ஶ்ரீ ராமர் துதி மாலை

ராமர் துதி

ஶ்ரீ ராமர் துதி மாலை

அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் பெருமையைப் போற்றித் துதிக்கும் தமிழ்மாலை.

கவிதைகள் : இமயவரம்பன்

பொருளடக்கம்


ஶ்ரீ ராம திலகம்

பாவகை : சந்தக் கலித்துறை
சந்த அமைப்பு : தானான தான தனனா – தனதான தானா
1.
திண்ணார்ந்து நின்ற வரைநேர் சிரமையி ரண்டும்
புண்ணார்ந்து பொன்ற கணையோர் புயலாக எய்தாய்
எண்ணார்ந்த சித்த ரிமையோர் இசைபாட நின்றாய்
கண்ணார்அ யோத்தி நகராய் கருவண்ண போற்றி.
பதம் பிரித்து:
திண் ஆர்ந்து நின்ற வரை நேர் சிரம் ஐயிரண்டும்
புண் ஆர்ந்து பொன்ற கணை ஓர் புயலாக எய்தான்
எண் ஆர்ந்த சித்தர் இமையோர் இசை பாட நின்றான்
கண்ணார் அயோத்தி நகரான் கழல் ஓதுவோமே.

அருஞ்சொற்பொருள்:
திண்ணார்ந்த = வலிமை வாய்ந்த
வரை நேர் = மலைகள் போன்ற
புண் ஆர்ந்து = புண்பட்டு
பொன்ற = மடிய
கணை = அம்பு
எண் ஆர்ந்த = எண்ணிறைந்த
இமையோர் = தேவர்கள்
கண்ணார் = கண்ணுக்கு நிறைவான = அழகிய
கழல் = திருவடி
2.
ஏலாத செய்யு மதியான் இழிவுற்று வீழக்
கோலார்ந்த சார்ங்க மெனுமோர் குனிவில்லெ டுத்தாய்
தோலாத தன்ம(ம்) நிறுவத் துணைநின்ற வென்றி
மாலேஅ யோத்தி நகராய் மணிவீர போற்றி.
பதம் பிரித்து:
ஏலாத செய்யும் மதியான் இழிவு உற்று வீழக்
கோல் ஆர்ந்த சார்ங்கம் எனும் ஓர் குனி வில்  எடுத்தாய்
தோலாத தன்மம் நிறுவத் துணைநின்ற வென்றி 
மாலே! அயோத்தி நகராய்! மணிவீர! போற்றி.

அருஞ்சொற்பொருள்:
ஏலாத = சான்றோரால் ஏற்கத் தகாத செயல்கள்; 
ஏலார செய்யும் மதியான் = இராவணன்
கோலார்ந்த = அம்புகள் நிறைந்த; 
சார்ங்கம் = கோதண்டம் என்று அழைக்கப்படும் சாரங்க வில்;
குனி வில் = வளைந்த வில்;
தோலாத = தோற்காத; 
தன்மம் = தர்மம்; 
நிறுவ = நிலைநிறுத்த
வென்றி = வெற்றி
3.
ஓவாதி றைஞ்சி இமையோர் உலகோர்க ளேத்த
வீவேது மற்ற வரிவில் விரிதோளி லேற்றாய்
தாவாத மெய்ம்மை யுடையாய் தளராவ லத்தாய்
தேவா அயோத்தி நகராய் செயவீர போற்றி.
பதம் பிரித்து:
ஓவாது இறைஞ்சி இமையோர் உலகோர்கள் ஏத்த
வீவு ஏதும் அற்ற வரி வில் விரி தோளில் ஏற்றாய்
தாவாத மெய்ம்மை உடையாய் தளரா வலத்தாய்
தேவா அயோத்தி நகராய் செயவீர போற்றி.

அருஞ்சொற்பொருள்:
ஓவாது = இடைவிடாமல்
இறைஞ்சி = வேண்டி
இமையோர் = தேவர்கள்
வீவு = அழிவு
தாவாத = கெடாத
4.
நீராரி லங்கை இறையோன் நிலவாழ்வு தீரப்
போரார்ந்தி லங்கு தனியோர் பொருவில்கு னித்தாய்
காரார்ந்த மேனி உடையாய் கடிபூம்பொ ழில்சூழ்
சீரார யோத்தி நகராய் திருவாள போற்றி.
பதம் பிரித்து:
நீரார் இலங்கை இறையோன் நில வாழ்வு தீரப்
போர் ஆர்ந்து இலங்கு தனியோர் பொரு வில் குனித்தாய்   
கார் ஆர்ந்த மேனி உடையாய் கடி பூம் பொழில்சூழ்
சீரார் அயோத்தி நகராய் திருவாள போற்றி.

