்தியத்தேவன். அவனுடன் படகில் ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியும் சேர்ந்துகொண்டான். அப்போது ‘நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்’ என்று சொல்லி இந்தப் பாசுரத்தைப் பாடினான். இப்பாசுரத்தை அருளிச் செய்தவர் திருமங்கை ஆழ்வார். நூல் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய ‘பெரிய திருமொழி’ என்னும் நூல். அந்நூலின் முதல் பாடல் இது.
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
பொருள்: இதுவரை கழிந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன் , மனவருத்தமடைந்தேன், அளவற்ற துன்பம் பெற்றேன். இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்; இப்படி ஓடித்திரிந்த காலத்தில் எம்பெருமான் திருவருளாலே ஞானம் என்னும் ஒரு சிறந்த நிலையில் அடிவைத்து நன்மை தீமைகளை ஆராயத் தொடங்கினேன். அப்படி ஆராய்ந்து பார்த்தபோது, என் மனத்தினுள் நாராயணா என்னும் மஹா மந்திரத்தை நான் கண்டுகொண்டேன்.
கண்ணன் பிறந்தான்
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 46 (மக்களின் முணுமுணுப்பு)
காட்சிக் குறிப்பு: குந்தவையைச் சந்திக்க பழையாறை அரண்மனைக்குச் சென்றிருந்த ஆழ்வார்க்கடியான், ‘பெரியாழ்வார் திருமொழி’யில் இடம்பெற்றுள்ள இந்தப் பாசுரங்களை எடுத்துப் பாடினான்.
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே.
பொருள்: அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் அருள்புரியும் கண்ணன் கேசவன் நம்பி ஆயர்பாடியில் நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்தான். அவன் பிறந்ததனால் உண்டான மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஆயர்கள் ஒருவர் மீது ஒருவர் நறுமண எண்ணெயைப் பூசிக்கொண்டனர்; வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் தூவிக் களித்தனர். இவ்வாறு ஆயர்கள் கொண்டாடி விளையாடியதால் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
பொருள்: ஆயர்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமாரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது ஆயர்பாடி.
மாமல்லபுரம்
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 51 (மாமல்லபுரம்)
காட்சிக் குறிப்பு: மாமல்லபுரத்தின் பழம்பெருமையை விவரிக்கும்போது, அந்நகரில் எழுந்தருளியிருக்கும் தலசயனப் பெருமானைத் தரிசித்த திருமங்கையாழ்வார் பக்திப் பெருக்கோடு பாடிய தமிழ்ப் பாடல் ஒன்றைக் குறிப்பிடுகிறார் கல்கி அவர்கள்.
நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார்அவரை வலங்கொள் என் மட நெஞ்சே!
பொருள்: மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் ஐம்புலன்களையும் கவர்ந்து ஈர்க்கின்ற பொற்குவியல்களும், துதிக்கைகளை வீசி வருகின்ற யானைகளையும், நலமிகுந்த நவமணிக் குவியல்களையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு கப்பல்கள் சஞ்சரிக்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் எழுந்தருளியுள்ள தலசயனப் பெருமாளை வலம் வந்து வணங்குகின்ற அடியவர்களை வலம் வந்து தொழுவாய், என் நெஞ்சமே!
அரியும் சிவனும் ஒன்றே!
அத்தியாயம்: பாகம் 2 – அத்தியாயம் 12 (குருவும் சீடனும்)
காட்சிக் குறிப்பு: இராமேஸ்வரத்தில் அநிருத்தரை ஆழ்வார்க்கடியான் சந்தித்தான். அப்போது மாதோட்டத்தின் பெருமையைப்பற்றிப் பேசுகையில் அநிருத்தர் குறிப்பிட்டுப் பாடிய பாசுரங்கள் இவை. இப்பாடல்களை அருளிச்செய்தவர் நம்மாழ்வார்.
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்,
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே.
