வையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்

ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய ‘When in disgrace’ (Sonnet 29) என்னும் கவிதையின் தமிழாக்கம்.

வையத் தலைமையும் வேண்டேன் 

(சிந்துப்பாடல் – ஆனந்தக் களிப்பு மெட்டு)
தாழ்வுற்(று) உளம்தான் தளர்ந்தேன் – ஒரு
    தகவற்(று) இழிவுறத் தான்வீழ்ந்(து) உழந்தேன்
ஊழ்வினை தன்னைப் பழித்தேன் – வீணில்
    உள்ளத்(து) அரற்றலைத் தெய்வத்(து) உரைத்தேன்.

உறுதியும் உள்ளப் பொலிவும் – என்றும்
    உடன்நிற்கும் தோழமை ஊட்டும் வலிவும்
திறனுமிக் கார்தமை ஒத்தேன் – எனும்
    சிறப்பினை எய்தப் பெருவிருப் புற்றேன்.

நிறைவிலா நெஞ்சுற்ற அந்நாள் – மன
    நிலைகெட்டு நொந்து மெலிவுற்ற அந்நாள்
குறையெலாம் மாய்த்திடும் மாதே! – உனைக்
    குலவு நினைவொன்(று) உதித்த(து)அப் போதே.

இருள்சூழ் நிலத்தின் எழுந்தே – நல்ல
    இசையினைத் தெய்வத்(து) இருப்பில் பொழிந்தே
விரிவான் உறும்குயில் போலே – இன்ப
    விடியலில் பாடுமென் நெஞ்சம்உன் னாலே!

என்னருஞ் செல்வமாய் ஓங்கும் – உனை
    எண்ணத்(து) இருத்திட நெஞ்சினில் தேங்கும்
வன்பிலா அன்பெனும் தீந்தேன் – அன்றி
  வையத் தலைமையே வாய்க்கினும் வேண்டேன்.

English Original : Sonnet 29 [When in disgrace] by William Shakespeare

When in disgrace with fortune and men’s eyes
I all alone beweep my outcast state,
And trouble deaf heaven with my bootless cries,
And look upon myself, and curse my fate,
Wishing me like to one more rich in hope,
Featured like him, like him with friends possessed,
Desiring this man’s art, and that man’s scope,
With what I most enjoy contented least;
Yet in these thoughts my self almost despising,
Haply I think on thee, and then my state,
Like to the lark at break of day arising
From sullen earth, sings hymns at heaven’s gate;
For thy sweet love remembered such wealth brings
That then I scorn to change my state with kings.
– William Shakespeare

Leave a Reply