வள்ளலார் புகழ் மாலை – In praise of Vallalar

Vallalar
Vallalar

வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய ‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்‘ என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க. பாட்டின் வகை : எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

குறிப்பு: இந்தப் பாடல் ‘inidhu.com‘ என்னும் எழில்விளங்கும் இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருள்வடிவாகும் வள்ளலார்

சமரச மார்க்கம் தழைத்திட வந்து
  சமயங்கள் பிணக்கற இணைத்தார்!
தமக்கென வாழா அன்பினில் ஓங்கும்
  தருமத்தால் பசிப்பிணி தடுத்தார்!
அமைதியின் உருவாம் அசைந்திடா ஜோதி
  அருள்வடி வாகும்நம் அடிகள்
கமலபா தங்கள் நடந்திட்ட வழியைக்
  கருதியே கடைப்பிடித் திடுவோம்!

தேன்சுவை திருவருட்பா

நெஞ்சினை உருக்கி நெகிழ்த்திடும் சொற்கள்
  நித்தியக் களிப்பினை அளிக்கும்,
பஞ்சினை எரிக்கும் பொங்கழல் அதுபோல்
  பழமையில் மடமையை அழிக்கும்,
நஞ்சென மாய்க்கும் நாம்படும் துயரை,
  நலமுறத் தெள்ளறி வருளும்,
செஞ்சொலால் அமைந்த தெய்வநல் அருட்பா
  திரண்டிடும் தேன்சுவை அமுதே!

Leave a Reply