
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
Thiruvaimozhi – திருவாய்மொழி பாடல் விளக்கம்
அருளி னான்அவ் வருமறை யின்பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள்கண் டீர்இவ் வுலகினில் மிக்கதே.
– மதுரகவி ஆழ்வார் (கண்ணி நுண் சிறுத்தாம்பு)
எம்பெருமானுடைய திருவருளைப் போற்றும் பக்தர்கள் நலமாக வாழ்வதற்காக, ஒப்பற்ற வேதங்களின் சாரத்தை நமக்கு உணர்த்தும் பொருட்டு, இனிமையான தமிழில் ஆயிரம் பாடல்களைக் கொண்ட திருவாய்மொழியைப் பாடி அருளினார் நம்மாழ்வார். அவருடைய திருவருளானது இந்த உலகத்தில் உள்ள எல்லா நலங்களையும் விடப் பெரியது.
நம்மாழ்வார் வரலாறு
பாண்டிய நாட்டின் தென்கோடியில் உள்ள திருக்குருகூரில் காரியார் உடைய நங்கை என்பவரின் புதல்வராக மாறன் என்னும் பெயரில் நம்மாழ்வார் பிறந்தார். குழந்தை பிறந்ததுமுதல் மூச்சு அசைவு எதுவும் இல்லாதது கண்ட பெற்றோர் குழந்தையைக் கோயில் திருப்புளியமரத்தடியில் கண்வளரச் செய்தார்கள். பதினாறு ஆண்டுகள் சென்றன.
திருக்கோளூரில் பிறந்த மதுரகவிகள் என்ற அந்தணர் வடக்கே திவ்வியதேசங்களுக்குச் சென்று ஆலயதரிசனம் செய்யும் போது, தென்திசையில் ஓர் அபூர்வமான ஒளியைக் கண்டு, அதைநோக்கி வந்தார். அந்த ஒளி திருக்குருகூர் புளியமரத்தடியில் மறைந்தது. மதுரகவிகள் புளியமரத்தடியில் ஓர் இளைஞர் பேச்சில்லாமல் இருந்தது கண்டு, தம் இரண்டு கைகளையும் ஓசையெழும்படி தட்ட, இளைஞர் கண் விழித்து மதுரகவியாரை நன்கு நோக்கினார். அதனைக் கண்ட மதுரகவியார், இளைஞரை நோக்கி, ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேட்டார். அதற்கு இந்த இளைஞர் ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். மதுரகவியார் அதனைக் கண்டு ‘நமக்கு வடக்கில் தோன்றிய ஒளி இவரே! இவரே!’ என்று தெளிந்து, இளைஞராகிய நம்மாழ்வார் திருவடிகளில் வணங்கி நின்று ‘என் அன்புக்குரியீர், அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்’ என்று வேண்டினார். நம்மாழ்வாரும், ‘அன்புடையீர், நாம் இறைவனை வாழ்த்திப் பாடும் பாசுரங்களால் நீர் பட்டோலையை அலங்கரிப்பீராக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
நம்மாழ்வார் தம்முடைய மலர்க்கண்கள் நீர் சொரிய, இறைவனின் அருட்குணங்களை எண்ணி எண்ணி, உள்ளத்தில் அடங்காத அன்பு கொண்டு, அவ்வன்பு மடைதிறந்த வெள்ளம்போல் வெளிப்பட, மதுரகவியாரின் பட்டோலையை அலங்கரிக்க, திருவிருத்தம், திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் அரும்பொருள் நிதிகளாகிய நான்கு தமிழ்மறைகளைத் திருவாய்மலர்ந்தருளினார்.