பொருள்: லிங்கத்தை வழிபடும் சிவாகம நூல்களைப் பின்பற்றுகின்ற சைவர்களாக இருந்தாலும், ஜைனர்களாக இருந்தாலும், பெளத்தர்களாக இருந்தாலும், வலிய வந்து எம்முடன் வாதம் செய்யும் எந்த மதத்தினராக இருந்தாலும், நீங்கள் எல்லாருமாக இருப்பவன் ஶ்ரீமன் நாராயணன். அதுமட்டுமல்லாமல், உங்கள் தெய்வங்களின் உருவிலும் நாராயணன் இருக்கிறான். அப்படிப்பட்ட திருமால், நிறைந்த செங்கதிர்களை உடைய நெற்பயிர்கள் சாமரம் வீசுகின்ற வளமிக்க திருத்தலமாகிய திருக்குருகூரில் எழுந்தருளிப் பொலிந்து விளங்குகிறான். அதனால், அவ்வூரில் எங்கும் பொய்ம்மை என்னும் இருள் நீங்கி மெய்யொளி படர்ந்திருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குருகூரைப் போற்றுவோமாக.
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய்,
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
பொருள்: எம்பெருமானே! நீர், நிலம், தீ, காற்று, வானம் என்று கூறப்படும் பஞ்ச பூதங்களாய் விளங்குகிறாய்! சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாக ஒளிவீசுகிறாய்! அதுமட்டுமல்லாமல், சிவன், பிரமன் இவர்கள் உருவிலும் இருக்கிறாய்! மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக, கூர்மைபொருந்திய சக்கரத்தையும் வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு, கொடிய வினைகளை உடைய அடியேனிடத்தில் ஒருநாள் வரவேண்டும்.
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!
தனியேன்ஆர்உயிரே! என்தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன் ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.
பொருள்: என் தலைவனே! நான்கு முகங்களைக் கொண்ட பிரமனே! மூன்று கண்களைக் கொண்ட சிவனே! அழகிய கனி போன்ற திருவாயை உடைய தாமரைக்கண்களை உடைய எனது கருமாணிக்கமே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வனே! என்னுடைய ஆருயிரே! என் தலைமீது உன் திருவடிகளை நீ வைத்த பின் இனி நான் உன்னை போக விடமாட்டேன். ஒரு மாயமும் என்னிடம் செய்யாதே.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்
அத்தியாயம்: பாகம் 4 – அத்தியாயம் 31 (முன்மாலைக் கனவு)
காட்சிக் குறிப்பு: சக்கரவர்த்தி சுந்தர சோழரைச் சந்தித்த பூங்குழலி அவர் முன்னிலையில் ‘கூற்று ஆயினவாறு’ என்னும் தேவாரப் பாடலைப் பாடினாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பேயாழ்வார் அருளிய இந்த மூன்றாம் திருவந்தாதி பாடலைப் பாடினான்.
அருக்கன் அணிநிறமும் கண்டேன், – செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்ஆழி வண்ணன்பால் இன்று.
பொருள்: இன்று, கடல்நிற வண்ணனான திருமாலின் வலமார்வினில் திருமகள் வீற்றிருக்கக் கண்டேன், அந்த மணிவண்ணனின் பொன்போன்ற மேனியைக் கண்டேன், சூரியனைப் போல ஒளிவீசும் அவனது அழகிய நிறத்தையும் கண்டேன்; அவனது கையில் பொன்னொளி வீசும் திருச்சக்கரத்தைக் கண்டேன். வலம்புரி சங்கையும் காணும் பேறு பெற்றேன்.
மீனாய்ப் பிறப்பேன்
அத்தியாயம்: பாகம் 5 – அத்தியாயம் 43 (மீண்டும் கொள்ளிடக்கரை)
காட்சிக் குறிப்பு: ஆழ்வார்க்கடியான் சேந்தன் அமுதனின் பூந்தோட்டக் குடிலுக்கு விஜயம் செய்தான். அங்கே பூங்குழலியைச் சந்தித்தான். அப்போது பூங்குழலி, தான் சேந்தன் அமுதனை மணந்து கொள்ள சம்மதித்துவிட்டதாகவும், அமுதனின் உடம்பு கொஞ்சம் குணமானதும் அவனுடன் கோடிக்கரைக்குப் புறப்பட்டுப் போய்விடப்போவதாகவும், இராச்சிய பாரம் தாங்குவது அவளுக்கும் அமுதனுக்கும் பிடிக்காது என்றும் ஆழ்வார்க்கடியானிடம் தெரிவித்தாள். அப்போது, அவர்களைப் போல ‘மண்ணரசு வேண்டாம்’ என்று சொல்லி அரச பதவியின் மீது ஆசையில்லாமல் இருந்த குலசேகர ஆழ்வாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் பாடிய இந்தப் பாசுரத்தை ஆழ்வார்க்கடியான் பாடினான்.
