திருமால் திருப்புகழ்

1.
திருவெவ்வுள் (திருவள்ளூர்)
(பாவகை : வண்ண விருத்தம்)
(‘கரம் கமலம் மின் அதரம் பவளம்’ என்னும் திருப்புகழ்ப் பாட்டின் மெட்டு)
 
தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன …… தனதான
அருந்தும் உணவுடன் விரும்பு பொருளினை
   அடைந்து சுகமுற …… உழலாமல்
அடர்ந்த இருளற அகண்ட உலகினை
   அளந்த திருவடி …… மறவாமல்
 
வருந்து கரியழ விரைந்து வருமொரு
   வரம்பில் அருள்நலம் …… மொழிவேனோ!
மறங்கொள் இரணியன் நொறுங்க வருவிறல்
   மடங்கல் வடிவினை …… நினைவேனோ! 
 
சரங்கள் எனு(ம்)மழை பொழிந்து தலைபல
   சரிந்து விழவளை …… சிலையாலே
சலங்கொள் ஒருவனின் உடம்பு கெடஅமர்
   சயங்கொள் உயர்புயம் …… உடையானே!
 
தரங்க மிசையெழில் இலங்கும் அணையிலொர்
   தடங்கண் அறிதுயில் …… வளர்வானே!
தளிர்ந்த பொழில்எ(வ்)வுள் கிடந்து தமர்பிணி
   தவிர்ந்த நலமருள் …… பெருமாளே!
அருஞ்சொற் பொருள்:
விறல் = வலிமை;
மடங்கல் = சிங்கம்;
சிலை = வில்;
சலம் = வஞ்சம்;
சலம் கொள் ஒருவன் = இராவணன்;
தழைந்த = தழைத்த = செழித்த;
தரங்கம் = அலை -இங்கே கடலுக்கு ஆகுபெயராகி வருகிறது; பாற்கடல்;
தடங்கண் = பெரிய அகலமான கண்கள்;
தவிர்ந்த = நீங்கிய
2.
திருவேங்கடம்
(பாவகை : வண்ண விருத்தம்)
(மாந்தளிர்கள் போல –  பூம்பறை – திருப்புகழ் மெட்டு)

தாந்ததன தான தாந்ததன தான
தாந்ததன தான .. தனதான
ஏங்கியுயிர் சோர ஊழ்ந்தவினை சேர
.. ..  யாண்டுமுடல் வாட – உழலாதே
..  ஏய்ந்தபுகழ் பாடி ஆன்றவருள் நாடி
.. ..  ஈண்டுனது பாதம்  – அடைவேனோ
 
தாங்கரிய தீமை மாய்ந்தொழிய நேமி
.. ..  தாங்கியுல காளும் – முதலோனே
..  தாழ்ந்துபணி வேனை ஏன்றுமன மாயை
.. ..  தான்தெளிய ஞானம் – அருளாயோ
 
வாங்கரிய வேதம் நான்குமவை ஓது
.. ..  மாண்பொருளும் ஆகும் – இறையோனே
..  வாய்ந்தமலர் தூவி ஆழ்ந்தமன மேவி
.. ..  வார்ந்தவமு தாக – நிறைவோனே
 
வீங்கருவி பாய ஓங்குமிசை பாட
.. ..  மீன்சுனையி லாடு – மலைமேலே
..  வேண்டுமடி யார்கள் வேண்டுவரம் ஈய
.. ..  வேங்கடவ னான – பெருமாளே.
பதம் பிரித்து:
ஏங்கி உயிர் சோர ஊழ்ந்த வினை சேர
.. ..  யாண்டும் உடல் வாட – உழலாதே
..  ஏய்ந்த புகழ் பாடி ஆன்ற அருள் நாடி
.. ..  ஈண்டு உனது பாதம்  – அடைவேனோ
 
தாங்க அரிய தீமை மாய்ந்து ஒழிய நேமி
.. ..  தாங்கி உலகு ஆளும் – முதலோனே
..  தாழ்ந்து பணிவேனை ஏன்று மன மாயை
.. ..  தான் தெளிய ஞானம் – அருளாயோ
 