நம்மாழ்வாரின் திருநாமங்கள்
இவருக்குப் பெற்றோர்கள் மாறன் என்று திருப்பெயரிட்டார்கள். இவர் காரியாருடைய அருமைச் செல்வர் ஆதலின், இவரைக் காரிமாறன் என்றும் கூறுவர். குழந்தைகள் பிறந்தவுடன் வந்து சேர்ந்து, முன் ஜன்ம வாசனைகளைப் போக்கிவிடுவதாகிய ‘சடம்’ என்னும் வாயு, இவர் அவதரித்தவுடன் இவரையும் சேர்ந்திட வர, இவர் அதனைக் கோபித்துத் தம்மை அணுகாதபடித் தடுத்தார். அதனால், இவருக்கு சடகோபர் என்பதும் பெயராயிற்று. இவரது திருப்பெயரான ‘நம்மாழ்வார்’ என்னும் நாமம், இறைவனே அருளியது என்பர். இவருக்கு மகிழம்பூ உரிய மாலையாகும். அதனால், இவருக்கு வகுளாபரணர் என்னும் பெயரும் உண்டு. இவரது அருளிச் செயல்கள் என்னும் அங்குசத்தால் பரமனாகிய களிறு(ஆண்யானை) தம் வசமாகும்படிச் செய்ததால் இவர் பராங்குசன் என்னும் பெயரையும் பெற்றார்.
நம்மாழ்வார் பாடல் சிறப்பு
தம் கவியீர்ப்பு சக்தியால் இறைவனையே பின்தொடர வைக்கும் ஆற்றல் மிக்கவர் நம்மாழ்வார் என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் படைத்த ‘சடகோபர் அந்தாதி’ என்னும் நூலில் கீழ்வருமாறு மொழிகிறார்:
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணங்கடந்த
போதக் கடலெங்கள் தென்குரு கூர்ப்புனி தன்கவியோர்
பாதத்தின் முன்செல்லு மோதொல்லை மூலப் பரஞ்சுடரே?
பொருள் : திருமாலின் திருப்பாதங்கள் வேத சாஸ்திரங்களைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; அன்றி உண்மை நிலை கண்ட பிரமன் முதலானவர்களின் குற்றமற்ற ஞானத்தின் முடிவைக் கடந்து சென்றாலும் செல்லட்டும்; ஆனால் அந்த ஆதிமூலச் சுடரான இறைவன், குணங்களுக்கெல்லாம் அப்பால் திகழும் ஞானக் கடலான திருக்குருகூர் சடகோபர் அருளிச்செய்த கவிதைகளில் ஒரு பாதத்தையேனும் கடந்து செல்வானோ? (செல்லமாட்டான், சடகோபரின் தமிழால் ஈர்க்கப்பட்டு அவர் கவிதைகளைப் பின்தொடர்ந்தே வருவான்)
இன்றும், கோவில்களில் உத்சவங்களின் போது, எம்பெருமான் நடுவே எழுந்தருள, வடமொழி வேதம் எம்பெருமானுக்குப் பின்னால் பாராயணம் செய்யப்பட்டு வருவதும், தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தம் எம்பெருமானுக்கு முன்னே ஓதப்பட்டு வருவதும் திவ்விய தேசங்கள் முழுவதும் காணப்படுவது நம்மாழ்வார் வளர்த்த தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
பொதுவாக எந்த நூல் ஆரம்பிக்கும் போதும் சடகோபர் புகழைப் பாடிப் பின் மற்ற பாடல்களை அளிப்பது வைணவ மரபு. புகழேந்திப் புலவரும் கம்பரும் கூடத் தத்தம் நூல்களாகிய நளவெண்பாவிலும் கம்பராமாயணத்திலும் தொடக்கத்தில் சடகோபரைத் துதிக்கின்றனர்.
மாசரிதங் கூற வருந்துணையா – பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர்.
– நளவெண்பா
பொருள்: புகழ்பொருந்திய திருமகள் நாதனாகிய திருமாலின் பெருமையை வளமிக்க தமிழில் பாடி நான்கு மறைகளின் பொருளை விரித்துரைத்து அருளிய மகிழ மலர்மாலை அணிந்த சடகோபரின் திருவடித் தாமரை மலர்கள், நளன் கதையை நான் கூறத் துணையாகும்.
