ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி

வீரராகவப் பெருமாள்

படம் : hindutamil.in (நன்றி)

திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள்

ஶ்ரீ வீரராகவ விருத்தம்
திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் புகழ்பாடும் பாசுரங்கள்
கவிதைகள் : இமயவரம்பன்
பாவகை : கட்டளைக் கலிவிருத்தம்
1.
திருமகள் திகழும் திருமார்பன்
திருவ மர்ந்துறை சீரெழில் மார்பனை
அருள்ம லர்ந்தொளிர் அங்கண் அழகனைத்
திருவெவ் வுள்கிடந் தானையெம் சிந்தையில்
மருவு மாலினை வாழ்த்தி வணங்குவாம்.

பதம் பிரித்து:

திரு அமர்ந்து உறை சீர் எழில் மார்பனை,
அருள் மலர்ந்து ஒளிர் அங்கண் அழகனை,
திரு எவ்வுள் கிடந்தானை, எம் சிந்தையில்
மருவும் மாலினை வாழ்த்தி வணங்குவாம்.

பொருள்:

திரு = திருமகள்
அமர்ந்து = வீற்றிருந்து
உறை = உறைகின்ற (வசிக்கின்ற)
சீர் = சிறப்பும்
எழில் = அழகும் மிகுந்த
மார்பனை = திருமார்பை உடையவனை,
அருள் மலர்ந்து = திருவருள் பொழிந்து
ஒளிர் = கடைக்கண் ஒளி வீசுகின்ற
அங்கண் = அணிவிளங்கும் கண்களையுடைய
அழகனை = சுந்தர ரூபனை
திரு எவ்வுள் கிடந்தானை = திரு எவ்வுளூரில் நாகசயனத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ வீரராகவனை
எம் சிந்தையில் = எமது மனத்தில்
மருவும் = கலந்து விளங்கும்
மாலினை = திருமாலை
வாழ்த்தி வணங்குவோம் = போற்றித் துதிப்போமாக!
2.
பிணி தீர்க்கும் பெருமான்
எவ்வு யிர்க்குமி ருந்துணை யேயெனச்
செவ்வ னேதொழுஞ் சிந்தை யுடையவர்
எவ்வு டற்பிணி யெய்தினு மஃதற 
எவ்வு ளீசனி ணையடி காக்குமே.

பதம் பிரித்து:

‘எவ் உயிர்க்கும் இரும் துணையே!’ எனச்
செவ்வனே தொழும் சிந்தை உடையவர்,
எவ் உடல் பிணி எய்தினும் அஃது அற 
எவ்வுள் ஈசன் இணையடி காக்குமே!

பொருள்:

எவ் உயிர்க்கும் = “எல்லா ஜீவராசிகளுக்கும்
இரும் = மிகப்பெரிய
துணையே = பற்றுக்கோடாக விளங்கித் துணைபுரிபவனே!”
என = என்று போற்றி
செவ்வனே தொழும் = சிரத்தையுடன் வணங்குகின்ற
சிந்தை உடையவர் = (பக்தி நிறைந்த) நெஞ்சத்தைக் கொண்டவர்(களுக்கு)
எவ் உடல் பிணி = எந்த விதமான நோய்கள்
எய்தினும் = வந்தடைந்தாலும்
அஃது அற = அவை யாவும் நீங்குமாறு
எவ்வுள் ஈசன் = ‘கிம் க்ருஹேசன்’ என்று போற்றப்படும் எவ்வுள் எம்பெருமானுடைய
இணையடி = திருவடிகள் இரண்டும்
காக்குமே = பக்தர்களை ரக்ஷிக்கும்
3.
தமிழ்ப் பாசுரம் ஆனவன்
எண்ண ருஞ்சுவை யோடரு ளீந்திடும்
பண்ண மர்தமிழ்ப் பாசுர மானவன்
நண்ண ரும்பதம் நல்கிடு மெவ்வுளெம்
அண்ணல் என்னவ ழிந்திடு மல்லலே.