வாங்க அரிய வேதம் நான்கும் அவை ஓது
.. ..  மாண்பொருளும் ஆகும் – இறையோனே
..  வாய்ந்த மலர் தூவி ஆழ்ந்த மனம் மேவி
.. ..  வார்ந்த அமுதாக – நிறைவோனே
 
வீங்கு அருவி பாய ஓங்கும் இசை பாட
.. ..  மீன் சுனையில் ஆடும் – மலைமேலே
..  வேண்டும் அடியார்கள் வேண்டு வரம் ஈய
.. ..  வேங்கடவன் ஆன – பெருமாளே.

அருஞ்சொற் பொருள்:
ஊழ்ந்தவினை = பழமையான வினை;
யாண்டும் = எப்பொழுதும்;
ஏய்ந்த = பொருந்திய;
நேமி = திருச்சக்கரம்
ஏன்று = ஏற்றுக்கொண்டு
வாங்கரிய = அழிவரிய = அழிவற்ற;  
மாண்பொருள் = மாட்சிமை மிகுந்த உட்பொருள்;
மேவி = சேர்ந்து;
வீங்கருவி = (நீர்) நிறைந்த அருவி
3.
திருவேங்கடம்
(பாவகை : வண்ண விருத்தம்)
(கைத்தல நிறைகனி – திருப்புகழ் – விநாயகர் துதியின் மெட்டு)

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .. தனதான
நச்சர வதனுடை உச்சியில் நலமிகு
….. நர்த்தன மிடுகழல் – அணிதாளே
.. நச்சிடு குருகைமன் நிட்டையின் அருளிய
….. நற்றமிழ் மறைதனை – நிதமோதி  
 
இச்சையின் உறுமிடர் மிக்குழல் உளமிதில்
….. இக்கென நினதருள் – இனிதூற
.. இச்சக மிசையொரு பற்றென அணிமலர்
….. இட்டுன திணையடி – பணிவேனோ
 
வச்சிரன் மழைவெல வெற்பொரு குடையென
….. மற்பெரு விரல்நுனி  – அணிவோனே
.. மத்துறு கடைவெணெய் தொட்டளை களவினில்  
….. வற்புறும் உரலொடும் – இணைவோனே
 
அச்சுதன் அரிமுகன் நித்தியன் நிகரிலன்
….. அற்புதன் எனவுரை – அடியார்தம்
.. அத்தனை குறைகளும் அற்றிட அருளிடும்
….. அத்திரு மலையுறை – பெருமாளே!
பதம் பிரித்து:
நச்சு அரவு அதனுடை உச்சியில் நலம் மிகு
நர்த்தனம் இடு கழல் அணி தாளே
நச்சிடு குருகை மன் நிட்டையின் அருளிய
நற்றமிழ் மறைதனை நிதம் ஓதி  
 
இச்சையின் உறும் இடர் மிக்கு உழல் உளம் இதில்
இக்கு என நினது அருள் இனிது ஊற
இச்சகம் மிசை ஒரு பற்று என அணிமலர்
இட்டு உனது இணை அடி பணிவேனோ
 
வச்சிரன் மழை வெல வெற்பு ஒரு குடை என
மல் பெரு விரல் நுனி  அணிவோனே
மத்து உறு கடை வெணெய் தொட்டு அளை களவினில்  
வற்பு உறும் உரலொடும் இணைவோனே
 
அச்சுதன் அரிமுகன் நித்தியன் நிகரிலன்
அற்புதன் என உடை அடியார்தம்
அத்தனை குறைகளும் அற்றிட அருளிடும்
அத் திருமலை உறை பெருமாளே!

