சுந்தரர்

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் இசை ஞானியார் , சடையனார் என்னும் தாய் தந்தையருக்கு மைந்தராகத் தோன்றினார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘நம்பி ஆரூரன்’. அழகில் சிறந்து விளங்கியதால் அவரை ‘சுந்தரர்’ என்றும் அழைத்தனர்.

நரசிங்க முனையரையர் என்னும் அரசர் நம்பி ஆரூரரை எடுத்து வளர்த்தார். இவரது திருமணத்தில் இறைவன் ஒரு வேதியராக வந்து, ஓலை ஒன்றைக் காட்டி இவரைத் தனக்கு அடிமையென்று சாதித்து இவர் மீது வழக்கு எடுத்தான். நம்பி ஆரூரர் தம் மீது வழக்கைத் தொடர்ந்த  அந்த வேதியரிடம் வாதிட்டுத் தோற்றார். பின்னர், வேதியராக வந்து தன்னைத் தடுத்து ஆட்கொண்டவன் இறைவனே என்பதை உணர்ந்த நம்பி ஆரூரர், ‘பித்தா பிறைசூடி’ என்னும் திருவெண்ணெய்நல்லூர் பதிகம் பாடித் துதித்தார். இறைவனுடன் வலிந்து வாதம் செய்தமையால் ‘வன் தொண்டர்’ என்னும் திருப்பெயரும் சுந்தரருக்கு வழங்கலாயிற்று.

திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தில், கோவிலை ஒட்டிய திருமடத்தில் ஒருநாள் நம்பி ஆரூரர் படுத்து உறங்கினார். அப்போது, ஈசன் ஒரு முதியவராக வந்து தன் திருவடிகளைச் சுந்தரரின் முடிமேல் வைத்தருளி ‘என்னை உனக்குத் தெரியவில்லையா?’ என்று கேட்டு மறைந்தான். முதியவராக வந்தவர் சிவபெருமானே என்று உணர்ந்த சுந்தரரும்,  ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடிப் பணிந்தார்.

முன்பு, திருக்கயிலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக ஆலால சுந்தரர் என்னும் பெயர் பெற்று விளங்கியர் நம்பி ஆரூரர்.  அப்போது உமாதேவியின் பணிப்பெண்களான கமலினி, அநிந்திதை என்னும் பெண்மணிகள் மீது காதல் கொண்டார். அந்த வினையைத் தீர்க்க மண்ணுலகில்  நம்பி ஆரூரராகத் தோன்றினார். கமலினியும் அநிந்திதையும் முறையே பரவையார், சங்கிலியார் என்னும் பெயரில் பிறவி எடுத்தனர்.

அவ்வாறு மண்ணுலகில் நம்பி ஆரூரராகப் பிறந்த ஆலால சுந்தரர், சிவபெருமானின் திருவருளின் வலிமையால், திருவாரூரில் வன்மீகநாதர் ஆலயத்தில் கமலினியாக அவதரித்துள்ள பரவையாரைக் கண்டார். அந்தப் பெண்ணின் நல்லாளை மணம் செய்து கொள்ள விரும்பினார். இறைவன் திருவுள்ளப்படி சுந்தரருக்கும் பரவையாருக்கும் திருமணம் இனிதாக நிகழ்ந்தேறியது. 

திருவாரூரில் ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனார் இறை தரிசனத்திற்குச் சென்ற போது, இறைவன் அவர்முன் தோன்றி தன் அடியார்களைப் போற்றி சொல் மாலை சாற்றும்படி அவருக்குக் கட்டளையிட்டான்; அந்தச் சொல்மாலைக்குத் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று அடி எடுத்துக்கொடுத்து மறைந்தான்.  ஆரூரரும் சிவனடியார்கள் புகழை எடுத்துரைக்கும் ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் பரவசத்தில் ஆழ்ந்தார். 

குண்டையூர்க்கிழார் என்னும் அன்பர் திருவாரூரில் எழுந்தருளியிருந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெல் அனுப்பி வந்தார். ஒருசமயம் குண்டையூரில் நெல் விளைச்சல் குறைந்திருந்தபடியால், நம்பி ஆரூரருக்கு நெல் அனுப்ப முடியாமல் வருத்தம் கொண்டு இறைவனை வேண்டினார் குண்டையூர்க்கிழார். அப்போது இறைவன் அருளால் அந்த ஊர் முழுவதும் நெற்கதிர்கள் மலைபோல்  குவிந்தன. இறைவனுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்த குண்டையூர்க்கிழார் இத்தனை நெல்லையும் எவ்வாறு சுந்தரரிடம் சேர்ப்பிப்பது என்று செய்வதறியாது திகைத்தார். இதைக் கேள்வியுற்ற சுந்தரர் திருக்கோளிலி இறைவனைப் புகழ்ந்து  ‘நீள நினைந்து அடியேன்’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடிச் சிவனருளால் அந்த நெற்கதிர்கள அனைத்தையும் திருவாரூரில் சேர்ப்பிக்கச் செய்து குண்டையூர்க்கிழாரின் தொண்டுள்ளத்துக்கு மேலும் மகிழ்வூட்டினார்.  

