கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் பக்திப் பாடல்கள்

விநாயகர் பக்திப் பாடல்கள்

கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் பக்திப் பாடல்கள்

கவிதை : இமயவரம்பன்

பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா

Sri Ganapathi Panchagam – Vinayagar Thuthi

1.
கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்
கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்
கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்
கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங் கவியெழுமே.

பொருள்:

கணபதியின் கழல் = விநாயகரின் சிலம்புகள் அணிந்த திருவடிகளை
பணிய = வணங்கித் தொழுதால்
கடு வினைகள் = கொடிய வினைகளின் பயன்கள்
கழன்று ஒழியும் = நம்மை வருத்தாமல் விட்டு அகலும்;
அருள் நினைய = விநாயகரின் திருவருளின் மகிமையை எண்ணித் துதிக்கும்போது
கமலம் என = தாமரையைப் போல
மனம் விரியும் = நம் மனம் மலரும்;
புகழ் = கணேசரின் திருப்புகழானது
செவியில் = நம் செவிகளில்
கலந்திட = நிறைந்திடும் போது
உள் = மனம்
குழைந்து உருகும் = நெகிழ்ந்து உருகும்;
பெயர் மொழிய = கணநாதரின் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல
கனிவுறும் = இனிமை மிகுந்ததாகவும்
செம் = சீராகவும் விளங்கும்
கவி = கவிதைகள்
எழும் = கணேசரின் திருவருளால் நமக்குள்ளிலிருந்து தாமாகவே உருவாகும்.
2.
அலமருமென் உளம்தெளிய அருள்பொழியும் அணிமுகிலாம் 
நலமிகுகற் பகமலராம் நவநிதியத் தொருகுவையாம் 
கலிநலிய வருகதிராம் களிதருமுத் தமிழமுதாம் 
கலைநிலவின் குளிரொளியாம் கணபதியின் கழல்நிழலே. 

பொருள்:

கணபதியின் கழல் = ஶ்ரீ விநாயகரின் சிலம்பு அணிந்த திருவடிகளின்
நிழல் = குளிர்ந்த நிழலானது –
அலமரும் = கவலைச் சுழலில் கிடந்து தவிக்கின்ற
என் உளம் = எனது மனம்
தெளிய = தெளிவடையுமாறு
அருள் பொழியும் = திருவருளைப் பொழியும்
அணி = அழகிய
முகிலாம் = மேகமாக விளங்கும்;
நலமிகு = என்றும் வாடாமல் நலமிக்க
கற்பக மலராம் = கற்பகமரத்தின் மலர் போல மனம் எங்கும் மணம் பரப்பும்;
நவ = ஒன்பது விதமான
நிதியத்தின் = செல்வங்களின்
ஒரு குவையாம் = கொள்ளக்குறையாத குவியல் போன்ற நிறைவைத் தரும்;
கலி = துன்பங்கள் ஆகிய இருள் எல்லாம்
நலிய = அழிந்து ஒழியுமாறு
வரு கதிராம் = சூரியனைப் போல உதிக்கும்;
களி தரு = இன்பத்தைத் தருகின்ற
முத்தமிழ் = இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழாகிய
அமுதாம் = அமுதத்தைப் போன்றது;
கலை நிலவின் = கலைகளாகிய பருவங்கள் விளங்கும் நிலவின்
குளிர் ஒளியாம் = குளிர்ச்சி பொருந்திய ஒளியை வீசிப் பக்தர்களின் மனத்தில் துயர் என்னும் வெம்மையைப் போக்கி அருளும்.
3.
இயற்றரிய திருக்கதையை இயம்பிடுநான் மறைமுனிவற்(கு)
எயிற்றினையன் றெடுத்தெழுதி இரும்பனுவல் அளித்தருள்வான்
நயத்தகுநுண் நுழைபுலனும் நவையறுநன் மனநிறையும்
வியத்தகுசெங் கலையறிவும் விரைந்தருளும் கணபதியே.

பொருள்:

நயத்தகு = பக்தர்கள் வேண்டுகின்ற
நுண் = நுண்மையான
நுழைபுலனும் = ஆழ்ந்த அறிவையையும்,
நவை அறு = குற்றம் குறைகள் நீங்கிய
மன நிறைவும் = மன நிறைவையும்,
வியத்தகு = வியக்கத் தக்க
கலை அறிவும் = கலைகளில் தேர்ச்சியையும்
விரைந்து = உடனே
அருளும் = அருள்கின்ற
கணபதியே = ஶ்ரீ கணேசப் பெருமான்
அன்று = பண்டொருநாள்
இயற்று அரிய = யாரும் இயற்றுவதற்கு அரிய
திருக்கதையை = புனிதமான காப்பியமான மகாபாரதத்தை
இயம்பிடும் = வாய்மொழியாகச் சொன்ன
நால் மறை முனிவற்கு = வேத வியாசருக்காக
எயிற்றினை = தமது தந்தங்களில் ஒன்றை
எடுத்து = ஒடித்து எடுத்து
எழுதி = அம்முனிவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதி
இரும்பனுவல் = ஒரு மிகப்பெரிய நூலாக
அளித்து அருள்வான் = அமையுமாறு அருளினார்.
4.
அனற்படுமோர் புழுவெனவே அழன்றுழலா திமைப்பொழுதும்
இனித்தமுறக் கணபதியின் நினைப்பொழியா திருமனமே,
அனைத்துலகும் வயிற்றொடுங்க அணிமணியோ டெயிறிலங்கத்
தனிப்பெருநல் லருணடஞ்செய் தளிரடிகள் நமக்கரணே.

