தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

தேடிச் சோறு

பாடல் வரிகள்

தேடிச் சோறுநிதந் தின்று — பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
  கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
   வீழ்வே னென்றுநினைத் தாயோ?

          – மகாகவி பாரதியார்

English Translation

Always foraging for food,
Trivial talks that do no good,
Suffering badly at the heart,
Actions hurting others a lot,
Growing old with greying hair,
Dying a victim to death unfair,
You thought my life will end in vain,
Like those clowns whom I disdain?

Lyrics

ThEdi chOru nitham thindru – pala
   Chinnan chirukadhaigal pEsi – manam
VAdi thunbamiga uzhandru – pirar
   VAda palaseyalgal seithu – narai
KUdik kizhapparuvam eythi – kodung
   KUtruk kiraiyenappin mAyum – pala
VEdikkai manitharaip polE – NAn
   VIzhvE nendruninaith thaiyO?

விளக்கம்

உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃது உளே
உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை
ஓர் கனவிலும் கனவாகும்

பாரதி (சுயசரிதை)

“உலகம் முழுதும் ஒரு பெரிய கனவுத் தோற்றம். அந்தப் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவுதான் மனித வாழ்க்கை. இந்தக் கனவை நிஜமென்று எண்ணி உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் மனிதர்கள், நெருப்பைக் கனியென்று நினைத்து அதில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகள் போன்றவர்கள்.” – இந்த மெய்ஞ்ஞானப் புரிதலுடன் தொடங்குகிறது பாரதியின் சுயசரிதைப் பாடல். தான் தெளிந்துணர்ந்த இவ்வுண்மையை உலகத்திற்கு எடுத்துரைக்க முனைந்தான் பாரதி. ‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று உபதேச மொழி அளித்தான். ‘நெஞ்சு பொறுக்கு திலையே’ என்று உணர்வெழப் பாடினான். ஆனால், தனது சொற்கள் சமுதாயத்தில் எந்த விதமான மாற்றத்தையும் விளைவிக்காததைக் கண்டு கொதித்தான்; மனம் வருந்தினான். இந்த வீண்படு பொய்யை விரும்பிடும் மனிதர்களின் இழிநிலையைத் தெய்வத்திடம் சொல்லி முறையிட்டான். இவ்வேடிக்கை மனிதர்களைப் போல் தன்னையும் வீழ்ந்து மடிய விடாமல், சொல்லில் சுடரும், தோளில் வலிமையும், வையத் தலைமையும் அருள வேண்டினான். இப்படிச் சிறுமை கண்டு பொங்கும் உணர்ச்சிப் பிரவாகமே, துதியாய் ஒலிபெற்று ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் ‘யோக சித்தி’ பாடலாக உருவெடுத்தது.

நல்லதோர் வீணை‘யாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை தன்னலமென்னும் திரை மூட, நரை கூட, பிணி சேரக் காலனுக்கு இரையாக முடிந்து விடக் கூடாது. இந்த அக்கறையும் அன்பும் சேர்ந்து இடித்துரைக்கும் பாங்குடன் எழுந்த ஆவேச வெளிப்பாடே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

பராசக்தியைப் பார்த்துப் பாரதி பாடிய இந்தப் பாடல், நமக்குள் இருக்கும் உள்மன அழுக்குகளையும் குற்றம் குறைகளையும் அப்பட்டமாகச் சுட்டிக் காட்டும் நிலைக்கண்ணாடி போலவும் திகழ்வதை யாரும் மறுக்கமுடியாது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ வாழும் வாழ்க்கை மனிதனை ஒரு குறுகிய வட்டத்தில் வைத்துத் தன்னலச் சிறையில் தள்ளித் தனிமைப்படுத்தும். அதனால் மனித வாழ்வு தாவர வாழ்விலிருந்தும் விலங்கின வாழ்விலிருந்தும் மாறுபட்டுப் பயனுள்ள செயல்கள் செய்து வாழ்ந்ததற்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். பாரதியார் காட்டும் இந்த முக்கியமான வாழ்க்கைப் பண்பை நாம் உணர வேண்டுமென்றால், இதை வெறும் தோத்திரப் பாடல்தானே என்று அலட்சியமாக நோக்காமல், இப்பாடல் அறிவுறுத்தும் உன்னதமான வாழ்நெறியைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