தருகை நீண்ட தயரதன் தான்தரும்
இருகை வேழத் திராகவன் தன்கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குறைகழல் காப்பதே.
– கம்பராமாயணம்
பொருள்: எளியவர்களுக்கு வாரி வழங்கும் நீண்ட கரங்களை உடைய தசரதனின் மைந்தனாகத் தோன்றிய, இரண்டு துதிக்கைகளைக் கொண்ட யானை போன்ற வலிமை வாய்ந்த மேனியனான இராம பிரானின் திருக்கதையை இந்த உலகம் போற்ற நான் மொழிவதற்கு, திருக்குருகூர் தோன்றிய திருவருட் செல்வரான நம்மாழ்வாரின் வேத நாதம் ஒலித்திடும் திருவடிகள் துணையாக நின்று காக்கும்.
திருவாய்மொழி
திவ்வியப் பிரபந்தத்தில் தலைமையாக விளங்குவது சடகோபர் இயற்றிய திருவாய்மொழி; பக்தர்கள் பலரால் நாள்தோறும் போற்றிப் பாராயணம் பண்ணப்பட்டு வருவது; அடியார் திருக்கூட்டங்களில் முறையாக ஓதப்பட்டு வருவது. ‘செந்தமிழ் வேதம்’, ‘ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரம்’ என்றெல்லாம் இப்பிரபந்தத்தை ஆன்றோர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இறைவன் சடகோபர் மூலமாக தன்னைத் தானே பாடிக் கொண்டது தான் இந்த இன்னிசை நூலாக உருவெடுத்தது என்பதை, ‘பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி’ என்னும் திருவாய்மொழி வரிகள் மூலம் நாம் உணரலாம்.
திருவாய்மொழி (Thiruvaimozhi) – சிறு குறிப்பு | |
---|---|
பாடியவர் | நம்மாழ்வார் |
இடம்பெறும் நூல் | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் |
பாடல் எண்ணிக்கை | 1102 |
முதல் பாசுரம் | உயர்வற உயர்நலம் உடையவன் |
திருவாய்மொழி – இசைவளம்
திருவாய்மொழியை ‘சாமவேத சாரம்’ எனப் பெரியோர் வழங்கி வருகின்றனர். சாமவேதம் போன்று இதுவும் இசையுடன் பாடுவதற்குரியது. ‘செயிர் இல் சொல் இசை மாலை’, ‘பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’, ‘நல்யாழ் பயிர் நரம்பின் முதிர்சுவையே’, ‘சொல்லிசை மாலை’,’சொல்லால் இசைமாலைகள்’, ‘நுடங்கு கேள்வி இசையென்கோ’ , ‘பண்ணார் தமிழ் ஆயிரம்’, ‘ஏழிசையின் சுவை’ என்று இந்நூலில் வரும் தொடர்கள் இக்கருத்தை ஆதரிக்கின்றன. இராமானுச நூற்றந்தாதியைப் பாடிய திருவரங்கத்தமுதனாரும் ‘பண்தரும் மாறன் பகர்ந்த தமிழ்’ என்று பாராட்டுகின்றார்.
திருவாய்மொழி – முதல் பத்து
1. உயர்வற உயர்நலம்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
என் மனனே = என் மனமே!
உயர்வு அற = தன்னை விட மேன்மையுடையவர் இல்லை என்று கூறும்படியாக
உயர்நலம் உடையவன் = உயர்ந்த நற்குணங்கள் கொண்டவன்
யவன் = யாரோ
மயர்வு அற = அறியாமை நீங்குமாறு
மதிநலம் = தெளிவுடன் கூடிய சிந்தனைத் திறனை
அருளினன் = அருளித் தந்தவன்
யவன் = யாரோ
அயர்வு அறும் = சோர்வு, மறதி என்றிவைகள் சிறிதும் இல்லாத
அமரர்கள் = இறவா வரம்பெற்ற தேவர்களின்
அதிபதி = தலைவன்
யவன் = யாரோ
அவன் = அத்தகைய பெருமை வாய்ந்தவனுடைய
துயர் அறு = துயர்துடைக்கும்
சுடர் அடி = ஒளிபொருந்திய திருவடிகளை
தொழுது எழு = வணங்கி வழிபடுவாய்!