அருஞ்சொற்பொருள்:
நீரார் = கடல் சூழ்ந்த
இறையோன் = அரசன்
பொருவில் = போரிடும் வில்
குனித்தாய் = வளைத்தாய்
கார் ஆர்ந்த = மேகம் போன்ற நிறம் உடைய
கடி = வாசனை மிகுந்த
தாவாத = கெடாத
5.
சூலத்தி னோடு கரகம் சுடராழி சங்கும்
பாலாழி யோடு கமலம் பனிவெற்பு(ம்) நீங்கிச்
சேலார்ந்தி லங்கு சரயுச் செழுநாடு மேவும்
சீலா அயோத்தி நகராய் செகதீச போற்றி.
பதம் பிரித்து:
சூலத்தினோடு கரகம் சுடர் ஆழி சங்கும்
பால் ஆழியோடு கமலம் பனி வெற்பும் நீங்கிச்
சேல் ஆர்ந்து இலங்கு சரயுச் செழுநாடு மேவும்
சீலா அயோத்தி நகராய் செகதீச போற்றி.

அருஞ்சொற்பொருள்:
கரகம் = நான்முகனின் கமண்டலம்
சுடர் ஆழி = ஒளிவீசும் திருச்சக்கரம்
பால் ஆழி = பாற்கடல்
பனி வெற்பு = கயிலை
சேல் ஆர்ந்த = கெண்டை மீன்கள் நிறைந்த
சரயுச் செழுநாடு = சரயு நதி பாயும் கோசல நாடு
6.
மூவாமு தல்வ முனிவா முடிவில்வ லத்தாய்
காவாயி றைவ எனவுட் கனிவார்க்க ருள்வாய்
ஏவார்ந்த விற்கை யுடையாய் இகலேறி ராமா
பூவார யோத்தி நகராய் புவனேச போற்றி.
பதம் பிரித்து:
மூவா முதல்வ முனிவா முடிவில் வலத்தாய்
காவாய் இறைவ என உள் கனிவார்க்கு அருள்வாய்
ஏவு ஆர்ந்த வில் கை உடையாய் இகல் ஏறு இராமா
பூ ஆர் அயோத்தி நகராய் புவனேச போற்றி.

அருஞ்சொற்பொருள்:
மூவா = அழிவில்லாத
முனிவா = தவநெறி உடையவனே
முடிவில் = முடிவில்லாத
வலத்தாய் = வலிமை உடையவனே
காவாய் = (எம்மைக்) காப்பாற்றுவாய்!
ஏவு ஆர்ந்த = அம்புகளை ஏவுதற்கியன்ற
இகல் = பகைவர்கள்
ஏறு = காளை
இகல் ஏறு = பகைவர்களுக்குக் காளை போன்றவனே
பூ ஆர் = பூக்கள் நிறைந்த (பூஞ்சோலைகள் மிகுந்த)
7.
மாறாகி வந்த ஒருவன் மணிமெளலி பத்தும்
வேறாய்த்து ணிந்து விழவே விறலம்பு பெய்தாய்
ஆறாத அன்பி னனுமன் னகமோங்கி நின்றாய்
வீறார யோத்தி நகராய் விரிவில்லி போற்றி.
பதம் பிரித்து:
மாறாகி வந்த ஒருவன் மணிமெளலி பத்தும்
வேறாய்த் துணிந்து விழவே விறல் அம்பு பெய்தாய்
ஆறாத அன்பின் அனுமன் அகம் ஓங்கி நின்றாய்
வீறு ஆர் அயோத்தி நகராய் விரி வில்லி போற்றி.

அருஞ்சொற்பொருள்:
மாறாகி = எதிர்த்து
மணிமெளலி = மணிமகுடம் (மகுடம் அணிந்த தலை)
வேறாய்த் துணிந்து = தனியாக அறுபட்டு
விறல் அம்பு = வலிமை மிக்க அம்பு
வீறு ஆர்= பெருமை மிகுந்த
8.
தீயோர்தம் ஆவி பருகும் சிலையொன்று தாங்கித்
தூயோர்து யர்க ளொழியச் சுடரம்பெ றிந்தாய்
வாயால்வி ளம்ப அரிதாம் மகிமைநி றைந்தாய்
மாயா அயோத்தி நகராய் வளநாட போற்றி.
பதம் பிரித்து:
தீயோர் தம் ஆவி பருகும் சிலை ஒன்று தாங்கித்
தூயோர் துயர்கள் ஒழியச் சுடர் அம்பு எறிந்தாய்
வாயால் விளம்ப அரிதாம் மகிமை நிறைந்தாய்
மாயா அயோத்தி நகராய் வளநாட போற்றி.

அருஞ்சொற்பொருள்:
சிலை = வில்
மணிமெளலி = மணிமகுடம் (மகுடம் அணிந்த தலை)
விளம்ப = சொல்ல
9.
ஆனாத கீர்த்தி யுடனோர் அரசுற்ற போதும்
மானேய்ந்த கண்ணி யுடனே வனமேகு போதும்
வானார்ந்த ஞாயி றெனவே வதனம் பொலிந்த
கோனே அயோத்தி நகராய் குணவாள போற்றி.
பதம் பிரித்து:
ஆனாத கீர்த்தியுடன் ஓர் அரசு உற்ற போதும்
மான் ஏய்ந்த கண்ணியுடனே வனம் ஏகு போதும்
வான் ஆர்ந்த ஞாயிறு எனவே வதனம் பொலிந்த
கோனே அயோத்தி நகராய் குணவாள போற்றி.