வாழும் வாழ்வைப் பயனுள்ளதாக்காமல் வீணடிக்கும் மனிதர்களைப் பார்த்து ஏளனமும், வெறுப்பும், மனவேதனையும், ‘இவர்கள் திருந்தி வாழ மாட்டார்களா’ என்னும் ஏக்கமும் ஒருங்கே வெளிப்படும் இப்பாடலின் உட்பொருளை இப்பதிவில் நாம் சற்று விரிவாகக் காண்போம்.

பொருளடக்கம்

தேடிச் சோறு நிதம் தின்று

‘தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்து மாரி’ – சக்தியிடம் சரண்புகும் இந்தப் பாடல் வரியில் வெளிப்படும் தேடல் ஆன்மீகத் தேடல்; ஞானம் முதிர்ந்த மனத்தினால் கடவுளை நாடும் தேடல்;  பராசக்தியின் அருளை மட்டுமே விரும்பி அன்புத் திரியிட்டு உணர்வென்னும் விளக்கேற்றி உள்ளத்தில் தேடும் தேடல்.  ஆனால், ‘தேடிச் சோறு நிதம் தின்று’ வாழும் மனிதர்களின் இழிவான தேடலோ, லெளகிகத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்ய திரவியம் தேடித் திரிந்து உழலும் தேடல்;  குறிக்கோளற்ற வாழ்வினால் திசைதடுமாறி அலையும் தேடல்; அருள் நாட்டம் இல்லாமல் வெறும் பொருள் நாட்டம் மிகுந்த தேடல். 

‘ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே’ என்பார் தொல்காப்பியர்.  மனத்தேடல், பணத்தேடல் என்னும் இந்த இருவேறு தேடல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து, மனமாகிய ஆறாவது அறிவை நன்முறையில் பயன்படுத்தும்போதுதான் மனிதன் உயர்நிலையை அடைகிறான்; ‘தேடிச் சென்று திருந்தடி ஏத்தும்’ பக்குவத்தைப் பெறுகிறான். அத்தகைய உயர்ந்த தேடலின் முடிவில் ‘சென்றே புகும் கதி இல்லை’ என்ற புரிதலுடன் தேடலும் அசைவும் அற்ற நன்னிலையும் வாய்க்கப்படுகிறான். இந்தப் பேருண்மையை உணர்ந்தால் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களும் விழிபெற்று உயர முடியும்; ஈயும் கருட நிலைக்கு முன்னேற முடியும். விழிப்புற்று உயர்ந்த இந்நிலை அனைவருக்கும் வாய்த்து, ஊரும் உலகமும் ‘தொல்லை வினை தரும் தொல்லை அகன்று’ துலங்கவேண்டும் என்று விழையும் தன்னலமற்ற பார்வையும் பாரதியின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’  என்னும் இந்தப் பாட்டில் காண முடிகிறது. 

