சமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

தில்லை அம்பலத்தில் எடுத்த பொன்னடி – சிவ வணக்கம்

சமய சமரச விருத்தம் - கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

அடர்புல னறிவால் அளப்பரும் பொருளென்
    றமரரும் முனிவரும் அரற்றப்
படரழற் சடைதான் நெடுவிசும் பணவப்
    பறையொலித் துலக(ம்)நின் றிசைக்கக்
கடல்கிளர்ந் திரைக்கக் காற்றுழன் றெழும்பக்
    கடுவிட மிடறுடைக் கடவுள்
நடமிடப் பொதுவில் எடுத்தபொன் னடியாம்
    நணுகுநல் லடியவர்க் கரணே.

பதம் பிரித்து:

அடர் புலன் அறிவால் அளப்பு அரும் பொருள் என்று
    அமரரும் முனிவரும் அரற்ற,
படர் அழல் சடை தான் நெடு விசும்பு அணவ,
    பறை ஒலித்து உலகம் நின்று இசைக்க,
கடல் கிளர்ந்து இரைக்க, காற்று உழன்று எழும்ப,
    கடு விடம் மிடறு உடைக் கடவுள்
நடம் இடப் பொதுவில் எடுத்த பொன் அடியாம்
    நணுகு நல் அடியவர்க்கு அரணே.

பொருள்:

அடர் = ‘அறிய வேண்டும்’ என்னும் ஆசையால் ஈர்க்கப்பட்டு நெருக்கி வாட்டுகின்ற
புலன் = ஐம்புலன்களின்
அறிவால் = சிற்றறிவால்
அளப்பு அரும் = தான் ‘இப்படிப்பட்டவன்’ என்று அளந்து கண்டறிய முடியாத
பொருள் = அரும்பொருளாகத் திகழ்பவன் இறைவன்
என்று = என்று உணர்ந்த
அமரரும் முனிவரும் = தேவர்களும் முனிவர்களும்
அரற்ற = (அவனது தன்மையை இன்னதென்று புரிந்து கொள்ள முடியாமல்) திகைத்துப் புலம்பவும்,
அழல் = நெருப்பைப் போல
படர் = எங்கும் பரந்து விரிந்த
சடை தான் = சடைமுடியானது
விசும்பு = ஆகாசத்தை
அணவ = தொடும் அளவுக்கு இறைவனின் திருவுருவம் உயர்ந்து வளரவும்,
உலகம் = (இக்காட்சியைக் கண்டு பிரமிப்புற்று) ஏழேழ் உலகங்களும்
பறை ஒலித்து = பறை என்னும் இசைக்கருவியை ஒலித்து
இசைக்க = இறைவனின் புகழ் பாடவும்,
கடல் கிளர்ந்து = கடல்கள் எல்லாம் கொந்தளித்து
இரைக்க = பேரிரைச்சல் ஓசை எழுப்பவும்,
காற்று உழன்று = காற்றானது சுற்றுச் சுழன்று
எழும்ப = மேல் நோகி எழுந்து சூறாவளியாக வீசவும்,
(இப்படி பஞ்ச பூதங்களும் நடுங்கும் படியாக)
கடு விடம் = கடுமையான ஆலகால விஷத்தை
மிடறு = திருக்கழுத்தில்
உடை = கொண்ட
கடவுள் = இறைவனான சிவபெருமான்
பொதுவில் = தில்லைச் சிற்றம்பலத்தில்
நடம் இட= திருநடனம் புரிந்தபோது
எடுத்த = தூக்கிய
பொன்னடியாம் = பொன்போன்ற திருவடியானது
நணுகு = அத்திருவடியுடன் ஒன்றிக் கலந்து துதிக்கின்ற
நல் அடியவர்க்கு = நல்ல பக்தர்களுக்கு
அரணே = காப்பாக அமைந்து அருள் வழங்கும்.

போதி நிழல் அமர்ந்த அறிவன் – புத்த வணக்கம்

சமய சமரச விருத்தம் - கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

மருள்தரு பிறப்பை அறுத்திடும் வழியாம்
  மனத்திருள் ஒழித்திடும் ஒளியாம்
வெருள்தரும் இடும்பை விலக்குநெஞ் சுரமாம் 
  மிகுசினம் தணித்திடும் பரிவாம்
தெருளெழும் விழிப்பில் தெரிவுறும் அறிவாம் 
  சிறுமைகள் களைந்திடு துறவாம்
அருள்வளர் போதி நிழலறம் அமர்ந்த
  அறிவனன் றுரைத்தமெய்ந் நெறியே.