2. மனனகம் மலமற
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனலன் என்னுயிர் மிகுநரை இலனே.
மனன் அகம் = மனத்தினுள்
மலம் அற = குற்றங்கள் நீங்கியதால் உண்டாகும் யோக ஞானத்தால்
மலர் மிசை எழுதரும் = மலர்ந்து மேலே எழுந்து உயர்கின்ற
மனன் உணர்வு அளவு இலன் = மனத்தின் உணர்வுகளால் அறியப்படுபவன் அல்லன்
பொறி உணர்வு அவை இலன் = ஐம்புலன்களால் உணரப்படுபவனும் அல்லன்;
இனன் உணர் முழுநலம் = ஞானமும் ஆனந்தமும் நிறைந்த முழுமையான நலன்களை உடையவன்
எதிர்நிகழ் கழிவினும் = எதிர்காலம் நிகழ்காலம் கடந்த காலம் ஆகிய முக்காலத்திலும்
இனன் அலன் = தனக்கு நிகர் இல்லாதவன்
மிகுநரை இலனே = மிகுநர் (தன்னை விட உயர்ந்தவர்) இல்லாதவன்
என்னுயிர் = இத்தகையவன் என் உயிர் ஆவான்.
3. இலனது உடையனிது
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்தவந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
இலன் அது = அது இல்லாதவன்
உடையன் இது = இதை உடையவன்
என = என்று இருவகையாலும்
நினைவு அரியவன் = நினைக்க முடியாதவன்
நிலன் இடை = மண்ணுலகிலும்
விசும்பு இடை = வானுலகிலும்
உருவினன் = உருவம் கொண்ட பொருள்கள் எல்லாமாக இருப்பவன்
அருவினன் = உருவமற்ற பொருள்களுமாய் விளங்குபவன்
புலனொடு = ஐம்புலன்களாக இருப்பவன்
புலன் அலன் = அப்புலன்களின் குணங்களுக்கு அப்பாற்பட்டவன்
ஒழிவிலன் = எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்தவன்
பரந்த = எங்கும் விரிந்து பரந்திருக்கும்
அந்நலனுடை ஒருவனை = அந்த நற்குணங்களை உடைய ஒப்பற்ற இறைவனை
நணுகினம் நாமே = நாம் (சரண்) அடைந்தோம்
4. நாமவன் இவனுவன்
தாமவர் இவருவர் அதுவிது உதுவெது
வீமவை இவையுவை அவைநலம் தீங்கவை
ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே.
நாம் = ‘நாம்’ என்ற பன்மைப் பெயரால் அழைக்கப்படும் பொருள்களும்
அவன் இவன் உவன் = ஆண்பாலில் தூரமாக உள்ளவன், அருகில் உள்ளவன், நடுவில் உள்ளவன் என்று அழைக்கப்படும் பொருள்களும்
அவள் இவள் உவள் எவள் = பெண்பாலில் தூரமாக உள்ளவள், அருகில் உள்ளவள், நடுவில் உள்ளவள் என்று அழைக்கப்படும் பொருள்களும்
தாம் அவர் இவர் உவர் = பலர்பாலில் தூரமாக உள்ளவர், அருகில் உள்ளவர், நடுவில் உள்ளவர் என்று அழைக்கப்படும் பொருள்களும்
அது இது உது எது = ஒன்றன் பாலில் தூரமாக உள்ளவை, அருகில் உள்ளவை, நடுவில் உள்ளவை என்று அழைக்கப்படும் பொருள்களும்
வீம் அவை இவை உவை = அழிகின்ற அந்தப் பொருள்களும் இந்தப் பொருள்களும்
அவை நலம் தீங்கு அவை = நல்ல பொருள்களும் தீய பொருள்களும்
ஆம் அவை = உண்டாகும் பொருள்களும்
ஆய் அவை = உண்டான பொருள்களும்
ஆய் நின்ற = இப்படி எல்லாப் பொருள்களுமாய் விளங்குபவர்
அவரே = எம்பெருமானே.