திருநாட்டியத்தான்குடியில் வாழ்ந்த கோட்புலியாரின் மகளிராகிய சிங்கடி, வனப்பகை என்னும் இருவரையும் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னையும் திருமுதுகுன்றில் ஆற்றில் இட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்தார். 

திருக்குருகாவூரில் தாகத்தாலும் பசியாலும் வருந்திய சுந்தரரும் அடியவர்களும் பசியாறுமாறு பந்தர் ஒன்றை அமைத்துப் பொதிசோறு அளித்து அருளினான் இறைவன். திருக்கச்சூரில் பசியுடன் இருந்த சுந்தரரின் துயரைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட ஈசன், ஓர் அந்தணர் வேடம் தாங்கி கையில் ஓடு ஒன்றை ஏந்தி, வீடுகள் தோறும் யாசித்துப் பிச்சை பெற்று அச்சோற்றைச் சுந்தருக்கு அளித்து அவர் பசியைப் போகினான்.  

முன்னர் சொன்ன கயிலைச் சம்பவத்தின்படி, சங்கிலியார் என்னும் திருப்பெயரில் திருவொற்றியூரில் பிறந்திருந்தார் அநிந்திதையார். இறைவன் திருவருளால் சங்கிலியாரை மணந்தார் நம்பி ஆரூரர்; ‘திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்’ என்றும் சங்கிலியார் பொருட்டு இறைவன் முன் சபதம் செய்து வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு தாம் செய்த சபதத்தைக் காத்து திருவொற்றியூரில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள், திருவாரூருக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்னும் எண்ணம் மிகுந்து, அவ்வூரை நோக்கிச் சென்றார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும், சபதத்தின் வலிமையால், அவருடைய இரு கண்களும் பார்க்கும் சக்தியை இழந்தன.

கண்பார்வை இழந்தாலும் திருவாரூருக்குச் செல்லவேண்டும் என்ற உறுதியோடு இருந்த சுந்தரர், வழியில் திருவெண்பாக்கத்தை அடைந்தார். வெண்பாக்கத்துப் பெருமானைப் பாடி ஊன்றுகோல் ஒன்றைப் பெற்றுக்கொண்டார். காஞ்சிமாநகரில் ஏகம்பனைத் தொழுது, தம் இடக்கண் பார்வையை மீண்டும் பெற்றார். வழியில் தலங்கள் பலவற்றைத் தரிசித்துக்கொண்டே திருவாரூரைச் சென்றடைந்தார்; தியாகேசரைத் தொழுது இறைஞ்சித் தம்மைத் துயரத்திலிருந்து காத்தருள வேண்டினார். அவரது இசைப்பாடலைக் கேட்டு அவருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், அவருக்கு வலக்கண் பார்வையும் கொடுத்தருளினான். 

இழந்திருந்த கண்பார்வையை இறையருளால் மீண்டும் பெற்று மகிழ்ந்த தம்பிரான் தோழராகிய ஆரூரர், தாம் பரவையாருடன் மீண்டும் இணைய அருளுமாறு வேண்டினார். ஈசனும், தனது தோழரின் துயரைத் துடைக்கும் பொருட்டு ஓர் ஆதி சைவர் வடிவம் கொண்டு பரவையாரிடம் தூது சென்று அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்துவைத்தான்.

திருப்புக்கொளியூர் என்னும் இடத்தில், ஒரு சிறுவன் மடுவில் குளிக்கும்போது முதலையால் விழுங்கப்பட்ட செய்தியைக் கேட்டார் சுந்தரர். அவனது பெற்றோர் படும் துயருக்கு மனமிரங்கி சிவபெருமானைத் துதித்து ‘ஊரைப் பார் உரை உகந்து’ என்ற பாடலைக் கொண்ட பதிகத்தைப் பாடினார். அந்தப் பாடலைப் பாடி முடிப்பதற்குள் முதலையும் அந்தச் சிறுவனைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்து சென்றது.

ஏயர்கோன் கலிக்காமர், சோமாசி மாறர், சேரமான் பெருமாள் முதலிய நாயன்மார்களுடன் நட்பு கொண்டு வாழ்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார். ஒருநாள் திருவஞ்சைக்களத்துக் கோயிலுக்குச் சென்று ‘உலக வாழ்க்கையை அறுத்து ஆட்கொள்ள வேண்டும்’ என்று வேண்டிப் பதிகம் பாடியருளினார். அவரது வேண்டுதலுக்கு இசைந்த இறைவன், சுந்தரரைக் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானை ஒன்றை அனுப்பி வைத்தான். அந்த யானையின் மீது ஏறிக் கயிலைக்கு ஆகாய மார்க்கமாகச் செல்லும் சுந்தரரைக் கண்ட அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார், அவருடன் கயிலைக்குத் தாமும் செல்ல விருப்பம் கொண்டார்; தம் குதிரையின் செவியில் சிவமந்திரத்தைச் சொல்லி விண்ணில் செலுத்திக் கயிலையை அடைந்து சுந்தரருடன் இணைந்தார் என்பது பெரிய புராணம் வாயிலாகத் தெரியவரும் செய்தியாகும்.  

Leave a Reply