பதம் பிரித்து:

மருள் தரும் பிறப்பை அறுத்திடும் வழியாம்,
  மனத்து இருள் ஒழித்திடும் ஒளியாம்,
வெருள் தரும் இடும்பை விலக்கும் நெஞ்சு உரமாம்,
  மிகு சினம் தணித்திடும் பரிவாம்,
தெருள் எழும் விழிப்பில் தெரிவு உறும் அறிவாம், 
  சிறுமைகள் களைந்திடு துறவாம்,
அருள் வளர் போதி நிழல் அறம் அமர்ந்த
  அறிவன் அன்று உரைத்த மெய் நெறியே.

பொருள்:

அருள் வளர் = திருவருள் மிகுந்திருக்கும்
போதி நிழல் = போதி மரத்தின் கீழே
அறம் = தருமம் சிறக்கும்படி
அமர்ந்த = வீற்றிருக்கும்
அறிவன் = ஞான வடிவினரான புத்த பகவான்
அன்று = (தாம் ஞானம் அடைந்த) அந்தப் புனித நாளில்
உரைத்த = உலகுக்கு உபதேசித்த
மெய் நெறியே = உண்மை நெறியானது –
மருள் தரும் = மாயையால் விளையும் மயக்கம் மிகுந்த
பிறப்பை = ‘பிறப்பு – இறப்பு’ என்னும் சுழற்சியை
அறுத்திடும் = தடுத்து நிறுக்தவல்ல
மருந்தாம் = மருந்தாக விளங்கும்;
மனத்து இருள் = மனத்தில் தோன்றும் பொய்ம்மை என்னும் இருளை
ஒழித்திடும் ஒளியாம் = நீக்கும் உண்மை ஒளியாகவும் திகழும்;
வெருள் தரும் = அச்சத்தை உண்டாக்கும்
இடும்பை = துன்பநிலையை
விலக்கும் = ஒழிக்கும் வல்லமை வாய்ந்த
நெஞ்சு உரமாம் = மன உறுதியையும் தரும்;
மிகு சினம் = மிகுந்த சினத்தையும்
தணித்திடும் = தணிவித்து ஒழிக்க வல்ல
பரிவாம் = அன்பினைத் தோற்றுவிக்கும்;
தெருள் எழும் = தெளிவு மிகுந்த
விழிப்பில் = விழிப்பு நிலையில்
தெரிவு உறும் = புத்திக்கு விளங்கும்படியான
அறிவாம் = ஞானத்தைத் தரும்;
சிறுமைகள் = இழிவான எல்லாவற்றையும்
களைந்திடும் = விலக்கித் தள்ளும்
துறவாம் = பற்றுகள் அற்ற துறவு நிலையையும் அருளும்.

இறைவர் திருமகன் – இயேசு வணக்கம்

சமய சமரச விருத்தம் - கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

செழுந்திரு வரசாம் அருள்பர லோகம்
  சிறப்புற அடைந்திட விழைந்தால்
குழந்தைகள் போலத் தெளிவுறும் எளிமைக்
  குணமிகுந் திருந்திடல் நலமென்
றெழுந்திடும் பரிவால் தெளிந்தபொன் மொழிகள்
  இயம்பிடும் திருமகன் பதங்கள்
தொழுந்தவம் உடையோர் இருநிலம் இதனில்
  தொடர்ந்திட வருந்துயர் இலரே.

பதம் பிரித்து:

‘செழும் திரு அரசாம் அருள் பரலோகம்
  சிறப்புற அடைந்திட விழைந்தால்
குழந்தைகள் போலத் தெளிவு உறும் எளிமைக்
  குணம் மிகுந்து இருந்திடல் நலம்’ என்று
எழுந்திடும் பரிவால் தெளிந்த பொன் மொழிகள்
  இயம்பிடும் திருமகன் பதங்கள்
தொழும் தவம் உடையோர் இரு நிலம் இதனில்
  தொடர்ந்திட வரும் துயர் இலரே.

