வண்ணப்படமும் வெண்பாவும்

வண்ணப்படமும் வெண்பாவும்

1. வான்கதிரை வாங்கும் மரங்கள்

மரங்களெலாம் கூடி விரிகதிரை வாங்க
நெருங்கினவோ தம்முயர்கை நீட்டிப் – பெருங்காட்டின்
வல்லிருளில் வாடி வளரொளியைத் தேடுகின்ற 
புல்லினுக்கும் சேர்க்கும் பொருட்டு.

கருத்து:

கானகத்தின் காரிருளில் ஒளி தேடும் புல் போன்ற சிறு தாவரங்களுக்கு ஒளியினைச் சேர்க்கத்தான் இம்மரங்கள் ஒன்று கூடி மிகுதியான கதிரொளியை உள்வாங்க முயல்கின்றனவோ?

முழுமதி

2. முத்தாய் முளைத்த முழுமதியம்

மோன மனவெளியில் முற்றும் தெளிந்தமுழு
ஞானம் மலர்ந்(து)உள் நளிர்வதுபோல் – வானின்
மழையெனவே தண்ணொளியை மாமலைமேல் பெய்யும்
முழுமதியம் முத்தாய் முளைத்து.

கருத்து:

எண்ணங்கள் ஓய்ந்திருக்கும் மெளன நிலையில் முற்றும் தெளிந்த முழு ஞானமானது எவ்வாறு மலர்ந்து மனத்தைக் குளிர்விக்கிறதோ, அதுபோலவே வானத்தில் ஒரு முத்தைப்போல முளைத்த முழுநிலாவானது அழகிய மலைகளின்மீது குளிர்ந்த ஒளியை மழைபோலப் பெய்கிறது.
(உள் நளிர்தல் = உள்ளம் குளிர்தல்; தண்ணொளி = குளிர்ந்த ஒளி; மதியம் = மதி = நிலவு)

மலைத்தொடர்

3. மலைத்தொடர் தந்த மலைப்பு

முடிவற்றுத் தோன்றும் முகடுகளை மொய்த்துத்
தொடுமேகம் வெண்திரையாய்ச் சூழும் – படரும்
மலைத்தொடரின் இந்த வனப்(பு)உளத்தை ஈர்த்து
வலைப்படுத்தி ஊட்டும் மலைப்பு.

கருத்து:

முடிவற்றுப் படர்ந்து உயர்ந்து தோன்றுகின்ற மலைச்சிகரங்களைத் தழுவும் மேகக் கூட்டங்கள் ஒரு வெண்மையான திரை போன்ற படலத்தை விளைவித்து அச்சிகரங்களைச் சூழ்ந்து கொள்கின்றன. இவ்வாறு விரிந்து பரவியுள்ள மலைத்தொடரின் இந்த அழகிய காட்சியானது நம் உள்ளத்தைக் கவர்ந்து இழுத்து வசப்படுத்தி ஒரு பெரிய மலைப்பையும் ஏற்படுத்தும் விதமாகத் திகழ்கிறது.
(முகடுகள் = சிகரங்கள்; வனப்பு = அழகு; உளத்தை = உள்ளத்தை)

வானமகள்

4. தான் ஒளிரக் கண்ட வானமகள்

தண்ணீரில் தோன்றும் தனதழகை வானமகள்
கண்ணாரக் கண்டு களிக்கின்றாள் – கண்ணாளன்
முற்றாத காலை முளைக்கும் இளங்கதிரோன்
பொற்றேர் வரக்காணும் போது.