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே
பொருள்: அளவில்லாத செல்வத்துடன் ரம்பை முதலான தேவமாதர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நான் பெரும்பேறாகக் கருதுவேன்.
திருவிசைப்பா
திருவிசைப்பா (திரு+இசை+பா) சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் ஒன்பதாம் திருமுறையில் அமைந்த நூல்களில் ஒன்று. இந்நூலை சோழ மன்னர் கண்டராதித்தருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது சிவனருட்செல்வர்கள் பாடியுள்ளனர். பொன்னியின் செல்வரின் பெரிய பாட்டனாரான கண்டராதித்தர் ‘சிவஞான கண்டராதித்தர்’ என்று போற்றப்படும் சிறந்த சிவபக்தர். இவர் பாடிய பதிகம் கற்பவர் நெஞ்சை உருக்குவதோடு மட்டுமன்றி, பல வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கித் திகழ்கிறது. பொன்னியின் செல்வன் நூலில் கல்கி அவர்கள் குறிப்பிட்ட கண்டராதித்தரின் பாடல்கள் இரண்டை இப்பதிவில் காண்போம்.
ஆரா இன்சொல் கண்டராதித்தன்
அத்தியாயம்: பாகம் 3 – அத்தியாயம் 16 (மதுராந்தகத் தேவர்)
காட்சிக் குறிப்பு: மதுராந்தகத் தேவரை அறிமுகப்படுத்தும்போது, கல்கி அவர்கள், மதுராந்தகரின் தந்தையாகிய கண்டராதித்தரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றிப் பாடிய பாடலை நமக்குத் தெரிவிக்கிறார்.
ஈழமுங் கொண்டதிறல்
செங்கோல் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம் இறையை
என்றுகொல் எய்துவதே.
பொருள்: செங்கோல் வேந்தனாகிய பராந்தகச் சோழன், கொடுங்கோலினை உடைய அரசனான பாண்டியனுடைய நாட்டினையும், இலங்கையையும் கைப்பற்றித் தனது ஆட்சிக்குக் கீழ்ப்படியச் செய்யும் ஆற்றல் கொண்டவன். உறையூரைத் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். தில்லைக் கோயிலுக்கு பொற்கூரை வேய்ந்தவன். அத்தகைய பெரும்புகழும், பக்தியும் மிக்க பராந்தக சோழன் துதிசெய்த தில்லைப்பதியில் திரண்ட வளையல்களை உடைய மகளிர் பாடியும், ஆடியும் நற்பணி செய்கின்றனர். அந்த அழகிய தில்லை அம்பலத்துள் எம்தலைவனாய், எம்மை அடக்கி ஆள்பவனாய் உள்ள எம் இறைவனை என்று அடையப்போகிறேனோ?
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே!
பொருள்: சிறப்பால் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவருளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்திலிருந்து திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.
பெரிய புராணம்
பெருமைசேர் பதி பழையாறை
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 42 (நட்புக்கு அழகா)
காட்சிக் குறிப்பு: வந்தியத்தேவன் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வருகிறான். அந்தத் தருணத்தில், நமக்குப் பழையாறை நகரின் பழம்பெருமையைப் போற்றுகிறார் கல்கி அவர்கள். அப்போது பழையாறையை வருணிக்கும் இந்தப் பெரியபுராணப் பாடலைக் குறிப்பிடுகிறார்.
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
பொருள்: மிக்க புகழுடைய சோழர்கள் அரசாளுதற்குரிய புனித காவிரி பாயும் சோழநாட்டில், மேக மண்டலம் வரை ஓங்கிய களிப்பினை உடைய வண்டுகள் சூழும் மலர்களையுடைய சோலை களால் சூழப்பட்டு, தேரோடு பொருந்திய, செழுமையான மணிகள் இழைத்த வீதிகளால் சிறப்படைந்து, இவ்வுலகில் நிலைபெற்ற பெருமையினை உடைய நகரமாக விளங்குவது பழையாறை என்பதாம்.