பொருள்:

செழும் = வளமிக்க
திரு = செல்வச் சிறப்பு ஓங்கும்
அரசாம் = இராஜ்யமான
அருள் = அருள்மிகுந்த
பரலோகம் = இறைவர் வீற்றிருக்கும் பரலோகத்தை
சிறப்புற = ஆன்ம ஈடேற்றம் உண்டாகுமாறு
அடைந்திட = பிரவேசிக்க
விழைந்தால் = நீங்கள் விரும்புவீரென்றால்
குழந்தைகள் போல = குழந்தைகளின் உள்ளம் போல
தெளிவு உறும் = மாசு மறுவற்றுத் திகழும் தெளிவு மிகுந்த
எளிமை = எளிமை தவழும்
குணம் மிகுந்து இருந்திடல் = குணம் நிறைந்த உள்ளம் கொண்டு வாழ்வது
நலம் = நல்லது
என்று = என்று சொல்லி
எழுந்திடும் = தமது திருவுள்ளத்தில் பொங்கிப் பெருகும்
பரிவால் = அன்பின் காரணமாக
தெளிந்த = தெளிவான
பொன் மொழிகள் = பொன்போன்று ஒளிரும் அருள்மொழிகளை
இயம்பிடும் = போதிக்கும்
திருமகன் = இறைவர் திருமகனாரான இயேசு பிரானுடைய
பதங்கள் = திருவடிகளை
தொழும் = வணங்கித் தொழுகின்ற
தவம் உடையோர் = பாக்கியம் பெற்றவர்கள்
இரு நிலம் இதனில் = இந்தப் பெரிய நிலவுலகத்தில்
தொடர்ந்திட வரும் = தொடர்ந்து வந்து வாட்டுகின்ற
துயர் = துன்பம் என்று ஒன்றும்
இலரே = இல்லாமல் இனிது வாழ்வார்கள்.

மறையருள் புரிந்த முதற்பொருள் – அல்லாஹ் வணக்கம்

சமய சமரச விருத்தம் - கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

அகவிருள் அகற்றும் அரும்பெருஞ் சுடரை,
  அருள்மழை பொழிந்திடும் முகிலை,
நிகரறும் அறிவின் நிறைவினை, நிலைக்கும்
  நெறியருள் அரசினை, உலகில்
பகையுணர் வழிக்கும் கருணையின் பெருக்கைப்
  பழுதறத் தொழுபவர்க் குயிரை,
முகமது நபிகட் கொருமறை பகர்ந்த
  முதல்தனிப் பொருளினைப் புகழ்வோம்.

பதம் பிரித்து:

அக இருள் அகற்றும் அரும் பெரும் சுடரை,
  அருள் மழை பொழிந்திடும் முகிலை,
நிகர் அறும் அறிவின் நிறைவினை, நிலைக்கும்
  நெறி அருள் அரசினை, உலகில்
பகை உணர்வு அழிக்கும் கருணையின் பெருக்கைப்
  பழுது அறத் தொழுபவர்க்கு உயிரை,
முகமது நபிகட்கு ஒரு மறை பகர்ந்த
  முதல் தனிப் பொருளினைப் புகழ்வோம்.

பொருள்:

அக = மனத்தின்
இருள் = அறியாமை என்னும் இருளை
அகற்றும் = விலக்கும் வல்லமை வாய்ந்த
அரும் = அரியதான
பெரும் = பெருமைமிக்க
சுடரை = ஒளிச்சுடராக இருப்பவனை,
அருள் மழை = திருவருள் மழையை
பொழிந்திடும் = பெய்யும்
முகிலை = மேகம் போல விளங்கி உயிர்களைக் காப்பவனை,
நிகர் அறும் = தனக்கு நிகர் என்று ஒன்றும் இல்லாத
அறிவின் நிறைவினை = குறைவற்ற ஞானம் நிறைந்தவனை,
நிலைக்கும் = என்றும் நிலைத்திருக்கும்
நெறி = உண்மையான திருநெறியை
அருள் அரசினை = அருள்கின்ற பேரரசனை,
உலகில் = இந்த உலகத்தில்
பகை உணர்வு = பகைமையை
அழிக்கும் = ஒழிக்க வல்ல
கருணையின் பெருக்கை = கருணை வெள்ளத்தைப் போன்றவனை,
பழுது அற = குற்றம் குறைகள் நீங்கும்படியாக
தொழுபவர்க்கு = தொழுது வணங்குபவர்களுக்கு
உயிரை = ஆருயிர் போன்றவனை,
முகமது நபிகட்கு = நபிகள் நாயகம் அவர்களுக்கு
ஒரு = ஒப்பற்ற
மறை = திருகுர்ஆன் ஆகிய மறையை
பகர்ந்த = ஓதி அருளிய
முதல் = அனைத்துக்கும் ஆதியாகிய
தனி = தனித்துவம் வாய்ந்த
பொருளினை = மெய்ப்பொருளாகிய இறைவனை
புகழ்வோம் = புகழ்ந்து பாடுவோம்

Leave a Reply