5. அவரவர் தமதமது
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.
அவரவர் = உலகத்தில் பலவிதமான மக்கள்
அறிவு அறிவகை வகை = தங்கள் ஞான வேறுபாடு காரணமாக அவர்களது அறிவுக்கு எட்டியவாறு
அவரவர் இறையவர் = பல்வேறு மதமார்க்கங்களில் ஈடுபட்டு, அந்தந்த மதங்களைச் சார்ந்த கடவுளர்களை
என அடி அடைவர்கள் = தொழுது வணங்குவார்கள்
அவரவர் இறையவர் = அந்தந்த மதக்கடவுள்களும்
குறைவு இலர் = அவர்களை அண்டி வழிபடுபவர்களுக்கு ஏற்ற பலன்களைக் குறைவு ஒன்றும் இல்லாமல் வழங்குவார்கள்.
இறையவர் = அந்த தெய்வங்கள் புரியும் அருளால்
அவரவர் விதிவழி அடைய = மக்கள் விரும்பிய பலனை அடையும்படியாக
நின்றனரே = அந்த தெய்வங்களின் அந்தர்யாமியாக (உள்ளே இருப்பவனாக) நின்று எம்பெருமான் அருள்கின்றான்.
6. நின்றனர் இருந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.
நின்றனர் = நிற்பவரும்
இருந்தனர் = அமர்ந்து கொண்டு இருப்பவரும்
கிடந்தனர் = படுத்துக் கிடப்பவரும்
திரிந்தனர் = திரிபவரும்
நின்றிலர் = நிற்காதவரும்
இருந்திலர் = உட்காராதவரும்
கிடந்திலர் = படுத்துக் கிடக்காதவரும்
திரிந்தவர் = திரியாதவரும்
என்றும் ஓர் இயல்வினர் = எப்போதும் இது தான் இவருடைய சுபாவம்
என நினைவு அரியவர் = என்று நம்மால் உறுதியாக நினைக்க முடியாதவரும்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற = இவ்வாறு பிறரால் நினைக்க முடியாதவன் என்னும் சுபாவத்திலிருந்து என்றும் மாறாத எம்பெருமான்
எம் திடரே = வேதங்களால் இவனே பரம்பொருள் என்று உறுதியாகக் கூறப்படுபவன்
7. திட விசும்பு எரி வளி
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே.
திட விசும்பு = ஆகாயம்
எரி = நெருப்பு
வளி = காற்று
நீர் நிலம் = நீர் நிலம் ஆகிய ஐந்து பூதங்களாகிய
இவை மிசை = இவற்றினுள்
படர் பொருள் = படர்ந்து விளங்கும் பொருள்கள்
முழுவதுமாய் = அனைத்துமாய் விளங்கி
அவை அவைதொறும் = அப்பொருள்கள் ஒவ்வொன்றிலும்
உடல்மிசை = உடம்பில்
உயிர் என = உயிர் எவ்வாறு நிறைந்து மறைந்து உள்ளதோ அதைப்போல்
கரந்து = (கண்ணுக்குப் புலப்படாமல்) மறைந்து
எங்கும் பரந்து உளன் = எங்கும் பரந்து இருக்கின்றான் எம்பெருமான்
சுடர்மிகு சுருதியுள் = இவ்வாறு ஒளிமிகுந்த வேதங்களால் சொல்லப்படுகின்றவனாகிய எம்பெருமான்
இவை உண்ட சுரனே = மேற்கூறிய இந்த பஞ்ச பூதங்களையும் பிரளய காலத்தில் அழித்த தேவனுமாவான்
8. சுரர் அறிவு அரு நிலை
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே.