அருஞ்சொற்பொருள்:
ஆனாத = அழிவில்லாத
மான் ஏய்ந்த = மான் போன்ற
ஏகு போதும் = செல்லும் போதும்
10.
தன்னே ரிலாத சனகன் தனிவில் இறுத்துப்
பொன்னார்ந்த மேனி மடவாள் பொலிதோள் புணர்ந்தாய்
தென்னீர் இலங்கை எரியச் செருவென்ற வீரா
மன்னா அயோத்தி நகராய் வரிவில்லி போற்றி.
பதம் பிரித்து:
தன் நேர் இலாத சனகன் தனி வில் இறுத்துப்
பொன் ஆர்ந்த மேனி மடவாள் பொலி தோள் புணர்ந்தாய்
தென் நீர் இலங்கை எரியச் செரு வென்ற வீரா
மன்னா அயோத்தி நகராய் வரி வில்லி போற்றி.

அருஞ்சொற்பொருள்:
தன் நேர் இலாத = தனக்கு நிகர் இல்லாத
பொன் ஆர்ந்த = பொன்னிறம் மிகுந்த
மடவாள் = இளமங்கையான சீதை
பொலி தோள் = சிறந்து விளங்கும் தோள்கள்
தோள் புணர்ந்தாய் = மணம் புரிந்தாய்
தென் நீர் = தென் திசைக் கடல் நீர் சூழ்ந்த
செரு வென்ற = போரில் வென்ற

அயோத்திப் பத்து

பாவகை : கலிவிருத்தம்
வாய்பாடு : மா கூவிளம் கூவிளம் கூவிளம்
1.
கார்மு கில்நிறத் தான்கதிர் மேனியன்
வார்ம லர்க்குழல் மைதிலி நாயகன்
நேரில் மொய்ம்பினன் நீள்புயத் தான்சிலை 
வீர னூரென்றும் வீவில் அயோத்தியே.
2.
வெருவ ரும்விறல் வெங்கனல் வாளியால்
சிரமொ ரையிரண் டிற்றிடச் செற்றவன் 
பொருவ ருங்குணத் தான்புனி தன்னருள் 
வரத னூர்வளம் மல்கும் அயோத்தியே.  
3.
செஞ்சொல் நாவினொர் அஞ்சனை செல்வனின்
நெஞ்ச கத்தில் நிறைந்தொளிர் நின்மலன்
அஞ்சல் நீயென் றளிப்பவன் கோசலை
மஞ்ச னூர்புகழ் மன்னும் அயோத்தியே.  
4.
கொய்ம்ம லர்சொரிந் தேத்தும் குணத்தவர்
தம்மை அன்பொடு தாங்கிடு சத்துவன்
மெய்ம்மை நின்றிட வில்லெடுத் தான்தனிச்
செம்ம லூரெழில் சிந்தும் அயோத்தியே.
5.
கூட லர்தம் கொடுந்தொழில் ஓய்ந்திட
நீடு யர்வரை நேர்சிலை ஏந்தினான்
கேடி லாவளம் கேழ்த்தநற் கோசல
நாட னூர்தமர் நாடும் அயோத்தியே.
6.
கல்லைப் பெண்ணாய்க் கனிந்திடச் செய்தவன்
தொல்க திர்க்குலத் தோன்றல் இராகவன்
அல்ல வையறுத் தோரறம் நாட்டிடும்
செல்வ னூர்துயர் தேய்க்கும் அயோத்தியே.
7.
அம்பி னாலகல் ஆழி எரித்தவன்
கம்ப நாடனின் காவிய நாயகன்
எம்பி ரானினி யானிணை யில்லதோர்
நம்பி யூர்நலம் நல்கும் அயோத்தியே.
8.
கார்மு கத்தை வளைத்த கரத்தினன்
போர்மு கத்தும் அருள்புரி புண்ணியன்
சீர்முகத் தொளி யான்செய மாதுவாழ்
மார்வ னூர்மறை ஓங்கும் அயோத்தியே.  
9.
உள்ளு வாருளத் துண்ணின் றொளிர்பவன்
விள்ள ரும்புகழ் விற்பெரு வித்தகன்   
துள்ளு நீர்ச்சர யுத்துறை வன்னருள் 
வள்ள லூர்திரு வாழும் அயோத்தியே.
10.
எண்ணில் தொல்புகழ் ஏத்திடும் எம்மனீர்!
மண்ணில் நற்கதி வாய்த்திட வம்மினோ!
திண்ணம் வெவ்வினை தீர்க்கும் இராமனெம்
அண்ண லூரணி யார்ந்த அயோத்தியே.

This Post Has 2 Comments

  1. மகாதேவன்

    அருமையான பாடல்கள் . நாளும்படிக்க ஏற்றதாயுள்ளது. மிக்க நன்றி.

    1. இமயவரம்பன்

      தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

Leave a Reply