Vinayagar Agaval – விநாயகர் அகவல்
விநாயகர் அகவல் குறிப்பு | |
---|---|
இயற்றியவர் | ஒளவையார் |
பாவகை | நேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) |
அடிகள் | 72 அடிகள் |
விநாயகர் அகவல் – பெயர் காரணம்
‘அகவல்’ என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர். மேலும், ஓவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருக்கும் பாடலை ‘அகவற்பா’ அல்லது ஆசிரியப்பா என்று கூறுவர்.
விநாயகர் அகவல் என்னும் இந்நூல், விநாயகப் பெருமானின் அருள்வேண்டி அப்பெருமானை அழைத்துப் போற்றித் துதித்து ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட பாடல் ஆதலால், இப்பெயர் பெற்றது.
விநாயகர் அகவல் வரலாறு
சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமான் நாயனாரும் கயிலைக்குச் செல்லும்போது ஒளவையாரையும் அழைத்தனர். அவர் அப்போதுதான் விநாயகர் பூசையைச் செய்யத் தொடங்கியிருந்தபடியால், விரைவாக வழிபாட்டை முடிக்கலாயினார். அதை அறிந்த விநாயகப்பெருமான், “ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம். அவர்களுக்கு முன்னதாக நின்னைக் கயிலையில் சேர்த்துவிடுகிறேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க” என்றார். ஒளவையாரும் விநாயகரின் ஆணைப்படியே பூசையை இனிது முடித்தார். “சீதக் களப” என்று தொடங்கும் விநாயகர் அகவல் பாடி அப்பெருமானை மனம் கனிந்து துதித்துப் போற்றினார். ஒளவையின் தமிழால் உள்ளம் மகிழ்ந்த விநாயகப்பெருமானும், உலகெங்கும் வியாபித்த பேருருவை எடுத்து நின்று, ஒளவையாரைத் தம் துதிக்கையால் தூக்கிக் கயிலையில் சேர்த்தார்.
தங்கட்குமுன் கயிலாயத்தில் ஒளவையார் வந்திருப்பதைப் பார்த்த சேரமான் நாயனார், ‘அஃது எப்படி?’ என்று ஒளவையாரிடம் கேட்டபோது, இவ்வாறு பாடி விடை அளித்தார்:
முதிர நினையவல் லார்க்குஅரிதோ முகில்போல் முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே.
ஒளவையார் கணபதியிடம் கொண்ட பேரன்பையும், அந்த அன்பால் நெகிழ்ந்த விநாயகப் பெருமான் தமது துதிக்கையால் எடுத்து விட ஒளவை கயிலையை அடைந்த நிகழ்ச்சியையும், பகழிக் கூத்தர் அருளிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் இவ்வாறு போற்றுவதைக் காணலாம்:
கயிலையின் ஒருமுறை உய்த்த விதத்தினர்
– பகழிக் கூத்தர்
Vinayagar Agaval
Avvaiyar, as a great teacher of Yogic strategy, graciously composed the Vinayagar Agaval, a short poem born out of intense prayer and meditation. Vinayagar Agaval, begins with the contemplation of the Divine form of Ganesha and slowly leads us to the subtle aspects of Yoga. From this simple poem, we learn how to strengthen our body and mind, by preserving our energy for the betterment of the world. Needless to say, the Yogic truth explained by Avvaiyar will bring happiness and prosperity to those who recite the Agaval with the devoted heart.
ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
பொருள் :
களப = நறுமணமும் உடைய
செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு = செந்தாமரை போன்ற திருப்பாதத்தில் அணிந்திருக்கும் வேதச்சிலம்பு
பல இசை பாட = பல வித இசை கொண்டு ஒலி எழுப்ப
பொன் அரை ஞாணும் = இடுப்பில் அணிந்த பொன்னாலான கயிறும் (அரை = இடுப்பு, ஞாண் = நாண் = கயிறு)
பூந்துகில் ஆடையும் = அழகிய ஆடையும்
வன்ன = அழகிய
மருங்கில் = இடையில்
வளர்ந்து = விளங்கி
அழகு எறிப்ப = அழகை அள்ளி வீச
பேழை வயிறும் = உலகை அடக்கி வைத்திருக்கும் வயிறும்
பெரும்பாரக் கோடும் = வலிமை வாய்ந்த கொம்பும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
பொருள் :
விளங்கு சிந்தூரமும் = ஒளிவீசும் செம்பொட்டும்
அஞ்சு கரமும் = ஐந்தொழில் புரியும் ஐந்து திருக்கையும்
அங்குசப் பாசமும் = அங்குசமும் பாசக் கயிறும்
நெஞ்சில் குடிகொண்ட = உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும்
நீல மேனியும் = அருள்மயமான நீல நிறத் திருவுருவமும்
நான்ற வாயும் = தொங்குகின்ற வாயும்
நால் இரு புயமும் = எட்டுத் தோள்களும்
மூன்று கண்ணும் = சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களும்
மும்மதச் சுவடும் = மும்மதங்களின் அடையாளங்களும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
பொருள் :
திரண்ட முப்புரி நூல் = மூன்று பிரிவுகளை ஒன்றாகச் சேர்த்து அமைந்த பூணூல்
திகழ் ஒளி மார்பும் = அணிந்திருக்கும் ஒளி வீசும் மார்பும்
சொல் பதம் கடந்த = சொற்களால் விவரிக்க முடியாத
துரிய = ‘துரியம்’ என்று சொல்லக்கூடிய ‘உறங்கி உறங்காத’ விழிப்பு நிலையில்
மெய்ஞ்ஞான = எழுந்த உண்மையான அறிவென்னும்
அற்புதம் ஈன்ற = அற்புதத்தை அளவின்றி அருளும்
கற்பகக் களிறே = கற்பகத் தரு போன்ற வேழமுகத்தோனே!
முப்பழம் நுகரும் = மா, பலா, வாழை என்று சொல்லப்படும் மூன்று கனிகளையும் அமுது செய்யும்
மூஷிக வாகன = பெருச்சாளியை வாகனமாகக் கொண்டவனே!
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
பொருள் :
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி = அன்னையைப் போல் பேரன்புடன் என் எண்ணத்தில் நிறைந்து
மாயாப் பிறவி = மீண்டும் மீண்டும் பிறந்து மாளும் பிறவி என்னும் ஒழிவில்லாச் சுழலில் சிக்கித் தவிப்பதால் உண்டாகும்
மயக்கம் அறுத்து = அறியாமை என்னும் கலக்கம் நிறைந்த தடுமாற்றத்தைத் தடுத்து
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் = செம்மையானதும் எல்லாப் பொருள்களுக்கும் முதலானதுமான ஐந்தெழுத்து மந்திரத்தை
தெளிவாய்ப் பொருந்தவே = நான் உணர்ந்துத் தெளிவதற்காக
வந்து என் உளம் தனில் புகுந்து = என் உள்ளத்தில் புகுந்து
திருவடி வைத்துத் திரமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
பொருள் :
குவலயம் தன்னில் = இந்த உலகத்தில்
திருவடி வைத்து = அடியேன் தலையினில் திருவடி வைத்து
திரம் இது பொருள் என = நிலையான பொருள் இதுவே என
வாடா வகை = நான் வருந்தாத வண்ணம்
தான் மகிழ்ந்து எனக்கு அருளி = அகமகிழ்வுடன் எனக்கு அருள் செய்து
கோடு ஆயுதத்தால் = தமது கொம்பாகிய ஆயுதத்தால்
கொடுவினை களைந்தே = நான் முன்பு செய்திருந்த தீவினைகளின் பலன்களை முற்றும் ஒழித்து
உவட்டா உபதேசம் = தெவிட்டாத உபதேசப் பொருளை
புகட்டி = போதித்து
என் செவியில் = எனது செவிகளில்
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
பொருள் :
ஞானத் தெளிவையும் காட்டி = ஞானத்தினால் விளையும் தெளிவை அனுபவத்தில் காட்டி
ஐம்புலன் தன்னை = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களையும்
அடக்கும் உபாயம் = தீவழியில் செல்லாமல் தடுத்து ஆளும் வழியை
இன்பு உறு கருணையின் = இன்பம் அளிக்கக்கூடிய கருணையோடு
இனிது எனக்கு அருளி = இனிமையாக எனக்கு அறிவித்து
கருவிகள் = மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய அகக்கருவிகளை