அருஞ்சொற் பொருள்:
கழல் அணி தாளே = கழல் அணிந்த திருவடிகளையே; 
நச்சிடு = விரும்பிடும்; 
குருகை மன் = குருகையின் மன்னர் =  திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார்;  
இச்சையின் உறும் இடர் = ஆசையினால் உறுகின்ற இடர்; 
மிக்கு உழல் = மிகுந்து உழல்கின்ற; 
இக்கு என = கரும்பு என (கரும்பின் சாற்றினைப் போல்); 
வச்சிரன் = இந்திரன்; 
மழை வெல = (பொழியச் செய்த) கடுமழையை வெல்வதற்காக;
 வெற்பு = கோவர்த்தகிரி; 
மற்பெரும் = மல் + பெரும் = வலிமைமிக்கதும் பெருமையுடையது ஆன; 
மத்து உறு கடை வெண்ணெய் = மத்தையுறுத்திக் கடைகின்ற வெண்ணெய்; 
தொட்டு அளை = தொட்டுக் கிளரி (உண்ட); 
வற்பு உறும் = வலிமை வாய்ந்த;
இணைவோனே = கட்டப்படுவோனே
4.
திருநீர்மலை
(பாவகை : வண்ண விருத்தம்)
(எருவாய் கருவாய் – திருப்புகழ் மெட்டு)

தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா …… தனதான
அருமா தவமார் குருகூர் நகரான்
.. .. அருளா யிரவான் – மறையோதி
.. அணியார் தமிழாம் அமுதூ றிடநான்
.. .. அகமார் மகிழ்வா(ல்) – நிறைவேனோ
 
வருவான் மழையா(ல்) நலியா தொருமால்
.. .. வரையே குடையாய் – நிரைபேணும்
.. வரையா அருளால் உலகேழ் அரசாள்
.. .. வளமார் அடியே – அடைவேனோ
 
எரியார் விழியோர் உகிர்வா ளரியாய்
.. .. இகல்மார் விருகூ – றுறநூறி
.. இருமா நில(ம்)மேல் இருள்வீழ் வுறவே 
.. .. எழுமோர் கதிர்போல் – ஒளிர்வோனே
 
திரையார் கடல்நா கணைமீ மிசையேர்
.. .. திகழ்வாய் திருவாழ் – அணிமார்பா
.. செடியார் வினைசா டிடுபே ரருள்சேர்
.. .. திருநீர் மலைவாழ் – பெருமாளே.
பதம் பிரித்து:
அரு மா தவம் ஆர் குருகூர் நகரான்
அருள் ஆயிரம் வான் மறை ஓதி
அணி ஆர் தமிழாம் அமுது ஊறிட நான்
அகம் ஆர் மகிழ்வால்  நிறைவேனோ!
 
வரும் வான் மழையால் நலியாது ஒரு மால்
வரையே குடையாய் நிரை பேணும்
வரையா அருளால் உலகு ஏழ் அரசு ஆள்
வளம் ஆர் அடியே அடைவேனோ!
 
எரி ஆர் விழி ஓர் உகிர் வாளரியாய்
இகல் மார்வு இரு கூறு  உற நூறி
இரும் மா நிலம் மேல் இருள் வீழ்வு உறவே 
எழும் ஓர் கதிர் போல் ஒளிர்வோனே
 
திரை ஆர் கடல் நாக அணை மீமிசை ஏர்
திகழ்வாய் திருவாழ் அணிமார்பா
செடியார் வினை சாடிடு பேரருள் சேர்
திருநீர்மலை வாழ்  பெருமாளே.

அருஞ்சொற் பொருள்:
தவம் ஆர் = தவம் மிகுந்த
குருகூர் நகரான் = திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார்
ஆயிரம் வான் மறை = ஆயிரம் பாசுரங்களைக் கொண்ட தமிழ்மறையான திருவாய்மொழி
அணி ஆர் = அழகு மிகுந்த
நலியாது = வருந்தாத வண்ணம்
மால் வரை = பெரிய மலை
நிரை பேணும் = பசுக்களைக் காப்பாற்றும்
வரையா = அளவற்ற
உகிர் = (கூரிய) நகத்தைக் கொண்ட 
வாளரி = சிங்கம்
இகல் = பகை(வன்) = இரணியன்
நூறி = அறைந்து
இரும் மா நிலம் = பெரிய உலகம்
திரை ஆர் = அலைகள் மிகுந்த
கடல் = பாற்கடலில்
நாக அணை மீமிசை = பாம்பணையின் மேல்
ஏர் திகழ்வாய் = அழகுற விளங்குகிறாய்
செடியார் = செடிபோல அடர்ந்து வளர்ந்து வருத்தும்
வினை சாடிடு = வினைகளைத் தீர்க்கும்
5.
திருக்கடிகை
(பாவகை : வண்ண விருத்தம்)
(தோரண கனக – திருப்புகழ் மெட்டு)