கருத்து:

அதிகாலைப் பொழுதில் தோன்றும் கதிரவனான தன் காதலனின் பொன் மயமான தேர் வருகின்றது என்று அறிந்த வானமகளானவள் தண்ணீராகிய கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன்னுடைய அழகைப் பார்த்துத் தானே ரசித்துக்கொள்கிறாள்.
(முற்றாத காலை = அதி காலை; பொற்றேர் = பொன் தேர்)

வண்ணப்படமும் வெண்பாவும்

5. கடல் ஒளிர வரும் கதிர்க் கற்றை

அடர்ந்த கருமுகில்சேர் வானத்(து) அடுக்கைக்
கடந்திறங்கும் பொற்கதிரின் கற்றை – நெடுங்கடலின்
நீரலைகள் மின்ன ஒளிநிறைக்கும் நெஞ்சினிருள்
தீரவரும் பேரருள்போல் சீர்த்து.

கருத்து:

அடர்ந்து பரவியுள்ள கருமையான மேகங்களையெல்லாம் தாண்டிக் கீழே இறங்கும் சூரியனின் கதிர்கள் இருண்டிருந்த கடல்பகுதி முழுவதும் அலைகள் மின்னும்படியாக ஒளியை நிறைக்கும். அது எதைப்போன்றதென்றால், துயரமாகிய இருளால் சூழப்பட்டுக் கலங்கிய நெஞ்சத்தில் இறைவனுடைய திருவருள் என்னும் ஒளி பாய்ந்து அவ்விருளை நீக்குவதைப் போன்றதாகும்.

மர நிழல்

6. தருநிழல் மருவும் விரிகதிரோன்

கிளைத்தெழுந்து நின்ற தருநிழலின் கீழே
களைப்பொழியத் தாழ்கதிரோன் சாய்ந்தான் – கிளர்பொன்
கலந்தொளிரும் வானில் கருமுகிலும் மீனும்
பொலிந்திலகும் அந்திப் பொழுது.

கருத்து:

பொன்னை உருக்கி வார்த்தாற்போல் அழகிய வண்ணம் கலந்து ஒளிர்கின்ற வானத்தில் ஒருபக்கம் கருமேகங்களும் விண்மீன்களும் பளிச்சிட விளங்கும் அந்திப் பொழுது அது. அத்தகைய அழகிய பொன்மாலைப் பொழுதில், நாள்முழுதும் கதிர்விரித்துக் களைத்திருந்த பகலவன் வானை விட்டுக் கீழே இறங்கி ஓய்வெடுக்க நினைக்கிறான். அப்போது நன்றாகக் கிளைகளைப் பரப்பித் தழைத்து வளர்ந்திருக்கும் மரம் ஒன்றைப் பார்க்கிறான். உடனே அதன் குளிர்ந்த நிழலில் சாய்ந்து படுத்துக்கொண்டு இளைப்பாறுகிறான்.

வண்ணப்படமும் வெண்பாவும்

7. அலைத்திரளை நாடும் ஆறு

மண்ணில் நலமோங்க வாழ்ந்தாலும் சான்றோர்கள்
நண்ணரிய வீடே நயத்தல்போல் – விண்ணார்
மலைப்பிறந்தும் கேடில் வளம்புரிந்தும் ஆழி
அலைத்திரளே நாடிடுமாம் ஆறு.

கருத்து:

சான்றோர்கள் எல்லா நலங்களும் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் துறந்து நிலையான வீட்டுலகை மட்டுமே விரும்புவதைப்போல், ஆறானது உயர்ந்த மலையில் பிறந்தாலும் செல்கின்ற வழியெங்கும் வளம்பெருகும்படிச் செய்து புகழ் பெற்றாலும் அலைகடலையே நாடுகிறது.
( நண் அரிய = அடைவதற்கு அரிய; விண் ஆர் = மேகங்கள் சூழ்ந்த; கேடில் வளம் = அழிவில்லாத வளம்)

வண்ணப்படமும் வெண்பாவும்

8. ஊர்கோள் விரிக்கும் ஒளி

கார்மேகத்(து) ஊடே கலந்து கதிர்சிதற
ஏரார்பொற் றார்போல் எழுந்திடுமே – பேராழித்
தேரூர்ந்(து) அணைந்த தினகரனைச் சேர்வட்டத்(து)
ஊர்கோள் விரிக்கும் ஒளி.