ஒடுங்கும் = அசைவற்ற மெளன நிலையில் இருத்தும்படியான
கருத்தினை அறிவித்து = கருத்தையும் தெளிவித்து
இருவினை தன்னை அறுத்து = நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளையும் ஒழித்து
இருள் கடிந்து = அறியாமை என்னும் இருட்டை நீக்கி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பொருள் :
தந்து எனக்கு அருளி = எனக்குத் தந்து அருளி
மலம் ஒரு மூன்றின் = ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களினால் (அழுக்குகளால்)
மயக்கம் அறுத்தே = தோன்றும் தெளிவின்மையை நீக்கி
ஒன்பது வாயில் = கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத் துளை இரண்டு, வாய், எருவாய், கருவாய் ஆகிய உடலின் ஒன்பது துவாரங்களையும்
ஒரு மந்திரத்தால் = ஒப்பற்ற உபதேசத்தால்
ஐம்புலக் கதவை = ஐந்து புலன்கள் என்னும் கதவுகளையும்
அடைப்பதும் காட்டி = மூடுவதையும் அறிவுறுத்தி
ஆறு ஆதாரத்து = மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், விசுத்தி, அநாகதம், ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களுக்கு
அங்குச நிலையும் = மேலான நிலையையும்
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
பொருள் :
பேச்சு உரை அறுத்தே = மெளனத்தில் இருத்தி
இடை பிங்கலையின் = இடைகலை பிங்கலை என்று சொல்லப்படும் இடப்பக்க மற்றும் வடப்பக்க நாடிகளின்
எழுத்து அறிவித்து = இலக்கணத்தை அறியுமாறு செய்து
கடையில் = இறுதியில்
சுழுமுனை = சுழுமுனை என்று சொல்லப்படும் நடு நாடியோடு தொடர்புடைய
கபாலமும் காட்டி = கபாலத்தையும் காட்டி
மூன்று மண்டலத்தின் = சோம (நிலவு), சூரிய (கதிரவன்), அக்னி (நெருப்பு) ஆகிய மூன்று மண்டலங்களிலும்
முட்டிய = நிறுத்தப்பட்ட
தூணின் = தூணைப் போன்று
நான்று எழு பாம்பின் = தூங்கி எழுகின்ற பாம்பின்
நாவில் உணர்த்தி = நாவில் உணரச்செய்து
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
பொருள் :
கூடிய அசபை = பொருந்திய அசபா என்னும்
விண்டு எழு மந்திரம் = மேலே எழும் மந்திரம்
வெளிப்பட உரைத்து = வெளிபடுமாறு உபதேசித்து
மூல ஆதாரத்தின் = குண்டலினி சக்தியின் இருப்பிடமாகிய மூலாதாரத்தில்
மூண்டு எழு கனலை = அதிகரித்து எழுகின்ற மூலாக்னி என்னும் நெருப்பை
காலால் எழுப்பும் = பிராண வாயுவால் எழுப்புகின்ற
கருத்து அறிவித்தே = வழிமுறைகளைத் தெரிவித்தே
அமுத நிலையும் = அமுதமான நிலையும்
ஆதித்தன் இயக்கமும் = சூரியக்கலையானது நடைபெறும் விதமும்
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
பொருள் :
குணத்தையும் கூறி = (கலையில் தங்கிய) தன்மையையும் வெளிப்படையாகச் சொல்லி
இடைச் சக்கரத்தின் = நாபித்தானமாகிய மணிபூரகம் முதலான
ஈரெட்டு நிலையும் = பதினாறு கலைகளின் நிலையும்
உடல் சக்கரத்தின் = உடம்பிலுள்ள சக்கரங்களின்
உறுப்பையும் காட்டி = உறுப்புகளையும் தெரிவித்து
சண்முக தூலமும் = ஆறு வகைப்பட்ட தூலங்களும்
சதுர்முக சூக்கமும் = நான்கு வகை சூக்குமங்களும்
எண்முகமாக = தியானத்தின் மூலமாக
இனிது எனக்கு அருளி = நான் இன்புறுமாறு அருளி
விளக்கவுரை:
தாமரை மலரின் நாயகனாகச் சூரியனைக் குறிப்பிடுவதுபோல, குமுத (ஆம்பல்) மலரின் காதலான நிலவினைச் சொல்வது மரபு.
அம்புயம் செய் தீங்கு எதுவோ வெண்ணிலாவே
(ஆம்பல் = குமுதம், அம்புயம் = தாமரை)
என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இனிமையான பாடல் குமுதத்தின் காதலனாகவே சந்திரனைப் பார்க்கிறது. ‘குமுத நாதன் கங்குல் வரக் கண்டும்’ என்னும் ‘தனிப்பாடல் திரட்டு’ம் திங்களைக் குமுதத்தின் நாதனாகக் கருதுகிறது.
ஆனால், அறிவியல்பூர்வமாகப் பார்ப்போமானால் குமுதத்தின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாளராக – ஆதரவாளராக – நண்பராக (சகாயராக) சந்திரன் திகழ்வதுதான் உண்மை. இதனை நன்கு உணர்ந்த ஒளவையார், சந்திரனை ‘குமுத நாதன்’ என்றோ ‘குமுத நாயகன்’ என்றோ குறிப்பிடாமல் ‘குமுத சகாயன்’ என்றே அழைக்கின்றார்.
