ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை

ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் - விளக்கவுரை

வாரணம் ஆயிரம் – விளக்கவுரை’ – ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை!

இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையை இங்கு அளிக்கின்றேன்.

முகவுரை

பகல் இரா என்று பார்க்காமல் நனவிலும் கனவிலும் அகத்தில் அன்பென்னும் விளக்கேற்றிக் கண்ணனைக் கண்டுணர்ந்தவர்கள் ஆழ்வார்கள். அச்சுதனின் அடிபணிந்து ‘ஆள்கின்றான் ஆழியான்’ என்று அவனுக்கே ஆளாகி அன்பொழுகப் பாடிய ஆழ்வார்களுள், அந்தப் பரம்பொருளுக்கே பல்லாண்டு பாடி வாழ்த்தி உயர்ந்தவர் பெரியாழ்வார். பெரியாழ்வாரின் திருமகளாரான ஆண்டாளோ, தான் சூடிக் கொடித்த மலர்மாலையாலும் பாடிக் கொடுத்த தமிழ்மாலையாலும் விலங்கிட்டுப் பரந்தாமனையே ஆண்ட பரமபக்தை.  மற்ற ஆழ்வார்களைப் போல் பக்தி வேறு, தாம் வேறு என்று இல்லாமல் பக்தியையும் ஆண்டாளையும் பிரிக்கமுடியாத நிலையில் பக்திமயமாக நின்றவள் ஆதலால், ஆழ்வார்கள் எல்லாரிலும் ஆண்டாளே உயர்ந்தவள் ஆகின்றாள். அதனால்தான், ‘ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையள்’ என்று கோதையின் பெருமையைப் பாடுகின்றார் மணவாள மாமுனிகள். 

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆண்டாள், கோவிந்தனின் திருவருள் பெற்று அவனைத் தன் மணாளனாக அடைய வேண்டி மார்கழித்திங்கள் முழுவதும் நோன்பு நோற்றாள். அவளது நோன்பின் சிறப்பினால் மனமகிழ்ந்து மாதவன் தன் அருகில் வருவான் என்று எதிர்பார்த்தாள். கண்ணன் வரவில்லை. இதனால் மனம் வருந்திய கோதை, காமதேவனிடம் சென்று முறையிட்டாள். ‘மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே’ என்று சொல்லிக் கோவிந்தனை மணக்காமால் மனிதரை மணந்து கொள்ளும் நிலை என்று ஒன்று தனக்கு உண்டானால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகக் காமனிடம் அறிவித்தாள். அதனால் ‘கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்’ என்னும் பேறு தனக்கு வாய்க்குமாறு அருள்செய்ய வேண்டும் என்று மன்மதனிடம் வேண்டிநின்றாள். கோதையின் வேண்டுதல் நிறைவேறுமாறு கண்ணனும் அவள் கண்முன் தோன்றி, அவளைச் சீக்கிரம் தன் மனையாளாக்கி அழைத்துக்கொள்ள வருவதாகக் கூறிப் போனான். வசந்த காலமும் வந்துவிட்டது. குயில்கள் கூவத் தொடங்கின. ஆனால், வருவேன் என்று சொல்லிச்சென்ற கண்ணன் மட்டும் வந்து சேரவில்லை. ஒருவேளை கண்ணனை வரச்சொல்லிக் குயிலைக் கூவச் சொன்னால்  அந்தக் குயிலின் ஓசை கேட்டுத் தன்னிடம் வருவானோ என்று ஏங்கி, அந்தக் குயிலைக் கோவிந்தனிடம் தூதாக அனுப்பிவைத்தாள். ஆயினும் அவன் வரவில்லை. கண்ணனை நினைத்து நினைத்து மனம் உருகி இமைகளை மூடாமல் துன்பக் கடலில் ஆழ்ந்து எவ்வளவு காலம் தான் கண்விழித்து இருக்கமுடியும்? ஒருநாள் கண் அயர்ந்தாள். 

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

என்ற வள்ளுவர் கூற்றுப்படி, நனவில் தான் காண முடியாத நாராயண நம்பியைக் கனவில் காணும் பேறு பெற்று உயிர்ப் பொலிவுற்றாள் கோதை. அது மட்டுமன்றி, அந்தக் கனவிலேயே அவனை நாடும் நகரமும் அறிய மணந்துகொள்ளும் பாக்கியமும் அருளப்பெற்றாள். அவ்வாறு அக்கனவில் பெற்ற அவனது உறவு ‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ அவளுக்குப் பற்றாக நிலைத்து நிற்குமாறு அருள்செய்தான் பரமன். 

ஆயனாகிய மாயன் தன்னை மணந்துகொண்ட இந்த அருங்கனவினைத் தன் ஆருயிர்த் தோழியிடம் சொல்லி மகிழும் கோதை அந்தக் கனவினை ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் கொண்ட தூய தமிழ்மாலையாக அருளிச்செய்கிறாள். இந்தப் பத்துப் பாடல்களுடன் பலனைச் சொல்லும் பதினோராம் பாடலும் சேர்ந்து ஶ்ரீ ஆண்டாள் பாடிய ‘நாச்சியார் திருமொழி’யின் ஒரு பகுதியான ‘ஆறாம் திருமொழி’யாகத் திகழ்ந்து விளங்குகிறது. 

‘ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும்’ தமிழ்மாலையாகிய ‘வாரணம் ஆயிரம்’ என்னும் ஆரண மொழியின் அரும்பொருளில் ஆழ்ந்து ஆராய்ந்து அனைவரும் அனுபவிக்க வேண்டி விளக்கவுரையாகிய இந்நூலை எழுத முயன்றுள்ளேன். ‘வாரணம் ஆயிரம் விளக்கவுரை’ என்னும் இந்நூலைப் படிப்பவர்களின் வாழ்வில் வளங்கள் பல கூடித் துயர் தேய்ந்து நலம் வாய்க்க நாரண நம்பியின் நல்லருளை நாடித் துதிக்கின்றேன். 

அன்புடன்,
இரா. இமயவரம்பன்

‘வாரணம் ஆயிரம் – விளக்கவுரை’ முழுப்புத்தகத்தையும் Amazon Kindle Store-ல் வாங்க கீழே உள்ள Link-ஐ Click செய்யவும்.
வாரணம் ஆயிரம் – விளக்கவுரை

Leave a Reply