நாகைக் காரோணம்
அத்தியாயம்: பாகம் 3 – அத்தியாயம் 10 (சூடாமணி விஹாரம்)
காட்சிக் குறிப்பு: நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கல்கி அவர்கள் கூறத் தொடங்குகிறார். அப்போது, சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்திலேயே நாகைப்பட்டினம் செல்வச் செழிப்புடன் இருந்ததாகவும், அந்நகரின் வளத்தைக் கண்ட நாயனார் அங்கு எழுந்தருளியிருந்த காயாரோகணப் பெருமானிடம் பொன்னும், மணியும், உயர்ந்த சாதிக் குதிரையும் வேண்டிப் பெற்றுக் கொண்டார் என்றும் தெரிவிக்கும் பெரியபுராணப் பாடலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நாகைக் காரோணம் பாடி
அம் பொன்மணிப் பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடல்பரிமா
பைம்பொன் சுரிகை முதலான
பெற்று மற்றும் பலபதியில்
தம்பி ரானைப் பணிந்து ஏத்தித்
திருவா ரூரில் சார்ந்திருந்தார்.
பொருள்: நம்பியாரூரரும் அந்நாளில் திருநாகைக்காரோணத்திற்குச் சென்று திருப்பதிகம் பாடி, அழகிய பொன்னாலும் மணிகளாலும் ஆன அணிவகைகளையும், நவமணிகளையும், ஆடை, சாந்து, வலிய குதிரைகள், பசும் பொன்னால் ஆன வாள் முதலானவற்றையும் இறைவர் தரத் தாம் பெற்று, மேலும் இடைப்பட்ட பல பதிகளிலும் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, மீண்டும் திருவாரூரைச் சேர்ந்து அங்குத் தங்கியிருந்தார்.
சிலப்பதிகாரம்
கானல் வரிப் பாட்டு
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 10 (குடந்தை சோதிடர்)
காட்சிக் குறிப்பு: குந்தவையும் வானதியும் குடந்தை சோதிடர் வீட்டுக்குச் செல்லுமுன் அரிசிலாற்றங்கரையில் படகில் பாடி வந்த பாடல்கள் இவை. இப்பாடல்கள் சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவில் மாதவி பாடிய கானல்வரிப் பாடல்கள் ஆகும்.
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி.
பொருள்: காவிரி நதியெனும் பெண்ணே! இருபக்கத்தும் வண்டுகள் ஒலிக்க, அழகிய பூவாடையை அணிந்து கொண்டு, கரிய கயல்மீன் போன்ற கண்களை விழித்து அசைந்து எழிலுற நடக்கின்றாய்! நீ வாழ்வாயாக! அவ்வாறு நீ களிப்புடன் நடப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய சோழன் செங்சோல் வளையாமல் சீரிய முறையில் ஆட்சி நடத்துவதுதான் என்று அறிந்தேன்; நீ (இன்று போல் என்றும் களிப்புடன்) வாழ்வாயாக!
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி.
பொருள்: காவிரி நதியெனும் பெண்ணே! பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், அந்த நடனத்திற்கேற்ப குயில்கள் விரும்பி இசை பாடவும், விரும்பி அணியப்பட்ட மலர்மாலைகள் அருகில் அசையவும், எழிலுற நடக்கின்றாய்! நீ வாழ்வாயாக! அவ்வாறு நீ களிப்புடன் நடப்பதற்குக் காரணம், உன் கணவனான சோழ வேந்தன், தன் குடிமக்களைக் காக்கும் பொருட்டு, பகைவர்களுக்கு அச்சத்தைத் தருமாறு ஏந்தி நிற்கும் வேலின் வலிமையினால்தான் என்று அறிந்தேன்; நீ (இன்று போல் என்றும் களிப்புடன்) வாழ்வாயாக!
தீங்குழல் இசை கேட்போம், தோழீ!
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 48 (நீர்ச் சுழலும் விழிச் சுழலும்)
காட்சிக் குறிப்பு: பழையாறை அரண்மனையின் மாளிகைத் தோட்டத்தில் குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முதலில் சந்திக்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி திருநாள் ஆதலால், அரண்மனையில் குரவைக்கூத்து நடந்துகொண்டிருந்தது. அப்போது சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவையிலிருந்து குந்தவையின் தோழிமார்கள் பாடிய பாடல்கள் இவை.
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றை அம் தீங்குழல் கேளாமோ தோழீ
பொருள்: தன்னைக் கொல்லக் கன்றுக்குட்டி உருவில் வந்த அசுரனைக் காய் உதிர்க்கும் கொம்பாகத் தூக்கி எறிந்து விளாம்பழத்தை உதிர்த்த மாயவன், இன்று நம் பசுமாடுகளைக் காக்க வருவானாகில், அவன் ஊதும் கொன்றைக் காயால் செய்யப்பட்ட புல்லாங்குழலின் இசையைக் கேட்கலாமே, தோழி!
