திருமால் துதிகள்

1.
ஆயிரம் பேருடையாய் ஆயிரம் சீர்க்குணத்தாய்
ஆயிரம் பேழ்வாய் அரவணையாய் – ஆயிரம்
குன்றனைய தோளினாய் கூறும் அடியோமுக்(கு)
இன்றருளாய் பள்ளி எழுந்து.
2.
மதுராஷ்டகம் – அதரம் மதுரம் – தமிழில்

இதழும் இனிதாம் முகமும் இனிதே
இதமார் விழியும் நகையும் இனிதே
மதுரைக் கரசின் மனமும் நடையும்
எதுவும் இனிதே இருமா நிலத்தே.
3.
எனதெனதென் றேங்கி இடர்ப்பட்டு வாடும்
மனமே! மருள்நீங்கி வாழ்வாய்! – தனிவில்
குனித்தரக்கர் ஆருயிரைக் கொண்டகா குத்தன்
அனுக்கிரகம் தான்பெற் றடைந்து.
4.
அரவாய் வெருட்டுமவ் வைம்புலன்கட் கஞ்சி
மருள்கின்ற என்றன் மனமே – தரைமேல்
விரிவான் இடிந்து விழினும் தளரா(து)
அரியே அரணென் றிரு.
5.
வானத் தவர்க்கும் மறுவில் தவம்புரிந்த
ஞானத் தவர்க்கு(ம்)மனம் நாடரியான் – ஊன்பற்றும்
வன்முதலை மாய வரும்கொடியான் வாரணத்தின்
அன்புக் கடியான் அரி.
6.
தெய்வம் எனக்குத் திருக்குருகை நாதனெனத்
துய்யதமிழ் கொண்டு தொழுதிறைஞ்சும் – மெய்யோங்கு
மாமனத்தார் சீரார் மதுர கவியாழ்வார்
நாமம் நலமாம் நமக்கு.
7.
உடையவர்மேல் பத்தி உடையவரிப் பாரில்
இடரற் றிருப்பார் எனுஞ்சொல் – மடமனத்தின்
வாட்டம் அகற்றி மகிழ்வேற்றி
மாயனருள் நாட்டி அளிக்கும் நலம்.
8.
இமையளவும் விட்டகலேன் என்றரியின் மார்வில்
கமழ்துளவத்(து) ஒன்றிக் கலந்தாள் – அமிழ்துடனே
பொங்கு கடலுதித்த பொன்னார் புகழ்வடிவின்
செங்கமலப் பூமேல் திரு.
9.
அலர்மிக்க மாலை அணிந்தளித்தாள் பாடும்
நலமிக்க மாலடியே நாடாய்! – புலனின்பம்
தான்வேண்டி நின்று தடுமாறும் என்மனமே!
ஊன்மீதுன் பற்றை ஒழித்து.
10.
குன்றேய் முகிலொன்று கொற்றவில் கொண்டாற்போல்
நின்றான் நிகரில் நெடுந்தோளான் – நன்றுநாம்
உய்ய அருள்நல்க ஒப்பில் அயிந்தையில்
தெய்வமா நாயகனாய்ச் சீர்த்து.
11.
வையத்தார் வாழ மறைவாழ வண்புதுவைத்
தையலாள் தீந்தேன் தமிழளித்தாள் – மையற்ற
மாமலராள் அன்னாள் மலர்த்தா ளிணைவணங்கி
நாமுறுவோம் நெஞ்சே நலம்.
12.
சீராமன் பேரேத்தும் சீரார் திருக்கதையைப்
பாரா யணம்செய்யும் பாங்குடையார் – பேராத
ஆனந்தத் தோடும் அருள்சேர் அரும்பதமாம்
வானந் தனைப்பெறுவார் வாய்ந்து.
13.
திங்கள் திருமுகத்துச் செங்கமல வல்லியவள்
தங்கி உறையும் தடமார்வன் – பொங்கருள்சேர்
ஆமருவி யப்பன் அணியழுந்தூர் மேயவனின்
தேமருவு தாள்மனமே சேர்.
14.
உள்ளம் தெளியும் உறுநோய் ஒழிந்தோடும்
வெள்ளமெனத் தண்ணருளும் மேவிடுமே – தெள்ளிய
சிங்கமாய் நின்ற திருவல்லிக் கேணியான்
தங்கத்தாள் சார்வார் தமக்கு.
15.
வாணனது வேள்விதனில் வையமடி மூன்றிரக்கும்
மாணியென மாலன்(று) அளந்தெடுத்தான் – சேணுயர்ந்த
மந்தரமும் தான்கடந்து மாமலரான் தான்வணங்க
அந்தரம்போய் நீளும் அடி.