பொருள்:

மனமே = என் மனமே!
அனைத்து உலகும் = எல்லா உலகங்களும்
வயிற்று ஒடுங்க = தம் திருவயிற்றில் அடங்கி இருக்க,
அணி மணியோடு = அழகிய மணிகளுடன்
எயிறு = தந்தமும்
இலங்க = ஒளி வீசித் திகழுமாறு
தனிப்பெரும் = தனிப்பெருமை வாய்ந்த
நல் அருள் = நலம் அருள்கின்ற
நடம் செய் = நர்த்தனத்தைப் புரிகின்ற
தளிர் அடிகள் = (விநாயகரின்) மென்மை பொருந்திய திருவடிகள்
நமக்கு அரணே = நமக்குக் காப்பாக இருப்பதால்,
அனல் படும் = நெருப்பினில் பட்ட
ஓர் புழு எனவே = ஒரு புழுவைப் போல
அழன்று = துன்பத்தால் தவிதவித்து
உழலாது = சுழல்வதைத் தவிர்த்து,
இமைப்பொழுதும் = நொடிப்பொழுதும்
கணபதியின் நினைப்பு ஒழியாது = ஶ்ரீ கணேசரின் மகிமையை நினைப்பதை நிறுத்தாமல்
இனித்தமுற = அவரது திருவருளின் இனிமையில் லயித்து
இரு = இருப்பாயாக!
5.
எழிலொழுகும் தடவிழியும் தழைந்தசையும் இருசெவியும்
புழையுறுகைக் கயமுகமும் பொழிகருணை மழைமதமும்
செழுமலரின் விரைகமழும் திருவடியும் திகழ்வுறுமோர்
பழமறையின் அருளுருவைக் கணபதியைப் பணிமனமே.

பொருள்:

மனமே = என் மனமே!
எழில் ஒழுகும் = அழகு விளங்கும்
தட விழியும் = படர்ந்த விழிகளும்
தழைந்து = நீண்டு தொங்கியவாறு
அசையும் = அசைகின்ற
இருசெவியும் = இரண்டு திருச்செவிகளும்
புழை உறு கை = துளைகள் கொண்ட துதிக்கை உடைய
கய முகமும் = யானையின் திருமுகமும்
கருணை மழை = கருணை மழையை
பொழி மதமும் = பொழிகின்ற மதத்தையும்
செழு மலரின் = செழுமை மிக்க மலர்களின்
விரை கமழும் = வாசனை எழும்பும்
திருவடியும் = திருவடிகளும்
திகழ்வு உறும் = விளங்குகின்ற
ஓர் = தனிச்சிறப்பு வாய்ந்த
பழ மறையின் = பழமையான வேதங்களின்
அருள் உருவை = அருள்வடிவமாகத் திகழ்பவரை
கணபதியை = ஶ்ரீ கணேசரை
பணி = பணிந்து வணங்குவாயாக!

தரவு கொச்சகக் கலிப்பா – இலக்கண விளக்கம்

“தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளால் ஆனது. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இருக்கும். இந்த வகைக் கலிப்பா மாச்சீர், விளச்சீர் என்று ஈரசையுடனும் காய்ச்சீராக மூவசையுடனும் வரலாம். முழுதும் மூவசைச் சீர்களாகவும் வரலாம். ஈரசைச் சீர் வரும்போது மாச்சீருக்கு முன் நிரை வரும். மற்றவை எப்படி வேண்டுமானாலும் வரலாம். ” – கி.வா.ஜ (கவி பாடலாம்)

மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின்படி, ‘கணபதி பஞ்சகத்தின்’ ஒவ்வொரு பாடலும் நான்கு சீர்கள் கொண்ட நான்கு அடிகளால் அமைந்துள்ளது. ஒவ்வொரு சீரும் மூவசைகளால் அமையப்பெற்றுக் ‘கருவிளங்காய்’ என்னும் வாய்பாட்டைக் கொண்டிருப்பது இப்பஞ்சகத்தின் சிறப்பு. எடுத்துக்காட்டாக முதல் பாடலைப் பார்த்தால், ‘கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்‘ என்று சொல்லும்போது ‘கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்’ என்ற அமைப்பில் இருப்பது விளங்கும். இதேபோல், மற்ற மூன்று அடிகளும் இவ்வாய்பாட்டிலே சீர்கள் அமையப்பெற்று இருப்பதையும் காணலாம்.

Keywords : #விநாயகர் ஸ்தோத்திரம் #விநாயகர் துதி #விநாயகர் பாடல் #கணபதி ஸ்தோத்திரம் #கணபதி பஞ்சகம்

Leave a Reply