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லை அம் தீங்குழல் கேளாமோ தோழீ
பொருள்: நம் கொல்லையில் வஞ்சத்தால் குருந்த மரமாக வந்து நின்ற அசுரனை முறித்து எறிந்த மாயவன், நம் வழிபாட்டால் நெகிழ்ந்து நமக்கு அருள்புரிய இந்தப் பகலிலேயே நம் பசுக்களின் மத்தியில் வருவானாயின், அவன் வாயினால் ஊதுகின்ற இனிய முல்லைக் குழலோசையைத் தோழீ கேட்போம்
கண்ணென்ன கண்ணே
அத்தியாயம்: பாகம் 1 – அத்தியாயம் 49 (விந்தையிலும் விந்தை)
காட்சிக் குறிப்பு: பழையாறை அரண்மனையின் மாளிகைத் தோட்டத்தில் முதன்முதலில் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற குந்தவையும் வந்தியத்தேவனும், அங்கிருந்த நீரோடையில் படகின்மேல் கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே போகிறார்கள். அவர்கள் பேசி முடித்ததும் படகை விட்டு இறங்கி மீண்டும் அரண்மனைத் தோட்டத்திற்கு வருகிறார்கள். அப்போது இன்னும் குரவைக்கூத்து நடந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக இந்தச் சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல்கள் இன்னிசையுடன் ஒலித்துக் கொண்டிருந்தன.
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே
பொருள்: எல்லாத் தேவர்களுக்கும் பெரியவனை, மாயங்களில் வல்லவனை, பெரிய உலகங்கள் யாவற்றையும் உண்டாக்கிய நாபிக் கமலத்தை உடைய வானவனை, சிவந்த கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் கொண்டு திகழ்பவனை, கரு நிறமுடையவனை காணாத கண்கள் இருந்தும் என்ன பயனோ? அவனைக் காணும்போது (கண் கொட்டாமல் பார்க்காமல்) கண்களை இமைத்துக் காண்பவர்களுடைய கண்கள் என்ன கண்களோ?
கடந்தானை நூற்றுவர்பால் நால்திசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே
பொருள்: அறியாமை மிகுந்த உள்ளத்தினை உடைய மாமனாகிய கம்சன் செய்த வஞ்சகச் செயல்களை வென்றவனும், நான்கு திக்குகளிலும் உள்ளவர்கள் யாவராலும் போற்றப்படுபவனும், தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்களால் முழங்கப்படுபவனும், பாண்டவர் பொருட்டுத் துரியோதனனிடம் தூதாக நடந்து சென்றவனும் ஆகிய கண்ணனை, நாராயணா என்று செபிக்காத நாக்கினால் என்ன பயனாகும்
திருக்குறள்
ஒற்றறிதல்
அத்தியாயம்: பாகம் 3 – அத்தியாயம் 33 (வானதி கேட்ட உதவி)
காட்சிக் குறிப்பு: குடந்தை சோதிடர் வீட்டில் வந்தியத்தேவனைச் சந்தித்த வானதி, தான் நாகைப்பட்டினம் செல்வதற்கு வழித்துணையாகத் தன்னுடன் வருமாறு அவனை வேண்டினாள். அதற்கு மறுத்த வந்தியத்தேவனிடமும் சோதிடரிடமும் விரக்தியுடன் விடைபெற்றுச் சென்றாள். வானதியின் இந்தச் செய்கைக்கு விளக்கம் கேட்ட வந்தியத்தேவனிடம், குடந்தை சோதிடர் ஒற்றாடல் சாத்திரத்தை விளக்கும் இந்தக் குறள் வெண்பாக்களை எடுத்துக் கூறினார்.
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
பொருள்: தன்னுடைய பணியாளர்கள், தனது உறவினர்கள், தன் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்பவனே சிறந்த ஒற்றனாவான்.
என்செயினும் சோர்விலது ஒற்று.
பொருள்: முற்றும் துறந்த முனிவர்போல் வேஷம் பூண்டு, புகுந்திட முடியாத இடங்களிலும் புகுந்து ஆராய வேண்டியவற்றை எல்லாம் ஆய்ந்து அறிந்து, தன்மேல் சந்தேகப்படுபவர்கள் தனக்கு என்ன சித்திரவதை செய்தாலும் தாங்கிக் கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவனே சிறந்த ஒற்றனாவான்.
