பல வேடிக்கை மனிதரைப் போலே

பல வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேன் என்றுநினைத் தாயோ?
          – மகாகவி பாரதியார்

தேடிச் சோறு நிதம் தின்று வெற்று வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்ந்து மடியமாட்டேன் என்னும் இந்தக் கவிதை வரியில் வெளிப்படும் எள்ளலும், நகைப்பும் கலந்த இடித்துரைப்பும் உணர்த்தும் வாழ்க்கைநெறியை இங்கு ஆய்ந்து பார்க்கலாம்.

விளக்கவுரை:

Life is a tale told by an idiot,
full of sound and fury,
Signifying nothing.

Shakespeare (Macbeth)

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே.

பட்டினத்தார்

உயர்ந்த குறிக்கோள் இல்லாத வாழ்க்கை ஓர் அர்த்தமற்ற பழங்கதை; மாயத்தோற்றம் மிகுந்த மனக்கனவு; இலக்கில்லாத நெடும்பயணம்; குருட்டாட்டம் ஆடிக் குழியில் விழும் கண்மூடி வாழ்க்கை. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் பாடலின் முதல் மூன்று அடிகளில் இந்தக் கருத்தை ஆணித்தரமாக உணர்த்துகிறான் பாரதி. ‘இத்தகைய வீண்வாழ்க்கை வாழும் வேடிக்கைக்காரர்களைப் போல நானும் பயனற்று வீழ்ந்து மடியமாட்டேன்’ என்று முழங்கும் நான்காம் அடியோ இந்தப் பாட்டுக்கு மகுடம் வைத்தாற்போல் வெடித்துச் சிரிக்கின்றது. 

எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப

தொல்காப்பியர்

தொல்காப்பியர் சிரிப்பை நான்கு விதமாக வகைப்படுத்துகிறார். அவை முறையே எள்ளல்,இளமை, பேதைமை,மடமை எனப்படும். எள்ளல் என்பது பிறரது இழிவான நிலையைப் பார்த்துச் சிரிப்பது அல்லது கேலி செய்வது. சினம் கொண்டு சிரித்தலும் எள்ளலுள் அடங்கும். இளமை என்றால் பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்பட்டுப் பின் இடறி விழுபவர்களைப் பார்த்துச் சிரிப்பது. பேதைமை என்பது அறியாமையைக் கண்டு சிரித்தல். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

திருக்குறள்

ஏதம் கொண்டு ஊதியத்தைப் போக விடுவதற்குப்பேர் தான் பேதைமை என்கிறார் வள்ளுவர். ஏதம் என்றால் ‘துன்பம் தருபவை’ என்றும் ஊதியம் என்றால் ‘நன்மை தருபவை’ என்றும் அர்த்தம். அதாவது, தனக்குத் துன்பம் தருவனவற்றை எப்பாடு பட்டாவது அடைய நினைப்பதும் நன்மை தருவனவற்றை அறவே ஒதுக்குவதும் பேதைமை ஆகும். 

மடமை என்பது எதையும் ஆராயாமல் உடனே நம்புவதையும் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்று சாதிப்பதும். இது ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்’ இருப்பதையும் குறிக்கும்.

‘வேடிக்கை மனிதர்கள்’ என்று சொல்லும் போது, இந்த நான்கு வகை நகைச்சுவை மெய்ப்பாடுகளையும் காட்டுகிறான் பாரதி. முதலில் தேடிச் சோறு நிதம் தின்று ஒரு சிறுவட்டத்துக்குள் தம்மைச் சிறைப்படுத்திக்கொண்டு வாழும் மனிதர்களின் சிறுமையைக் கண்டு சிரிக்கிறான்.’காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்று விரிந்து பரந்த மனப்பான்மை கொள்ளாமல், என் வீடு என் மக்கள் என்னும் தன்னல வலையில் சிக்கி நன்னலம் இழக்கும் மனிதர்களின் மடமையைக் கண்டு வெகுண்டெழுகிறான்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

திருக்குறள்

விருந்தினர்களைப் பேணாமல் ‘சோறு நிதம் தின்று’ வாழும் மூடர்கள் செல்வம் இருப்பினும் ஏழைகளே என்னும் வள்ளுவர் முழக்கத்தில் பாரதியின் உள்ளக் குமுறல் எதிரொலிப்பதைக் காணலாம். 