தானன தனன தானன தனன
     தானன தனன …… தனதான
கோலம திலகு மார்வது பகவொர்
.. .. கூரிய நுதிவள் – ளுகிராலே
.. கூடலன் மடிய வாளெயி றுடைய
.. .. கோளரி யுருவில் – எழுவோனே

சேலினை நிகரு(ம்) நீள்விழி அரிவை
.. .. தேன்மலர் மருவும் – ஒருமாது
.. சீருற உறையும் ஆகம துடைய
.. .. சீதரன் எனவும் – ஒளிர்வோனே

காலொடு புனலும் வான்நில னொடுமொர்
.. .. காயழல் அதிலும் – நிறைவோனே
.. காயமும் உளமு(ம்) மேவியுன் ஒழிவில்
.. .. காதலை அருள – வருவாயே

வாலிதழ் மலர்கள் சேர்பொழில் மலியும்
.. .. வானுயர் கடிகை – மலைமேலே
.. மாதவர் பரவ யோகினில் அமரும்
.. .. மாணுறு வடிவின் – நெடுமாலே!
பதம் பிரித்து:
கோலம் அது இலகு மார்வு அது பக ஒர்
.. .. கூரிய நுதி வள் – உகிராலே
.. கூடலன் மடிய வாள் எயிறுடைய
.. .. கோளரி உருவில் – எழுவோனே
சேலினை நிகரு(ம்) நீள் விழி அரிவை
.. .. தேன் மலர் மருவும் – ஒருமாது
.. சீருற உறையும் ஆகம் அது உடைய
.. .. சீதரன் எனவும் – ஒளிர்வோனே
காலொடு புனலும் வான் நிலனொடும் ஒர்
.. .. காய் அழல் அதிலும் – நிறைவோனே
.. காயமும் உளமு(ம்) மேவி உன் ஒழிவில்
.. .. காதலை அருள – வருவாயே
வால் இதழ் மலர்கள் சேர் பொழில் மலியும்
.. .. வான் உயர் கடிகை – மலைமேலே
.. மாதவர் பரவ யோகினில் அமரும்
.. .. மாண் உறு வடிவின் – நெடுமாலே!

அருஞ்சொற் பொருள்:
கோலம் அது இலகு = அலங்கரிக்கப்பட்ட
பக = பிளக்க;
நுதி = கூரிய நுனியை உடைய
வள் உகிர் = பெரிய நகம்; 
கூடலன் = பகைவன் (இரணியன்)
வாள் உயிறு = ஒளி பொருந்திய பல்;
கோளரி = நரசிம்மம்; 
சேலினை = கெண்டை மீனை
அரிவை = பெண்
ஆகம் = மார்பு
காலொடு = காற்றும்
புனலும் = நீரும்
அழல் =  நெருப்பு
காயம் = உடல்
மேவி = இடமாக (ஆலயமாக) கொண்டு
உன் ஒழிவில் காதலை அருள = உன்மேல் என்றும் நீங்காத பக்தியை எனக்கு அருள;
வால் இதழ் = தூய மலர் இதழ்கள்; 
பொழில் = சோலை
மலியும் = மிகுந்த
கடிகை மலை = சோளங்கிபுரம் 
மா தவர் = தவயோகிகள்
பரவ = புகழ்பாட
யோகு = யோகம்; 
மாண் உறு = பெருமை பொருந்திய

Leave a Reply