கருத்து:

பெருஞ்சக்கரத்தைக் கொண்ட தேரில் எழுந்தருளித் தோன்றுகின்ற ஆதவனின் ஒளிக்கதிர்கள் கருமேகங்களில் பட்டுச் சிதறுவதால் உண்டாகும் வட்ட வடிவமான பரிவேடத்தின் ஒளியானது ஒர் ஆழகிய பொன் மலர்மாலையைப் போல அக்கதிரவனைச் சூழ்ந்து கொள்ளும்.
(ஊர்கோள் = பரிவேடம் = சூரியனைச் சூழும் ஒளிவட்டம்;  ஏர் ஆர் = அழகிய; பொற்றார் = பொன் + தார் = பொன் மாலை)
ஊர்கோள் பற்றிய கம்பராமாயணக் குறிப்புகள்:
“செங்கதிரோனொடு சேர் ஊர் சென்றனபோல்”
https://www.tamilvu.org/slet/l3700/l3700ur1.jsp?x=7881
“தேரில் திரி செங்கதிர் தங்குவது ஓர் ஊர் உற்றது எனப் பொலி ஒண் முடியான்”
https://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=71&pno=47

பொன்வசந்தம்

9. இன்பம் பொங்கும் பொன்வசந்தம்

மஞ்சள் மணிமலரும் மஞ்சார் பனிமலையும்
அஞ்சுடர்வான் நீலத்(து) அணிநிறமும் – எஞ்சலிலா
இன்பத் தெழில்நிறைக்க என்னெஞ்(சு) உருக்குமே
பொன்போல் வசந்தம் பொலிந்து.

கருத்து:

பொன்போன்ற பொலிவுடைய வசந்த காலத்தில் தோன்றும் மஞ்சள் மலர்களும் மேகங்கள் சூழ்ந்த பனிமலையும், அழகிய ஒளிவிளங்கும் வானத்தின் நீல நிறமும் குறைவற்ற இன்பத்தை நிறைத்து என் நெஞ்சத்தை உருக்கும்.

நீர்க்குழி

10. குளிர் பூங் குகை நீர்க்குழி

சீராரும் பச்சைச் செழுநீலத் தெள்ளமுதைக்
கூராரும் கோல்கொண்டு தானுறிஞ்சித் – தீராக்
களியூஞ்ச லாடும் கவின்கொடிகள் சூழும்
குளிர்பூங் குகைநீர்க் குழி.

கருத்து:

குளிர்ச்சி பொருந்திய அழகிய நிலக்குகையைக் குடைந்து அமைத்தாற்போல் நீர்க்குழியானது விளங்குகிறது. அந்தக் குழியில் சிறப்பான பைந்நீல நிறத்தில் விளங்கும் தெளிந்த அமுதம் போன்ற நீர் நிறைந்துள்ளது. அத்தகைய ஆழமான நீர்க்குழியைச் சுற்றிப் படர்ந்துள்ள அழகிய கொடிகள் நிலத்தின் மேலிருந்து கீழ்நோக்கித் தொங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அக்கொடிகள் மட்டுமல்லாமல், அங்கே குகைச்சுவரிலிருந்து கூர்மையான குச்சிகளும் கீழே நீண்டு இறங்கி நீரைத் தொடுகின்றன. அக்குச்சிகளை உறிஞ்சு குழாய்கள் போலப் பயன்படுத்திக்கொள்ளும் கொடிகள் குழிநீரைக் குடித்துக் களிப்போடு ஊஞ்சல் ஆடுகின்றன.

This Post Has 2 Comments

  1. காஞ்சிபுரம் க தங்கவேல்

    அருமை ஐயா

    1. இமயவரம்பன்

      மிக்க நன்றி, திரு. தங்கவேல்!

Leave a Reply