பதம் பிரித்து:

‘எண்ண அரும் சுவையோடு அருள் ஈந்திடும்
பண் அமர் தமிழ்ப் பாசுரம் ஆனவன்;
நண்ண அரும் பதம் நல்கிடும் எவ்வுள் எம்
அண்ணல்’ என்ன அழிந்திடும் அல்லலே.

பொருள் :

நண்ண அரும் = “விரும்பி அடையமுடியாத
பதம் = பரமபதத்தை
நல்கிடும் = நமக்கு அருள்கின்ற
எவ்வுள் = திரு எவ்வுளூரில் எழுந்தருளியிருக்கும்
எம் அண்ணல் = எம் தலைவன்,
எண்ண அரும் = நெஞ்சால் நினைத்து உணர முடியாத
சுவையோடு = (தெய்வீகமான) இனிமையுடன்
அருள் = திருவருளையும்
ஈந்திடும் = ஊட்டவல்ல
பண் அமர் = இசை அமைந்த
தமிழ்ப் பாசுரம் = (திவ்வியப் பிரபந்தம் என்னும்) தமிழ்ப் பாமாலையாகயும்
ஆனவன் = விளங்கி அருள் செய்பவன்”
என்ன = என்று போற்றித் துதித்தால்
அல்லல் = துன்பங்கள் எல்லாம்
அழிந்திடும் = ஒழிந்து போய்விடும்
4.
யானையின் துயர் தீர்த்த ஆழியான்
காக்க என்ற கரியின் கடுந்துயர்
போக்க வந்த பொருதிற லாழியான்
நீக்க மின்றித் திருநிறை யெவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழொளிச் செல்வனே.

பதம் பிரித்து:

‘காக்க!’ என்ற கரியின் கடும் துயர்
போக்க வந்த பொரு திறல் ஆழியான்,
நீக்கம் இன்றித் திரு நிறை எவ்வுளூர்
சீர்க்க நின்ற திகழ் ஒளிச் செல்வனே.

பொருள் :

காக்க = ‘ஆதிமூலமே! என்னைக் காத்தருள்!’
என்ற = என்று கதறி அழைத்த
கரியின் = (முதலையின் பிடியில் சிக்கித் தவித்த) யானையின்
கடும் துயர் = கடுமையான துன்பத்தை
போக்க வந்த = போக்குவதற்காக விரைந்து வந்த
பொருதிறல் = அழித்தொழிக்கும் திறல் வாய்ந்த
ஆழியான் = திருச்சக்கரத்தை உடைய திருமால்,
நீக்கம் இன்றி = எங்கும் நீக்கமற
திரு = திருமகளானவள்
நிறை = நிறைந்து விளங்கும்
எவ்வுளூர் = திரு எவ்வுளூர் என்னும் திருத்தலத்திற்கு
சீர்க்க = மேலும் சிறப்பினை அளிக்குமாறு
நின்ற = அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்
ஒளி திகழ் = பிரகாசம் மிக்க
செல்வனே = அருட்செல்வனே.
5.
ஆயிரம் நாமங்களை உடையவன்
பேரொ ராயிரத் தானெம்பி ரான்பரன்
ஏரு டைத்திரு வெவ்வுளி  றையவன்
நார ணன்பட நாகணை யானருள்
வீர ராகவன் மெய்யடி யோங்களே.

பதம் பிரித்து:

பேர் ஒர் ஆயிரத்தான், எம் பிரான், பரன்,
ஏர் உடைத் திரு எவ்வுள்  இறையவன்,
நாரணன், பட நாக அணையான், அருள்
வீர ராகவன் மெய் அடியோங்களே.

பொருள் :

பேர் = நாமங்கள்
ஒர் ஆயிரத்தான் = ஓராயிரம் உடையவன்,
எம் பிரான் = எம் தலைவன்,
பரன் = பரம்பொருளாக விளங்குபவன்,
ஏர் உடை = அழகுடன் திகழும்
திரு எவ்வுள் இறையவன் = திரு எவ்வுளூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்,
நாரணன் = நாராயணன் என்னும் திருநாமத்தை உடையவன்,
பட நாக அணையான் = படமெடுத்து விளங்கும் பாம்பின் மேல் சயனித்து வீற்றிருப்பவன்,
அருள் = அருள்மிகுந்த
வீர ராகவன் = வீரராகவன் என்னும் திருநாமத்தை உடையவன்
மெய் அடியோங்களே = (இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திரு எவ்வுள் கிடந்தானின்) உண்மையான பக்தர்கள் நாங்கள் (என்னும் உயர்வான நிலையிலிருந்து மாறாமல் இருப்போமாக!)
6
சொற்பதம் கடந்த ஜோதி ஸ்வரூபன்
சொற்ப தங்கள் கடந்தொளிர் சோதியைப்
பொற்பொ ருப்பினைப்  பொற்புறு ரூபனை
விற்பெருந் திறல் வீரனைப் பேரெவ்வுள்  
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.

