ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி

ஏனமாய் எழுந்தான் - ஶ்ரீ வராக அவதாரத் துதி

திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல்.

பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம்

திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி
    திசையொளி யதைமறைக்கும்
பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப்
    புவியினை இடந்தெடுப்பான்
சங்கி னோடுசக் கரமொரு கதையினைத்
    தரித்திடும் அருந்திறலோன்
செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை
    திருவருள் பொழிந்தனனே!

பதம் பிரித்து:

திங்களோடு ஒரு விரிகதிர் உடு பொழி
    திசை ஒளி அதை மறைக்கும்
பொங்கு வல் இருள் பகை அது மடிந்திடப்
    புவியினை இடந்து எடுப்பான்
சங்கினோடு சக்கரம் ஒரு கதையினைத்
    தரித்திடும் அரும் திறலோன்
செம் கண் ஏனம் என்று எழுந்து இரு நிலம் மிசை
    திரு அருள் பொழிந்தனனே!

பொருள்:

திங்களோடு = சந்திரனும்
ஒரு விரிகதிர் = விரிந்த கதிர்களை உடைய சூரியனும்
உடு = நட்சத்திரங்களும்
திசை = திக்கெல்லாம் பிரகாசிக்குமாறு
பொழி = பொழிகின்ற
ஒளி அதை = ஒளிப்பிரவாகத்தை
மறைக்கும் = (பூமிக்குச் சென்றடையாமல்) மறைக்கும்படியாக
பொங்கு = எங்கும் சூழ்ந்துகொண்டிருந்த
வல் இருள் = கடுமையான இருளாகிய (அந்த இருளை விளைவித்த இரண்யாட்சன் என்னும் அரக்கனாகிய)
பகை அது = பகைவனை
மடிந்திட = ஒழிப்பதற்காகவும்
புவியினை = பூமியை
இடந்து = கடலின் அடியிலிருந்து
எடுப்பான் = மீட்டு எடுத்துக் காப்பதற்காகவும்
சங்கினோடு = வலம்புரி சங்கும்
சக்கரம் = திருச்சக்கரமும்
ஒரு கதையினை = கதாயுதமும்
தரித்திடும் = தம் திருக்கரத்தில் ஏந்துகின்ற
அரும் திறலோன் = மிகுந்த சக்திவாய்ந்தவரான திருமால்
செம் கண் = சிவந்த கண்களையுடைய
ஏனம் என்று = பன்றியாக
எழுந்து = திருவவதாரம் எடுத்து
இரு நிலம் = இந்தப் பெரிய உலகத்தின்
மிசை = மீது
திரு அருள் = கருணை மழையை
பொழிந்தனனே = பொழிந்தார்! (அத்தகைய பெருமை வாய்ந்த வராக மூர்த்தியை போற்றித் துதிப்போமாக!)
படமும் பாடலும்
இமயவரம்பன்

Leave a Reply