பாரதி காட்டுகின்ற இந்தப் பரிவும் கண்டிப்பும் தாயுமானவர் வார்த்தைகளிலும் மிளிர்வதைக் காணலாம்.  “நிலையில்லாத உலக வாழ்க்கையை மெய்யென்று நம்பி வாழும் மதியிலா மனிதர்களின் வாழ்வொழுக்கத்தைப் பற்றி நான் என்ன என்று சொல்வேன்?  அவர்களுடைய பொழுதுபோக்கு என்னவென்றால் தம் பொய்யான உடலைப் பெருக்கும் பொருட்டு  உணவைத் தேடி அலைந்து திரிதல். பின்பு உண்ட களைப்பு தீரப் படுத்து உறங்குதல்.  இவ்வாறு வாழ்தல் தம்மையும் ஊரையும் ஏமாற்றும் வஞ்சனை செயல்தானே? அன்றி இது பெரிய தவச்செயலாகுமா? இவ்வாறு இவர்கள் வாழ்வை வீணடிப்பது, கண்பார்வை இல்லாத குருடர்களுக்குக் கூட வெளிப்படையாகத் தெரியுமே! அப்படியிருந்தும் இந்த வீணர்களைக் கண்டிப்பார் யாரும் இல்லையா?  இம்மாதிரி மனிதர்களை விட்டு விலகி அவர்கள் முகத்திலேயே விழிக்காமல் நான் தனித்து நிற்கும் காலம் எக்காலம்? ” என்று கேட்கும் தாயுமானவரின் பாடல், பாரதியின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ கவிதையின் மூலப் பாடல் போன்று தோன்றுவதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

பொய் திகழும் உலக நடை என்சொல்கேன்! என்சொல்கேன்!
பொழுதுபோக்கு ஏது என்னிலோ
பொய் உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்
புசித்தபின் கண் உறங்கல்
கைதவம் அலாமல் இது செய்தவம் அது அல்லவே
கண்கெட்ட பேர்க்கும் வெளியாய்க்
கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல்
எக்காலமோ! அதை அறிகிலேன்.

தாயுமானவர்

தாயுள்ளம் படைத்த தாயுமானவரையே வருந்தி விலக வைக்கும் வேடிக்கை மனிதர்களை நோக்கித் தவயோகியாகிய திருமூலர் இவ்வாறு விளிக்கிறார்: “உழைப்பின்றிச் சோற்றினை உண்டு வயிற்றை நிரப்பும் பொருட்டுப் பொய்யான தவவேடங்களைப் பூண்டு மக்களை மயக்கி அச்சுறுத்திப் பிழைப்பு நடத்தித் திரியும் பேதைகளே!”

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!   

திருமூலர்

‘அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம்’ என்று பட்டினத் தடிகள் சொல்வதையும் இங்குக் கருத்தில் கொள்ளலாம். அதாவது, “நம் வாழ்வில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் உணவு கிடைக்கவேண்டுமே என்னும் கவலை. அந்தக் கவலை தீர்ந்தபின் பொன் பொருள் சேர்க்கவேண்டுமே என்னும் கவலை. பின்னர் நல்ல மனையாள் அமையவேண்டுமே என்னும் கவலை. இவ்வாறு கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றிக்கொண்டே இருந்தால் எவ்வாறு நாம் வாழ்வில் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு வாழ்ந்து இறைவனடியை நாடுவது?” என்று கடவுளிடம் முறையிட்டு வருந்துகிறார் பட்டினத்தார்.

தாயுமானவரையும் திருமூலரையும் பட்டினத்தாரையும் கற்றுணர்ந்த தூயகவியாகிய பாரதியும், இவர்கள் மூவரின் கருத்தையும் ஒன்று திரட்டித் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் தமது புதுமை ததும்பும் பாடல் மூலம் பாமரரும் அறிந்து உணரும் பொருட்டு எளிய தமிழில் நமக்கு அளித்திருக்கிறான்.

இவ்விடத்தில் வில்லியம் வோர்ட்ஸ்வர்த் என்னும் ஆங்கில மகாகவியின் இந்த வார்த்தைகளையும் சிந்தித்துப் பார்க்கலாம்.

The world is too much with us;
Late and soon,
Getting and spending, we lay waste our powers.

William Wordsworth

இவ்வுலகம் தரும் சுகங்களை நுகர்வதில் நாம் மிகவும் ஈடுபாடு காட்டுகிறோம்;
எப்போதும் பணத்தை சம்பாதிப்பதும் செலவழிப்பதுமாகப் பொழுதைக் கழிக்கிறோம்;
அதனால் நமது திறமைகளை எல்லாம் வீணடிக்கிறோம்.