பதம் பிரித்து:

சொல் பதங்கள் கடந்து ஒளிர் சோதியைப்
பொன் பொருப்பினைப் பொற்பு உறு ரூபனைக்
வில் பெரும் திறல் வீரனைப் பேரெவ்வுள்  
பற்ப நாபனைப் பாடிப் பணிவனே.

பொருள் :

சொல் பதங்கள் = சொற்களால்
கடந்து = விளக்கிச் சொல்ல முடியாத அளவுக்கு அவற்றுக்கெல்லாம் அப்பால் விளங்கும்
ஒளிர் சோதியை = ஒளிமிக்க ஜோதியாய்த் திகழ்பவனை,
பொன் பொருப்பினை = பொன் மலையைப் போன்றவனை,
பொற்பு உறு = அழகுடன் திகழும்
ரூபனை = திருவுருவம் கொண்டவனை
வில் பெரும் திறல் வீரனை = வில் போரில் மிக்க திறமை வாய்ந்த வீரனை
பேர் எவ்வுள் = பெருமை மிக்க திரு எவ்வுளூரில் எழுந்தருளியிருக்கும்
பற்ப நாபனை = பத்ம நாபனை (உந்தியில் எழுந்த தாமரைமேல் பிரமனைப் படைத்தவனை)
பாடிப் பணிவனே = போற்றி வணங்குவேன்.
7
இன்ப வடிவானவன்
என்பெ லாமுள் ளுருகவெ ழுந்திடும்
அன்பி னாலகத் தாழ்ந்தருள் பாடுவார்
துன்பெ லாம்துடைக் கும்சுடர் நேமியான்
இன்பு லாவடி வெவ்வுள் இறைவனே.

பதம் பிரித்து:

என்பு எலாம் உள் உருக எழுந்திடும்
அன்பினால் அகத்து ஆழ்ந்து அருள் பாடுவார்
துன்பு எலாம் துடைக்கும் சுடர் நேமியான்
இன்பு உலாவு வடிவு எவ்வுள் இறைவனே.

பொருள் :

இன்பு = இன்பம்
உலாவு = உலவுகின்ற (திகழ்கின்ற)
வடிவு = திருவுருவத்தைக் கொண்டு விளங்கும்
எவ்வுள் இறைவன் = திரு எவ்வுளூரில் எழுந்தருளியுள்ள இறைவனானவன்,
என்பு எலாம் = எலும்புகள் எல்லாம்
உள் = உள்ளே நெகிழ்ந்து
உருக = உருகுமாறு
எழுந்திடும் அன்பினால் = உண்டாகும் பக்தியுடன்
அகத்து = மனத்தில்
ஆழ்ந்து = தியானித்து
அருள் பாடுவார் = திருவருளைப் போற்றித் துதிப்பவர்களின்
துன்பு எலாம் = துன்பங்களை எல்லாம்
துடைக்கும் = போக்கவல்ல
சுடர் = ஒளிவீசும்
நேமியான் = திருச்சக்கரத்தை ஏந்தியவன் ஆவான்.
8
கருட வாகனன்
அஞ்சி றைப்பற வையது தாங்கிடும்
கஞ்ச வார்கழல் கைதொழு வாரவர்
நெஞ்ச மேவி நிறைந்தருள் வார்த்திடும் 
மஞ்ச னாரிடம் வண்புகழ் எவ்வுளே.