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
பொருள் :
புலப்பட எனக்கு = புலப்படுமாறு அடியேனுக்கு
தெரி எட்டு நிலையும் = ஆராய்ந்த எட்டு நிலைகளையும்
தெரிசனப் படுத்தி = அறியச் செய்து
கருத்தினில் = மனத்தினில்
கபால வாயில் காட்டி = ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான கபால வாசலைக் காட்டி
இருத்தி = சமாதியில் இருத்தி
முத்தி = வீடுபேற்றை
இனிது எனக்கு அருளி = இனிமையாக எனக்கு அருளி
என்னை அறிவித்து = என் உண்மை நிலையான ஆன்மாவை அறியச் செய்து
எனக்கு அருள் செய்து = என்னிடம் கருணை கூர்ந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
பொருள் :
முதலைக் களைந்து = வேரோடு சாய்த்து
வாக்கும் மனமும் இல்லா = பேச்சும் எண்ணமும் இல்லாத
மனோலயம் = மனம் செயலற்று ஒடுங்கும் நிலையில்
தேக்கியே = நிறைந்து
என்றன் சிந்தை தெளிவித்து = என் மனத்தில் தெளிவேற்றி
இருள்வெளி இரண்டுக்கு = அறியாமையாகிய இருளுக்கும் அறிவாகிய வெளிச்சத்திற்கும்
ஒன்றிடம் என்ன = பிறப்பிடம் ஒன்றே என்று உணரும்படியாக
அருள்தரும் ஆனந்தத்து = திருவருள் தருகின்ற பேரானந்த வெள்ளத்தில்
அழுத்தி = என்னை மூழ்கச்செய்து
என் செவியில் = எனது காதுகளில்
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
பொருள் :
ஆனந்தம் அளித்து = முக்தி இன்பம் அளித்து
அல்லல் களைந்தே = துன்பங்களை விலக்கி
அருள்வழி காட்டி = திருவருள் மார்க்கத்தைத் தெரியப்படுத்தி
சத்தத்தின் உள்ளே = புருவ மத்தியில்
சதாசிவம் காட்டி = சதாசிவத்தை தியானிக்கும் முறையைக் காட்டி
சித்தத்தின் உள்ளே = மனத்தினில்
சிவலிங்கம் காட்டி = சிவலிங்கத்தை பூசிக்கும் முறையையும் உபதேசித்து
அணுவிற்கு அணுவாய் = அணுக்களுக்குள் அணுக்களாய்
அப்பாலுக்கு அப்பாலாய் = எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலையையும்
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
பொருள் :
கரும்பு உள்ளே காட்டி = பரம்பொருளாகிய கரும்பின் சுவை ஆன்மாவில் கலந்து நின்ற நிலையையும் உணர்த்தி
கூடும் மெய்த்தொண்டர் = இறைவனுடன் இரண்டறக் கலந்து மெய்மறக்கும் உண்மையான தொண்டர்
குழாத்துடன் கூட்டி = கூட்டத்தில் அடியேனையும் சேர்த்து
அஞ்சு அக்கரத்தின் = பஞ்ச அக்ஷரத்தின் (ஐந்தெழுத்தின்)
அரும்பொருள் தன்னை = அரிய பொருளை
நெஞ்சக் கருத்தின் = மனத்தினில்
நிலை அறிவித்து = நிலையாகத் தெளிவுபெறச் செய்து
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
பொருள் :
எனை = அறிவிலியாகிய என்னை
ஆண்ட = பிறவிக் கடலில் விழாதபடி ஆட்கொண்ட
வித்தக விநாயக = ஞான வடிவாகிய விநாயகனே!
விரைகழல் = உன் மணம்பொருந்திய மலரடிகளை
சரணே = எனக்குப் புகலிடமாக அடைந்துத் தொழுகின்றேன்.
I was reading this without knowing the meaning. Now I understood the meaning. Your explanation was really useful.
Thank you very much for your kind comment appreciating my work!
பொருளைத் தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி நண்பரே
விளக்க உரை நன்றாக உள்ளது. எட்டு சரீரம் போன்ற மறைந்திருக்கும் பொருள்களுக்கு மூலங்களையும் குறிப்பிட்டால் விரிவாக அறிந்து கொள்ள உதவும். நன்றி.
Thank you very much
I was reading this without knowing the meaning. Now I understood the meaning. Your explanation was really useful
thankyou very much
விளக்க உரை நன்றாக உள்ளது. எட்டு சரீரம் போன்ற மறைந்திருக்கும் பொருள்களுக்கு மூலங்களையும் குறிப்பிட்டால் விரிவாக அறிந்து கொள்ள உதவும். நன்றி.