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
பொருள்: ஒரு ஒற்றன் கண்டறிந்து வந்து தனக்குத் தெரிவிக்கும் செய்தியை மற்றொரு ஒற்றன் கொண்டு வரும் செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
வாள்போல் பகைவர்
அத்தியாயம்: பாகம் 4 – அத்தியாயம் 2 (பாட்டனும் பேரனும்)
காட்சிக் குறிப்பு: தனது பாட்டனார் மலையமானுடன் கடம்பூருக்குச் செல்லப் புறப்பட்ட ஆதித்த கரிகாலன் வழியில் கெடில நதிக்கரையை வந்தடைந்தான். அப்போது அவனிடம் விடைபெற்றுக் கொண்ட மலையமான் அவனுக்குக் குறிப்பிட்டுச் சொன்ன குறட்பாக்கள் இவை.
அழுதகண் ணீரும் அனைத்து
பொருள்: பகைவர்கள் வணங்குகின்ற போதும் அவர்கள் கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும். அதேபோல், அவர்கள் அழுத கண்ணீரும் அவர்களது வஞ்சக எண்ணத்தை மறைக்கும்.
கேள்போல் பகைவர் தொடர்பு.
பொருள்: வாளைப்போல வெளிப்படையாகத் தமது தீயதன்மையைக் காட்டும் பகைவர்களைக்காட்டிலும், உறவினர்களைபோல நடித்துக் கூட இருந்து குழி பறிக்கும் பகைவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வாய்மை
அத்தியாயம்: பாகம் 5 – அத்தியாயம் 6 (முருகய்யன் அழுதான்)
காட்சிக் குறிப்பு: நாகைப்பட்டினத்தில் கடும்புயல் வீசியபோது, சூடாமணி விகாரத்தில் தங்கியிருந்த பொன்னியின் செல்வர், ஆலயத் திருப்பணிக்காகச் செப்புக்குடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொற்காசுகள் அனைத்தையும் புயலினால் வீடு இழந்தவர்களுக்கு அளிக்குமாறு புத்த பிக்ஷுவிடம் கூறினார். ஆனால், புத்த பிக்ஷுவோ, பொன்னியின் செல்வரே இப்பணியை முன்னின்று நடத்தவேண்டும் என்று விரும்பினார். அவ்வாறு தம்மை வெளிப்படுத்திக்கொண்டு திருப்பணி செய்தால், நாட்டில் குழப்பமும் கலகமும் நேரலாம் என்று பொன்னியின் செல்வர் தெரிவித்தார். அப்போது அவர் குறிப்பிட்ட குறட்பாக்கள் இவை.
தீமை இலாத சொல்லல்
பொருள்: வாய்மை என்று சொல்லப்படுவது என்ன என்றால், ஒருவருக்கு எந்த விதமான தீங்கும் நேராதவாறு சொல்வதே ஆகும்.
நன்மை பயக்கு மெனின்
பொருள்: குற்றமற்ற நன்மையைத் தரும் என்றால், பொய் சொல்வதையும் வாய்மை என்று கருதலாம்.
உடுக்கை இழந்தவன்
அத்தியாயம்: பாகம் 5 – அத்தியாயம் 80 (நிலமகள் காதலன்)
காட்சிக் குறிப்பு: குந்தவையும் வானதியும் தஞ்சையிலிருந்து திருவையாற்றுக்குப் போகும் வழியில் குதிரையில் வந்துகொண்டிருந்த பொன்னியின் செல்வரையும் வந்தியத்தேவனையும் சந்தித்தனர். அப்போது சோழ குலத்தவர்களின் நன்றி அறிதலைப் பற்றி பேச்சு வரும்போது, குந்தவை இந்தக் குறட்பாவைச் சொன்னாள்.
இடுக்கண் களைவதாம் நட்பு
பொருள்: ஒருவனுடைய உடை நழுவிக் கீழே விழும்போது எப்படி அவன் கை அதை உடனே சரிசெய்ய முனைகிறதோ, அதேபோல நண்பனுக்குத் துன்பம் நேரும்போது அந்தத் துன்பத்தைப் போக்க உடனே செயல்படுவது சிறந்த நட்புக்கு அடையாளமாகும்.