வீழ்வேன் என்றுநினைத் தாயோ?
– மகாகவி பாரதியார்
“நான் சராசரி மனிதர்களைப் போல இழிவாழ்க்கை வாழப் பிறந்தவன் அல்ல; புகழ்வாழ்க்கை வாழ்ந்து செயற்கரிய செயல் புரிந்து இந்த மானுடத்தை உயர்த்த வந்தவன். அதனால் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வாழ்ந்து மடியும் மூடர்களைப் போல ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'” என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்கும் துணிவும் துடிப்யும் மிகுந்த இந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை இங்கு ஆய்ந்து பார்ப்போம்.
விளக்கம்
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
பாரதியார்
வீழ்வு என்னும் சொல்லுக்குத் தாழ்வு, இழிவு, இறக்கம், தடுமாற்றம், தளர்வு, இறப்பு என்று பல பொருள்கள் உண்டு. ‘தாழ்ந்து நடவேல்’ என்று புதிய ஆத்திச்சூடியில் போதிக்கும் பாரதி, கீழான முறையில் நடந்து கொண்டு மனிதர் என்னும் நிலையிலிருந்து தாழ்ந்து வீழ்பவர்களின் இழிகுணத்தைச் சாடுகிறான்.
அந்நியர்க்கு அடிமையாதல் எத்தனை இழிவானதோ அதை விடக் கீழ்த்தனமானது நம் ஐம்புலன்களுக்கு அடிமை ஆதலே ஆகும். மனிதர்கள் தன்னலம் பேணி, வீண்கதைகள் பேசி, துயரத்தில் அழுந்தி, துன்புறுத்தி வாழும் போது பேராசை, மதிமயக்கம், சோகம், காழ்ப்புணர்வு போன்ற உணர்ச்சிகளின் வலையில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்தத் தாழ்வு நிலைமையையே ‘புல்லடிமைத் தொழில்’ என்று சொல்கிறான் பாரதி. மடமை, சிறுமை, துன்பம், பொய், வருத்தம், நோவு போன்றவைபோல் இந்த அடிமை மனோபாவமும் போக வேண்டும். அப்போதுதான் அழுகுதல், சாதல், அஞ்சுதல் போன்ற இழிவுகள் யாவும் விலகும். ‘வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வதற்கு ஒப்பாமோ?’ என்று வினவும் பாரதி அத்தகைய அடிமை வாழ்வை ‘வாழ்வு’ என்று பார்க்காமல் ‘வீழ்வு’ என்றே கருதினான்.
‘நாடி அதிர்ச்சியே மரணம்’ என்னும் அறிவியல் சான்றுக்கேற்ப அதிராத மனம் முதிராத உடலை வளர்க்கும். அறவழியின் மீதும் அன்பு நெறியின் மீதும் திடமான நெஞ்சின்மீதும் இவையாவும் நிலைத்திடச் செய்யும் தெய்வத்தின் மீதும் அசையாத நம்பிக்கை வைத்திருத்தல் அவசியம். அசைவற்ற மனமே வாழ்வு பெருக்கும். அசைவும் அதிர்வும் வீழ்வு கொடுக்கும்.
வீழ்வு என்னும் சொல்லுக்கு விரும்புதல் அல்லது ஆசைப்படுதல் என்று மற்றொரு அர்த்தமும் இருக்கிறது. ஆரமுதத்தை உண்ணுவதற்கு ஆசைகொண்டவர்கள் கள்ளின் பக்கம் தம் நாட்டத்தைக் காட்டமாட்டார்கள். அதேபோல், ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைக்கும் பேரின்பத்தையே நாடும் மனம், சிற்றின்பச் சுவை தேடிச் சோற்றுக்கு அலைவதிலும் பொருள் குவிப்பதிலும் தற்பெருமை பேசுவதிலும் தன் துன்பத்திற்குப் பிறர்மீது பழிசுமத்தித் துன்புறுத்தி மகிழ்வதிலும் விருப்பம் காட்டி வீழ்ந்து அழியாது.
‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று கேட்கும் போது நெஞ்சுறுதி, பெருமிதம், இகழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளைக் காட்டுவதுடன் நெறி தவறாமை, தாழ்ந்து நடவாமை, சிற்றின்பம் விழையாமை, பிறர்நலம் பேணுதல் என்னும் நற்பண்புகளையும் நாட்டுகின்றான் பாரதி. வறுமை வந்து வாட்டும் போதும், துயரம் வந்து ஆழ்த்தும் போதும், அறமும் அன்பும் விலகிடாமல் வாழ்ந்து காட்ட வந்த சித்தன் அவன். எனவே மலையே வந்து விழுந்தாலும் தான் வீழ மாட்டேன் என்னும் உரமும் மனவலிமையும் அவனுக்கு மிகுந்திருந்தது.
‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இப்பாடல் ‘யோக சித்தி’ என்னும் தலைப்பில் அமைந்த வரம் கேட்கும் பாடல் தொகுப்பில் முதலாம் பாடல். வரம் கேட்கும் இந்தப் பாடலில், ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று கவிஞன் ஏன் சற்று கடுமையாகச் சொல்கிறான் என்று நாம் சிந்திக்க வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் வரமருளும் கருணையுள்ளம் கொண்டவள் பராசக்தி. ஆயினும், மனிதர்களின் மனத்தன்மையைப் பொறுத்து அவரவர்களுக்குத் தகுந்தவாறே வரம் அருள்வாள். தன்னை வென்றாளும் திறமையற்றவர்களுக்கு வையத் தலைமை என்னும் வரம் அளித்தால் வரம் வாங்கியவருக்கும் கேடு, உலகத்துக்கும் அதுபெருங் கேடாய் முடியும். அதனால், தேடிச் சோறு தின்று கதைபேசி மனம் வாடிப் பிறரை வாட்டுபவர்களுக்கு அவர்கள் சுமூகமாக வாழ்ந்து மடிவதற்கான சாதாரண வரங்களையே அருள்வாள்.
ஆனால், பாரதியோ அத்தகைய சாதாரண மனிதன் அல்லன். பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திட வந்தவன். தனது அறவேட்கையையும் அகத்தூய்மையையும் அன்பாற்றலையும் பாராமல் எங்கே தன் புறத்தோற்றத்தை மட்டுமே பார்த்து அந்த வேடிக்கை மனிதர்களின் கூட்டத்தில் தன்னையும் ஒருவனாகப் பராசக்தி கருதிவிடுவாளோ என்று எண்ணினான். அதனால்,’நான் சாதாரண வாழ்க்கையில் திருப்தியடையும் சராசரி மனிதன் அல்லேன்; நான் செய்யவேண்டிய செயற்கரிய செயல்கள் பல உள்ளன; நாட்டுக்கு உழைத்தலும் சோர்வற்று இருத்தலும் சாகாவரம் பெற்ற கவிதைகள் இயற்றலும் போன்ற அரிய கடமைகள் எனக்கு உள்ளன; இந்தக் கடமைகள் யாவும் இனிதே நிறைவேற நான் வீழ்ந்து மடியாமல் இருக்கவேண்டும். அதற்கு வேண்டிய வரங்களை நேரே இன்று எனக்குத் தா’ என்று சொல்லும்போது, தான் அந்த வேடிக்கை மனிதர்களிலிருந்து வேறுபட்டவன் என்னும் உண்மையைப் பராசக்திக்கு நினைவுறுத்தும் வகையிலேயே ‘நானும் வீழ்பவன் என்று நினைக்காதே’ என்கிறான்.
அதேசமயம், வீழ்ந்து மடியும் மனிதர்களின் இழிநிலைமையை இகழ்ந்துரைக்கும் பாங்கையும் இங்குப் பார்க்கலாம். மனித வாழ்வை மேம்படுத்த வந்த மகாகவிஞன் பாரதி. அதனால், ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் இந்தப் பாடலின் முக்கிய நோக்கம், பிறரை இழிவுபடுத்தித் தன்னை உயர்த்திக் காட்டுவதோ, தனக்குப் பெருவரங்கள் கேட்பதோ கிடையாது. மனித மனத்தின் அழுக்கினைக் காட்டும் ஒரு கண்ணாடியாகத் தன்னைப் பாவித்து, மானிட சமுதாயத்தின் மடமை, சிறுமை, பேதைமைகளைச் சுட்டிக் காட்டித் திருத்த முனையும் பாடல் தான் இது என்பதை நாம் மறக்க வேண்டாம்.