வில்லியம் வோர்ட்ஸ்வர்த்
  • பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

    ‘பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ – இந்தச் சொற்கள், பயனற்ற பழங்கதைகள் பல பேசிக் கலகத்தை உண்டாக்கும் வேலையற்ற வீணர்களைக் கண்டிக்கும் கனல் தெறிக்கும் வார்த்தைகள்; நெஞ்சில் உரமும் இல்லாமல், நேர்மைத் திறமும் இல்லாமல், வஞ்சனை சொல்லி மதிமயக்குபவர்களைப் பார்த்துக் கொதித்தெழும் நெருப்பின் பிழம்பு; ‘சொல்வேறு செயல்வேறு’ என்று இருக்கும் போலி மனிதர்களின் பொய்யான போக்கைப் படம்பிடித்துக் காட்டும் சொற்சித்திரம். பொய்ம்மையைச் சாடிப் புயலென வீசும் இந்த வார்த்தைகள் புகட்டும் பாடத்தை நாம் ஆராய்ந்து கற்றுணர்வோம்! வாருங்கள்!

    மேலும் படிக்க


  • மனம் வாடித் துன்பம் மிக உழன்று

    ‘மனம் வாடித் துன்பம் மிக உழன்று’ – இந்த வார்த்தைகள், மனக்கவலை என்னும் சுழலில் சிக்கிச் சுழன்று தவிப்பவர்களைப் பார்த்து நெஞ்சம் வாடும் ஒரு மகாகவிஞனின் மனக்குமுறல்; எதற்கெடுத்தாலும் பதைபதைத்து நெஞ்சம் துடிதுடித்துத் துயரக் கடலில் ஆழும் மனிதர்களின் இழிநிலையைக் கண்டு வெடிக்கும் வார்த்தைச் சிதறல்; அஞ்சி அஞ்சி சாகும் அடிமைத்தனத்தை ஒழிக்கப் புறப்பட்ட அக்கினிக் குஞ்சு; உலகம் யாவையும் அமுதமெனப் பார்க்கும் வேத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வழிகாட்டும் மணிமொழிகள். இத்தகைய ஆற்றல் மிகுந்த வார்த்தைகளின் அர்த்தத்தை இப்பதிவில் ஆராய்ந்து நோக்குவோம்.

    மேலும் படிக்க


  • பிறர் வாடப் பல செயல்கள் செய்து

    ‘பிறர் வாடப் பல செயல்கள் செய்து’ – துன்புறுத்தித் துயர் கொடுத்துத் தொல்லை வினைகள் புரிந்து பிறர் வாழ்வைச் சிதைக்க நினைக்கும் மதிகெட்ட மூடர்களின் நெறிகெட்ட செயல்களைப் பழிக்கும் பாரதியின் இந்தச் சொற்களில் புதைந்துள்ள உணர்வுகளை இந்தப் பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.

    மேலும் படிக்க


  • நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

    ‘நரை கூடிக் கிழப்பருவம் எய்தி’ – ஞானத்திலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாமல் தலைநரைத்து வயது முதிர்ந்து முதுமை அடைந்தவர்களின் வாழ்க்கை தமக்கும் தம் சந்ததியினருக்கும் எந்த வித நன்மையும் அளிக்காத வீண்வாழ்வாகவே முடியும். இந்தப் பேருண்மையைச் சொல்லும் பெருங்கவிஞரின் இந்த ஞானமொழிகளின் கருத்தை இப்பதிவில் ஆய்ந்து நோக்குவோம்.

    மேலும் படிக்க


  • கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

    ‘கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்’ – கண்மண் தெரியாமல் கயிற்றினை வீசிக் கணக்கற்ற உயிர்களின் கணக்கை முடிக்கும் காலன் கருணையற்றவன்; காலம் நேரம் பார்க்காதவன்; நல்லோர் தீயோர் என்று தெளியாதவன். அத்தகைய மிருககுணம் கொண்ட காலனுக்கு உணவாகப் பயனின்றி வாழ்ந்து மடிகின்ற பேதை மனிதர்களின் நிலையைக் கண்டு வருந்தும் பாரதியின் இந்த வார்த்தைகளை இப்பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.