பதம் பிரித்து:

அம்  சிறைப் பறவை அது தாங்கிடும்
கஞ்ச வார் கழல் கை தொழுவார் அவர்
நெஞ்சம் மேவி நிறைந்து அருள் வார்த்திடும் 
மஞ்சனார் இடம் வண் புகழ் எவ்வுளே.

பொருள் :

அம் = அழகிய
சிறை = சிறகினை உடைய
பறவை = அருட்பறவை ஶ்ரீ கருடன்,
அது = அத்தகைய கருடன்
தாங்கிடும் = தன் திருக்கரங்களில் தாங்கி ஏந்துகின்ற
கஞ்ச = தாமரை மலர் போன்ற
வார் = அழகிய
கழல் = வீரக்கழல் அணிந்த திருவடிகளை
கை தொழுவார் அவர் = கரம்குவித்து வணங்குபவர்களின்
நெஞ்சம் = மனத்தில்
மேவி = புகுந்து
நிறைந்து = நீக்கமற நிறைந்து
அருள் = திருவருளை
வார்த்திடும் = பொழிந்திடும்
மஞ்சனார் = மைந்தனார் = செல்வனார்
இடம் = எழுந்தருளும் திருத்தலம் என்று போற்றப்படுவது
வண் புகழ் = புகழ் மிகுந்த
எவ்வுளே = திரு எவ்வுளூரே.
9
ஆமை ஆனவன்
தடவ ரைதனைத் தாங்கிநின் றாமையாய்க்
கடல்க டைந்தக ளைப்புக்கொ லோதிரு
இடமெ னக்கொண்டெவ் வுள்கிடந் தெம்பிரான்  
படவ ரவ்வணைப் பையத் துயின்றதே!

பதம் பிரித்து:

தட வரை தனைத் தாங்கி நின்று ஆமையாய்க்
கடல் கடைந்த களைப்புக் கொலோ திரு
இடம் எனக் கொண்டு  எவ்வுள் கிடந்து எம்பிரான்  
பட  அரவு அணைப் பையத் துயின்றதே!

பொருள் :

எம்பிரான் = எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணமூர்த்தி
எவ்வுள் = திரு எவ்வுளூரே
திரு இடம் என = தான் சயனிப்பதற்குத் தகுந்த இடமென்று திருவுள்ளம் கொண்டு
கிடந்து = சாலிஹோத்ர மகரிஷியின் திருக்குடிலில் எழுந்தருளியிருந்து
பட அரவு அணை = படம் கொண்ட பாம்பின் மேல் பள்ளி கொண்டு
பையத் = விழிப்போடு கூடிய
துயின்றது = யோக நித்திரையில் ஆழ்ந்ததற்குக் காரணம்,
ஆமையாய் = ஓர் ஆமையின் உருவெடுத்து
தட = உயர்ந்து விளங்கும்
வரை தனை = மலையாகிய மேருவை
தாங்கி நின்று = தன் முதுகில் சுமந்து நின்று
கடல் கடைந்த = பாற்கடலைக் கடைந்ததால் உண்டான
களைப்புக் கொலோ = களைப்பைப் போக்கிக்கொள்ளத் தானோ?
10
பக்தர்கள் மனத்தில் பள்ளி கொள்கின்றவன்
இரவு நண்பகல் எப்பொழு தும்முன்றன்
குரைக ழற்புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல்லணைப் பள்ளிகொண் டாயருள்
பரவு மென்மனப் பள்ளியெந் நாள்கொலோ!

பதம் பிரித்து:

இரவும் நண்பகல் எப்பொழுதும் உன்றன்
குரை கழல் புகழ் கூறுவன் எவ்வுளாய்!
அரவ மெல் அணைப் பள்ளிகொண்டாய்! அருள்
பரவும் என் மனப் பள்ளி  எந்நாள் கொலோ!