(வாணன் = மாவலி; மாணி = வாமனன்; சேணுயர்ந்த = மிகப்பெரிய)
16.
நாமமென்று பாடினோம் இராமநாம கீதமே
தாமமென்று சூடினோம் அவன்சிறந்த தாளையே
நாமொழிந்து போற்றினோம் நமையளிக்க வேண்டுமே
தீமிகுந்த நெஞ்சரக்கர் ஊரெரித்த செல்வனே!
17.
நலமார் துழாய்மாலை சூடிக் கொடுத்தவள் நாரணன்றன்
வலமார் புறையும் திருமா மகளன்ன மாண்புடையாள்
சலமார் அசுரர் நலியச் செறுந்திருச் சக்கரத்தான்
வலமார் திறம்வாழ்த்தும் கோதை மலர்த்தாள் வணங்குவமே.
18.
தொடையார் தமிழும் துளவமே வாழ்வாம்
தடமார் அரங்கமே சார்வாம் – அடியார்
அடித்தூளே சென்னியணி யாமென்னும் தொண்டர்
அடிப்பொடியார் எம்மையாள் வார்.

அருஞ்சொற்பொருள்:
தொடை = மாலை
தடம் = பொய்கை
சென்னி = தலை

பொருளுரை: ‘அரங்கனுக்காகத் தமிழ்மாலையும் துளவ மாலையும் தொடுத்து வாழ்வதே எனது வாழ்வாகும்; பொய்கைகள் நிறைந்த திருவரங்கமே எனது வாழ்வுக்குத் துணையாகும்; அடியார்களின் அடித்தூளே எனது தலையில் பொருந்தும் அணிகலனாகும்’ என்று சொல்லும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் எம்மை ஆள்வாராக!
19.
விண்ணொளிரும் வெண்மதியை வெல்லும் முகனென்கோ
தண்ணமரும் தாராகத் தானென்கோ – நண்ணலர்கள்
தங்கொடுமை தீர்த்தொழிக்கும் சங்காழி யானென்கோ
நங்கள் பெருமானை நான்.

*தாராகத்தான் = தார் + ஆகத்தான்; நண்ணலர் = பகைவர்
20.
பக்தியும் பிரபத்தியும் – வெண்பா

உற்ற துணையென்று தாயுள்ளத்(து) அன்பினையே
பற்றும் சிசுகாட்டும் பத்தியினும் – பொற்றாள்
சரணென்றே தன்செயலெல் லாம்தவிர்த்து நின்ற
பிரபத்தி காக்கும் பெரிது.
21.
பாட்டுக் குரிய பழையவ ராமூவர்
வீட்டின் கழியில் விளக்கேற்றி – வாட்டும்
இருள்போகத் தந்தருளும் ஈடில் கவிதை
திருக்காட்டும் தெய்வச் சுடர்.
22.
வில்லைத் தொலைபுருவம் மீனை நிகர்விழிகள்
வெல்லும் திலகம் மிளிர்வதனம் – செல்வம்
பொழிந்தருளும் பொன்னார் புகழுருவம் சீர்க்கும்
செழுந்திருவின் சேவடியே காப்பு.
23.
பொன்னே பொலியும் திருமேனி
பொன்னே பொழியும் கரம்விளங்கப்
பொன்நேர் அரிமார்( பு) உறைகின்ற
பொன்னே! உன்னைப் போற்றுகிறேன்
பொன்னே போன்ற பொழுதெல்லாம்
பொன்னே தேடும் நிலைமாற்றித்
தன்னே ரில்லாத் தமிழ்பாடத்
தாயே எனக்கின் றருளாயோ.
24.
கருமு கில்நிறம் காட்டிடும் மேனியன்
திரும கள்மரு மார்பன் சிரீதரன்
அருளி லங்கு பணிலமொ டாழியும்
கரம்வி ளங்கநின் றான்கழல் பாடுவோம்.

(பணிலம் = சங்கு)
25.
ஶ்ரீ வேங்கடேச ஷட்பதி

அலையார் கடலின் நடுவே அணையாய்
வலியார் அரவின் மிசைக்கண் வளர்வாய்
அலர்மா மகளும் அகலா துறையும் அணியார் வலமார்வா!
கலியால் வருந்திக் கலங்கும் அடியார்
தலைவா எமைக்கா வெனலும் தனியோர்
மலைமேல் நலமார் வடிவில் அருள வருவேங் கடமாலே! 