    மேலும் படிக்க


  • பல வேடிக்கை மனிதரைப் போலே

    தேடிச் சோறு நிதம் தின்று வெற்று வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்ந்து மடியமாட்டேன் என்னும் இந்தக் கவிதை வரியில் வெளிப்படும் எள்ளலும், நகைப்பும் கலந்த இடித்துரைப்பும் உணர்த்தும் வாழ்க்கைநெறியை இங்கு ஆய்ந்து பார்க்கலாம்.

    மேலும் படிக்க


  • நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    “நான் சராசரி மனிதர்களைப் போல இழிவாழ்க்கை வாழப் பிறந்தவன் அல்ல; புகழ்வாழ்க்கை வாழ்ந்து செயற்கரிய செயல் புரிந்து இந்த மானுடத்தை உயர்த்த வந்தவன். அதனால் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வாழ்ந்து மடியும் மூடர்களைப் போல ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'” என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்கும் துணிவும் துடிப்யும் மிகுந்த இந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை இங்கு ஆய்ந்து பார்ப்போம்.

    மேலும் படிக்க


முடிவுரை

The great poets are judged by the frame of mind they induce. 

Ralph Waldo Emerson

படிப்பவர் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றனரோ, அதனைக் கொண்டே பெருங்கவிஞர்கள் மதிப்பிடப்பெறுகின்றனர்.

எமர்சன்

பாரதி, மனிதனை மகிழ்விக்கும் பாடல்களுடன் மனித மனத்தை உணர்வித்துச் சிந்தை தெளிவிக்கும் கருத்தாழம் மிகுந்த கவிதைகளையும் இயற்றியவன்; இன்பத்தோடு வாழ்வின் குறிக்கோளையும் இன்னதென்று காண்பித்தவன்; தான் உணர்த்தும் கருத்துகளின் ஊடே பயணம் செய்பவர்களின் மனத்தில் பிரிவுகளைத் தகர்த்து விரிவினை ஏற்படுத்துபவன். ஆதலால் தான், அவன் வான்புகழ் கொண்ட மகாகவியாகப் போற்றப்படுகிறான். நம் உள்ளத்தில் உறைந்திருக்கும் மானுடத் தன்மையைத் தட்டி எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், ‘நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’ என்றும் போற்றப்படுகிறான்.   

தீராத ஆன்ம தாகம் கொண்ட அந்த மகாகவிஞனின் மனத்தில் கனன்று எழுந்த அக்கினிக் குஞ்சுதான் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் கவிதையாக உருவெடுத்து வெளிப்பட்டது. ஜகன்மாதாவான பராசக்தியிடம் வரம் வேண்டிப் பாடிய இப்பாடல்,  வேண்டலுடன் வேதவாழ்வினைக் கைப்பிடிக்கத் தூண்டலையும் உயர்நோக்கமாகக் கொண்ட நயமிகுந்த நற்பாடல்; ஊருக்கு நல்லது சொல்ல விழையும் கவிஞன் உணர்வெழ உரைத்த உபதேச மொழி; கவலையிலா மானுடத்தையும் கலகமிலா உலகத்தையும் படைக்க முழங்கிய சங்கினொலி.

முப்புரத்தையும் சிரித்தே எரித்த சிவபெருமானைப் போல், நம் மனத்தில் வேரூன்றி வளர்ந்த சிறுமை, பேதைமை, மடமை என்னும் மூன்றையும் பார்த்து எள்ளி நகைத்தே எரித்தழிக்க முயலும் பாரதியின் அருளுள்ளத்தில் எழுந்த அருங்கவிதை இது. இக்கவிதை சொல்லும் கருத்தை மறைமொழியாக நெஞ்சில் நிறுத்தி வாழ்வைத் திருத்தி உயர்வோமாக.

Leave a Reply