பொருள் :

எவ்வுளாய் = திரு எவ்வுளூரில் எழுந்தருளியுள்ள இறைவனே!
இரவும் நண்பகல் = இரவிலும் பகற்பொழுதிலும்
எப்பொழுதும் = எந்த நேரமாக இருந்தாலும்
உன்றன் = உன்னுடைய
குரை = ஒலிக்கின்ற
கழல் = வீரக்கழல்களை அணிந்த திருவடிகளின்
புகழ் கூறுவன் = பெருமையையே துதித்துக்கொண்டிருக்கிறேன்;
மெல் = உனக்கு இதமான
அரவ அணை = பாம்புப் படுக்கையில்
பள்ளி கொண்டாய் = பள்ளி கொள்கின்றவனே!
அருள் பரவும் = உன் அருளையே போற்றுகின்ற
என் மன = என் நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து
பள்ளி = நீ பள்ளிகொள்கின்ற நாள்
எந்நாள் கொலோ? = எந்த நாளோ?

ஶ்ரீ வீரராகவப் பெருமாள் திருவடிகளே சரணம்.

கவிதைகள்,
இமயவரம்பன்

கட்டளைக் கலி விருத்தம் – இலக்கணக் குறிப்பு

கலி விருத்தம் என்பது நான்கு சீர்களையுடைய அளவடி நான்கினால் அளவொத்து அமைவது. அதாவது, ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களைக் கொண்டு, நான்கு அடிகளால் ஆன பாடல். கட்டளைக் கலி விருத்தம் என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி விருத்தம் என்று பொருள்.

எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலையும் திருஞான சம்பந்தர் அருளிய திருமுறைப் பாடலையும் காண்போம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

கம்பர்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருஞானசம்பந்தர்

இவ்வகைக் கட்டளைக் கலி விருத்தம் சிறப்பாக அமைய கீழ்வரும் இலக்கண விதிகளை முறைப்படி அக்கவிதை பின்பற்ற வேண்டும்.

  • முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். மேலே எடுத்துக்காட்டப்பட்ட கம்பரின் கலிவிருத்தக் கவிதையில், முதல் சீர்களாகிய ‘உலகம்’, ‘நிலைபெ’, ‘அலகி’, ‘தலைவ’ என்னும் சீர்கள், ‘கம்’, ‘பெ’, ‘கி’, ‘வ’ போன்ற குறில் அசைகளுடன் முடிந்து, புளிமா என்னும் அசை வாய்பாட்டைச் சார்ந்து அமைந்துள்ளன.
  • விருத்தம் நிரையசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்து; கம்பரின் இந்தக் கலி விருத்தம் ‘உல’, ‘நிலை’, ‘அல’, ‘தலை’ என்ற நிரையசையில் தொடங்கியுள்ளதால், ஒவ்வொரு அடியிலும் 12 எழுத்துகள் (ஒற்றெழுத்துகளை நீக்கினால்) அமைந்துள்ளன.
  • நேரசையில் தொடங்கியிருந்தால் 11 எழுத்தெண்ணிக்கை வரும்.
  • 2வது அல்லது 3வது சீர்களில் மாச்சீர் வந்தால் அடுத்த சீர் நிரையில் தொடங்கும். எடுத்துக்காட்டாகப் பார்ப்போமானால், சம்பந்தரின் பாடலில் முதலடியில் இரண்டாம் சீர் ‘லாகி’ என்ற மாச்சீர். அதை அடுத்து ‘கசிந்துகண்’ என்று நிரையில் தொடங்கும் சீர் வந்துள்ளதைக் காண்க.
  • பொதுவாக ‘மா கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்னும் அசை ஓசைப்படி கலி விருத்தங்கள் அமையும்.
  • விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி’ என்னும் சம்பந்தர் பாட்டில், ‘ணீர்மல்கி’ என்னும் சீர் தேமாங்காய்ச்சீராக வந்துள்ளதைக் காணலாம்.
  • முதலிரண்டு சீர்களுக்கிடையில் ‘மாவைத் தொடர்ந்து நேர்’ என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும். ‘காத லாகி’ என்னும் சீர்கள் ‘தேமா தேமா’ என்று வந்துள்ளதால், ‘த’ என்னும் நேரை (மாவை) தொடர்ந்து ‘லா’ என்னும் நேர் அமைந்துள்ளதையும் காணலாம். அதேபோல், ‘லாகிக் கசிந்துகண்’ என்னும் சீர்கள் ‘மாமுன் நிரை’ என்னும் வெண்டளை விதிப்படி வந்துள்ளதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

Leave a Reply