அருஞ்சொற் பொருள்:
அலையார் = அலைகள் மிகுந்த
வலியார் = வலிமை வாய்ந்த
அரவு = பாம்பு
மிசை = மேல்
கலி = துன்பம்
எமைக்கா = ‘எம்மைக் காத்தருள்’
தனி ஓர் = சிறப்பு மிக்க

கருத்து: திருப்பாற்கடலில் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டவனே! அலர்மேல் மங்கை என்றென்றும் வாழ்கின்ற வலமார்பை உடையவனே! துன்பத்தால் வருந்துகின்ற அடியவர்கள் ‘மூவுலகிற்கும் தலைவனே! எம்மைக் காத்தருள்’ என்று வேண்டிக்கொள்ள, அவர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு திருவேங்கட மலைமேல் ஶ்ரீ வேங்கடேசனாக எழுந்தருள்பவனே! போற்றி! போற்றி!

பாடல் அமைப்பு:
மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மாங்காய் – என்ற அமைப்பு ;
கன்னடத்தில் “ஷட்பதி” என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்பு போல அமைந்தது

“ஷட்பதி” – யாப்புக் குறிப்பு:
ஆறு அடிகள் எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
1, 2, 4, 5 – அடிகள் அளவொத்து அமைவன. இவ்வடிகளில் சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக – அடிதோறும் 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
3, 6 – இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. இவ்வடிகளின் அமைப்பு: = முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முற்பாதியின் சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் எழுத்து. (i.e. நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று / குறில்)
26.
சிலையினால்இலங்கைசெற்றான்
பாவகை: அடிதோறும் அந்தாதியால் அமைந்த நேரிசை ஆசிரியப்பா

உலகைத்தாங்கிடும்வலமிகுதடந்தோள்
தோள்மிசைத்திகழும்நீள்புகழ்நெடுஞ்சிலை
சிலைவளைத்திலங்கைசெற்றதிருக்கரம்
திருக்கரத்(து) அளிக்கும்அருட்பேர்அண்ணல்
திருக்கரத்(து) அளிக்கும்அருட்பேர்அண்ணலின்
அண்ணரும்நலஞ்சேர்தண்ணமர்மலர்ப்பதம்
பதமுறப்பதித்துளம்நினைந்து
துதிசெயஅழிவிலாச்சுகம்பெறும்உலகே.

(அண்ணரும் = அடைவதற்கரிய)

குறிப்பு:
‘உலகு’ எனத் தொடங்கி ‘உலகு’ என முடிந்து மண்டலித்து வரும் இப்பாட்டில் 7 ஆம் அடியின் அந்தம் ‘து’ என்னும் எழுத்து. அது ஈற்றடியின் ஆதியாக (து) வந்து எழுத்து அந்தாதி ஆகின்றது. முதலடியின், ஈற்றசையாகிய ‘தோள்’ என்பது இரண்டாம் அடியின் ஆதியானது. எனவே, அசை அந்தாதி. இவ்வாறே இரண்டாம் மற்றும் ஆறாம் அடிகளின் இறுதி அசைகள் முறையே மூன்றாம் மற்றும் ஏழாம் அடிகளின் முதல் அசைகளாக அமைந்து அசையந்தாதி ஆகின்றன.

மூன்றாம் அடியின் அந்தம் ‘திருக்கரம்’ என்ற ஈரசைச்சீர். இந்தச் சீர் (திருக்கரம்) முழுதும் நான்காம் அடியின் ஆதிச்சீராக வந்து சீர்அந்தாதியாக விளங்குகிறது. நான்காம் அடிமுழுதும் ஐந்தாம் அடியாக மடங்கி வந்துள்ளது. ஆதலால், இஃது அடியந்தாதி. இதன்மூலம் இப்பாட்டில் எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீர்அந்தாதி, அடியந்தாதி என்ற நால்வகை அந்தாதிகளையும் காண்கின்றோம்.
27.
இன்னமுதம் யானளிப்பேன், என்றன் இளங்கிளியே!
தென்னவென வண்டினங்கள் சீர்பாடும் –  மின்னொளிசேர்
கோதில் கொழுமலர்த்தார் சூடிக் கொடுத்துவந்தாள்
கோதை அருள்தமிழே கூறு.  

(தென்னவென = ‘தென்ன’ என; கொடுத்துவந்தாள் = கொடுத்து + உவந்தாள்)
28.
வணங்கிப்பரவிடும்அன்பர்தம்தூயமனத்தினிலே
இணங்கிக்கிடக்கும்திருக்குருகேசன்இணையடியை
மணங்கொள்மலர்க்கண்ணிநுண்சிறுத்தாம்பினால்வாழ்த்துகின்ற
குணங்கொள்மதுரகவியார்அருளால்குறையிலமே.

Leave a Reply