சுரர் = நான்முகன் முதலிய தேவர்களாலும்
அறிவு அரு நிலை = அறிந்து கொள்வதற்கு அரியதான
நிலை = தன்மைகளைக் கொண்டு விளங்கி
விண் முதல் முழுவதும் = விண் முதலான அனைத்திற்கும்
வரன் முதலாய் = சிறந்த காரணமாகி
அவை முழுது உண்ட பரபரன் = அவற்றை முழுவதுமாக அழிக்கும் பரம்பொருளாகத் திகழ்கிறான்
புரம் ஒரு மூன்று எரித்து = (சிவனாக நின்று) முப்புரங்களையும் அழித்து
அமரர்க்கும் அறிவு இயந்து = தேவர்களுக்கும் ஞானத்தைப் புகட்டி
அரன் என உலகு அழித்து = சிவனாக விளங்கி உலகத்தை அழித்து
அயன் என உலகு அமைத்து = பிரமனாக விளங்கி உலகத்தைத் தோற்றுவித்து
உளனே = (அரன் அயன் இவர்கள் இருவருக்குள்ளும்) உயிராக நிற்கிறான் எம்பெருமான்
9. உளன் எனில் உளன் அவன்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.
உளன் எனில் = இருக்கிறான் என்றால்
உருவம் இவ் உருவுகள் = உலகில் உள்ள அனைத்து உருவங்களுடன் (ஸ்தூலப் பொருள்களாக)
உளன் அவன் = அவன் இருக்கிறான்
உளன் அலன் எனில் = அவன் இல்லை என்று சொன்னாலும்
அவன் அருவம் இவ் அருவுகள் = அவன் அனைத்து சூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத) பொருள்களுமாக விளங்குகிறான்
உளன் என இலன் என = எனவே, இருப்பது, இல்லாமல் இருப்பது
இவை = ஆகிய இரண்டையும்
குணம் உடைமையின் = குணமாகக் கொண்டவன் என்றால்
இரு தகைமையொடு = உருவம் அருவம் ஆகிய இரண்டு தன்மைகளுடன்
ஒழிவிலன் = நீக்கமற
பரந்தே = எங்கும் நிறைந்து
உளன் = இருக்கிறான்
10. பரந்த தண் பரவையுள்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே.
பரந்த = பரந்து காணப்படும்
தண் பரவையுள் = குளிர்ந்த நீரை உடைய கடலில்
நீர்தொறும் = ஒவ்வொரு நீர்த்துளியிலும்
பரந்து உளன் = நிறைந்து இருக்கிறான்
பரந்த அண்டம் இது என = பரந்து விரிந்துள்ள இந்த அண்டம் முழுவதுமாகவும்
நிலம் விசும்பு ஒழிவு அற = நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவையாகவும் நீக்கமற நிறைந்துள்ளான்
கரந்த சில் இடந்தொறும் = கண்ணுக்குத் தெரியாத இடங்களிலும்
இடம் திகழ் பொருள்தொறும் = அந்த இடங்களில் அருவமாகக் கிடக்கும் பொருள்களிலும் உயிர்களிலும்
இவை உண்ட கரனே = பிரளய காலத்தில் இவற்றையெல்லாம் உண்டவனாகிய எம்பெருமான்
கரந்து எங்கும் பரந்துளன் = கண்களுக்குப் புலப்படாமல் எங்கும் பரந்து நிற்கிறான்
திருவாய்மொழி – முதல் பத்து – வ்யாக்யானம் (http://www.namperumal.com)
Endless Song – Archana Venkatesan