இதேபோல், நன்னெறி காட்டும் ஞான நூல்கள் ஆயிரம் இருந்தாலும் சின்னஞ் சிறு கட்டுக்கதைகளையே பெரிதென எண்ணிப் பிதற்றுபவர்களின் அறிவு முதிர்ச்சியின்மையைக் கண்டும் சிரிக்கிறான் பாரதி.  மேலும், உலகம் முழுவதும் இன்பங்கள் அமுத வெள்ளமாகக் கொட்டிக் கிடப்பதை உணராமல் எப்பொழுதும் கவலையில் வாடி நரகத்தில் உழலும் மனிதர்களின் பேதைமையைக் கண்டு நகுகின்றான். ‘தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான்’ என்று சாத்திரங்கள் சொல்வதைக் கேளாமல் கேடு நினைத்துக் கெட்டழிகின்ற மனிதர்களைக் கண்டும் நகைக்கின்றான். நாள்கள் எல்லாம் வாள்கள் ஆகித் தாம் வாழும் காலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டித் தள்ளுவதைக் கூடக் கவனிக்காமல் தம் மனம் போன போக்கில் வாழ்ந்து முதுமை அடைந்து இறந்து மடியும் மனிதர்களின் மூடத்தனத்தையும் எண்ணி ஏளனத்துடன் சிரிக்கின்றான். 

தேவரே அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

திருக்குறள்

மனம் போன போக்கில் வாழ்வதையே ‘மேவன செய்தொழுகல்’ என்கிறார் வள்ளுவர். அவ்வகையில் பார்த்தால், சான்றோர்கள் கயவர்கள் என்று இரண்டு விதமானவர்களும் தமது விருப்பத்திற்கேற்ப வாழ்பவர்கள். அதனால், கயவர்களும் சான்றோர்களைப் போன்றவர்களே என்று சொல்கிறார் வள்ளுவர். இங்குக் கயவர்களைப் புகழ்வது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களைப் பார்த்துப் பழித்துச் சிரிக்கிறார். ஏனென்றால், மேம்போக்காகப் பார்த்தால், இவர்கள் இருவரது போக்கும் ஒத்திருந்தாலும், கூர்ந்து கவனித்தால் பல வேறுபாடுகளைக் கண்டறியலாம். நன்னெறியைப் பேணும் சான்றோர்களின் மனம் சீரானது. மாசு மறுவற்றது.  யாருடைய கருத்துத் திணிப்பும் தம் மனத்தைப் பாதிக்காதவாறு தம் மனம் சொல்லும் அறிவுரையின்படியே நின்று நடப்பவர்கள். அதனால் அச்சான்றோர்கள் மனம் போன போக்கில் வாழ்வதில் தவறில்லை. ஆனால், கயவர்களின் விஷயத்தில் அப்படியில்லை. அவர்கள் மனம் குழப்பம் அடைந்து தடுமாறும் இருட்டுக் குழி. அவர்கள் இந்த மதிகெட்ட மனம் சொல்வதைக் கேட்டு நடப்பதால் பிறருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துத் தாமும் கெட்டொழிகின்றனர். அதனால், அவர்கள் அவ்வாறு மனம் விரும்பியவாறு வாழ்வது சிறப்பன்று. 

இவ்வாறு மனம் போன போக்கில் வாழ்வை நடத்திப் பொய்ம்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கி இறுதியில் கொடுங்கூற்றுக்கு இரையென மாய்பவர்களைப் பார்த்து ஊரே கைகொட்டிச் சிரிக்கும். ‘உன் அருள்கிடைக்கப்பெறாமல் நான் மாண்டால், உலகத்தார் என்னைப் பார்த்துப் சிரிப்பார்களே! அதனால், உன்னைப் பிரிந்து வாடிக் கிடக்கும் என்னை உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டு அருள்புரியவேண்டும்’ என்று இறைவனை இறைஞ்சும் மாணிக்கவாசகரின் நெஞ்சுருக்கும் பாடல் இங்குக் கருதிக்களிக்கத் தக்கது. 

மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுஉன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்
செத்தே போனால் சிரியாரோ?

திருவாசகம்

Leave a Reply